KK- 16 -3

அதுவரை அவர்களுள் ஒருத்தியாக இருந்த நிவேதாவால் அது முடியவில்லை. சினேகிதிகளோடு முகம் பார்த்துக் கதைக்க முடியாதளவுக்கு மனத்துள் கோபம் , வருத்தம். அதோடு சேந்தன் காட்டும் இறுக்கம் வேறு எரிச்சலைக் கிளப்பியது.
“பிள்ளைகளிட சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் நிவி. அவேயும் நல்லது கெட்டது தெரியாதவே இல்ல. உமக்கும் அது நல்லாவே தெரியும்.” என்று, மகன் பக்கம் சாய்ந்துவிட்டாரோ என எண்ண வைத்த கணவர் கூட எரிச்சலை உருவாக்கியிருந்தார்.
‘எல்லாம் ஆருக்காக, ரெண்டு நாள்கள் கூட பழகியிராதவளுக்காக.’ அவரையும் மீறியே கவினியில் கோபமும் எரிச்சலும் வளர்ந்தது. மூச்சு முட்டிப் போனார், நிவேதா. மதியம் வரைப் பொறுத்தவரால் அதற்கு மேல் முடியவில்லை.
“ரிசப்சனுக்கு வருவம் யோகன் அண்ணா.” என்று சொல்லிவிட்டு, மட்டக்களப்பில் உள்ள தன் கணவனின் ஒன்றுவிட்ட சகோதரி வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டுவிட்டார்.
அவர்கள் வீட்டில் சென்று தங்குவது இவர்கள் பயணத் திட்டத்திலேயே இல்லை. தாயின் மனநிலை கருதி மறுவார்த்தை கதைக்காது புறப்பட்டாள்,இயல்.
“நான் வரேல்ல, போயிட்டு வாங்க” என்றுவிட்டான், சேந்தன். இயல் விடவில்லை, இழுத்துக்கொண்டு சென்றிருந்தாள்.
அப்போதும் கவினிட்ட போனால் என்ன என்று அவனுள் ஒரு யோசனை. தன் நேசத்துக்குப் பதில் வாங்கிடும் ஆவல். ஒருதலைக் காதலில் வீழ்ந்து விட்ட பாவனையில் கதைப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே! அவளுக்குச் செய்தி அனுப்பினான். பதில்தான் வராதே! இனிதனிடம் அவள் விலாசம் கேட்டான்.
இவனை என்ன செய்யலாம்? சட்டென்று எரிச்சல் தோன்ற கூர்மையாகப் பார்த்தான், இனிதன்.
“இங்க இருக்கிற நிலை, உங்கட அம்மாட மனநிலை எல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும் சேந்தன். அப்பிடியிருக்க என்ன நீங்க…” என்று ஆரம்பித்தவன், இப்ப என்ன சொல்ல வருகிறாய் என்ற வகையில், சேந்தன் முகம் இறுகவும் நிதானித்தான்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க என்டுறன். முதல் சாரலிட ரிசப்சன் முடியட்டும். இன்னும் மூண்டு நாள்களில கவினி இங்க வந்திருவாள். அதுக்குப் பிறகு கதைக்கலாம்.” என்றபடி, அவன் தோளில் அன்போடு தட்டிக்கொடுத்தான் .
“நீங்களும் கவினியும் கலியாணம் செய்துகொண்டால் அதைவிட எங்களுக்கு வேற என்ன சந்தோசம் இருக்கேலும் சேந்தன்? ஆனா…இதால பிரச்சினைகள் வரக்கூடாது. கவினியே அதை விரும்ப மாட்டாள். அதனாலதான் சொன்னனான்.” சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
ரிசப்சனுக்கு முதல் நாள் மாலை தான் கவினி கொழும்புக்கு வந்தாள். நேரே இனிதனுடைய சித்தப்பா வீட்டில் சென்றிறங்கினாள். யாழ்ப்பாணத்திலிருந்து இனிதனின் பெற்றோர், சகோதரன் குடும்பமும் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் பிள்ளைகளோடு அளவளாவிவிட்டு குளித்துவிட்டு வந்தாள்.
இனிதனின் சித்தி, சுடச் சுட தேநீரும் கடலை வடையும் பரிமாறினார்.
ஒரு வடையை உண்டுவிட்டு தேனீரில் இரண்டு மிடறு குடித்திருப்பாள், இரும்புக் கதவைக் கிரீச்சென்று திறந்துகொண்டு உள்ளிட்டிருந்தார், மதிவதனி. வியர்க்க விறுவிறுக்க வந்தவரைப் பார்த்ததும் எழுந்துவிட்டாள், கவினி.
பரிசிகெடப்போறாள். ரஞ்சனின் மனைவி, இனிதனின் சித்தி வேறு இருக்கிறார்கள். நல்லவேளை சித்தியின் மகனும் மகளும் மருமகனும் வேலைக்குச் சென்றிருந்தார்கள்.
“வாங்க மதிவதனி” என்று, சித்திதான் வரவேற்றார்.
வலிந்து சிரித்தவர் அங்கிருந்த பரமேஸ்வரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு விசுக்கென்று கவினியிடம் திரும்பினார்.
“அவளுக்கு ஒண்ணும் தெரியாது அத்த. சேந்தன் தன்ர விருப்பத்தை உங்கள்களிட்டச் சொல்லி இருக்கிறார். இவளிட்ட அவர் ஒண்ணுமே கதைக்கேல்ல. என்ன கதைக்கிறது எண்டாலும் சேந்தனிட்டையே…” தாமதியாது இடையிட்டிருந்தான், இனிதன்.
“இது நம்பிற மாதிரி இல்லையே தம்பி. இவளோட கதைக்காமலா அந்தளவுக்கு ஒரே பிடியா அந்தப் பெடி நிக்குது?” பார்வையால் மகளை எரித்துக்கொண்டே கேட்டார், மதிவதனி.
“இதான் உண்மை அத்த. மாமா வரேல்லையா?” கதையை மாற்றப் பார்த்தான், அவன்.
மதிவதனி பதில் சொல்லவில்லை. மகள் முன்னால் சென்று நின்று கொண்டவர் பார்த்த பார்வை, அவள் இதய ஆழம் சென்று துளாவி அலசி ஆராய்ந்தது.
கவினி, சற்றே நெளிந்தாலும் சுதாகரித்துக்கொண்டாள்.
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு? ஏன் இப்பிடி முறைக்கிறீங்க. இங்க பாருங்க, உண்மையாவே எனக்கும் இங்க நடக்கிற எந்த விசயத்துக்கும் தொடர்பில்ல. நான் முதலே சொல்லி இருக்கிறன், உங்கட சினேகிதிகளிட பிள்ளைளோட நானா வலியப் போய்க் கதைச்சது கூட இல்ல. அப்பிடியிருக்க…” ராங்கியாகச் சொன்னவள் முகத்தில் குத்த வேண்டும் போலிருந்தது, மதிவதனிக்கு.
“அவே உன்னோட கதைச்சதோ நீ அவேயோட கதைச்சதோ இல்ல இப்பப் பிரச்சினை. அந்தக் குடும்பத்தில என்ர மகளக் கட்டிக் குடுத்திருக்கிறம். நீ ஆடுற விசர்க்கூத்தால அவள் பாதிக்கக் கூடாது!” விரல் நீட்டி, அடிக்குரலில் நெருப்பென வார்த்தைகளை விட்டார், மதிவதனி.

error: Alert: Content selection is disabled!!