KK- 17 -1

ஆதவன், சாரல் திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வந்திருந்த நட்புகள், உறவுகள் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்கும் படி, முகத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்,நிவேதா. அதிலும் சேந்தனின் திருமணம் எப்போதென்ற கதை கூட வந்ததா! ஆதினியைப் பார்த்திருந்ததும் கசிந்திருக்க, எரிச்சலிலும் கோபத்திலும் அசையாது அமர்ந்திருந்தார்.
மற்றவர்கள் மகிழ்வோடுதான் இருந்தார்கள். கல்யாணப் பொம்பளையின் அன்னையாக உறவுகளோடு கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாலும் மதிவதனி பார்வை கவினியில் தான். அதுவும் சேந்தன் பார்வை விடாது அவளைத் தொடர்வதைக் கண்டபிறகு அவரால் இயல்பாக இருக்கவியலவில்லை.
தப்பித் தவறியும் சேந்தனைப் பிடித்திருக்கு என்று, அவள் சொல்லிவிடக் கூடாதே என்ற பதைப்பதைப்போடுதான் அவளைக் காணச் சென்றிருந்தார். அவள் முன்னால் வைத்தே சேந்தன் கதைத்தவற்றுக்கும் அவளுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று இனிதன் கூறிவிட்டானே!
அதில் நிம்மதியுற்றவர், இனிமேலும் அப்படியான நினைவுகள் வராதிருக்கட்டும் என்றுதான் கண்டிப்போடு கதைத்தார். அவள் ஏட்டிக்குப் போட்டியாகத் திமிராகக் கதைப்பது அவருக்குப் புதிதில்லை. இருந்தபோதும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னையும் மீறியே அறைந்துவிட்டார். அப்போதும் அவள் வீம்புக்குத்தான் சொன்னாள் என்ற தெளிவில் தான் நிம்மதி மூச்சு விட்டார்.
கணவரிடமிருந்து ஒரு சண்டையை எதிர்பார்த்தவர் அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. விமலாவோடு திரிந்தார். பூங்குன்றனோ, மனைவியோடு கதைக்கவே இல்லை. ஏன் ஏறிட்டுப் பார்க்கவே இல்லை. யோகனோடு கூட அளந்து கதைத்ததோடு நிறுத்திவிட்டார். எப்போது வரவேற்பு முடியும் இங்கிருந்து புறப்படலாம் என்றிருந்தார்.
நடந்தவை எதுவும் சாரல், ஆதவனுக்குத் தெரியாது.
இப்படியிருக்க, இன்று பரமேஸ்வரி ஆட்களோடுதான் கவினியும் வந்திருந்தாள்.
“என்னடி விசிட்டர் போல இப்ப வாற? கோல் பண்ண பண்ண இந்தா வாறன் எண்டு சொல்லி சொல்லியே நேரத்தக் கடத்திட்ட என்ன? எங்களோட வந்து நில் எண்டு சொன்னதையும் கேட்கேல்ல.” கண்டதும் சாரல் இப்படித்தான் கேட்டாள்.
சகோதரி பதில் சொல்ல முதல், “ஏன் ஒரு மாதிரி இருக்கிற? வருத்தம் ஏதுமா?” ஒப்பனைப் பெண்ணிடம் தலையைக் கொடுத்துவிட்டு இருந்தவள் விசாரித்தாள்.
“அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லையக்கா, இந்த முறை சரியான வேலை. நல்லாக் களைச்சிப் போனன்.” சகோதரியின் முதல் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை, அவள்.
“ஓ சரி, ஷோர்ட் ஈட்ஸ் எடுத்துச் சாப்பிடு!” என்ற சாரல், தங்கை, தங்களோடு தங்காததும் நல்லதுதான் என்றே எண்ணினாள். இல்லையோ, கணவன் வீட்டினர் முன்னால் வைத்துத் தாயும் மகளுமாக முகத்தை நீட்டிக்கொண்டு நின்று, தர்க்கம் செய்து என்று அவளைக் குன்ற வைத்து விடுவார்களே!
வாணன் உட்பட ஏழெட்டு நண்பர்கள் வந்திருக்க, அவர்களோடு தான் கவினி அமர்ந்திருந்தாள். சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தாலும், அவளில் இருந்த சோர்வு சேந்தனைத் தாக்கிற்று. அவளின் உயிர்ப்பில்லாதிருந்த விழிகள் அவனை இயல்பாக இருக்கவிடவில்லை. அவள் கொழும்பு வந்துவிட்டாள் என்று இனிதன் மூலம் அறிந்த கணத்திலிருந்தே அவன் அவனாக இல்லை.
உடனே சந்திக்க எண்ணி அழைத்திருந்தான். வழமைபோல அவள் ஏற்கவில்லை. இனிதனுக்கு அழைத்தான். அப்போதுதான் மதிவதனி சென்று பிரச்சினை பண்ணியது தெரிய வந்திருந்தது.
“உங்கட விருப்பத்தச் சொன்னதுக்கு அவளுக்குப் பிடிச்சிருந்தா பட்டெண்டு பதில் சொல்லியிருப்பாள், சேந்தன். அதான் அவளிட சுபாவம். அதைவிட நான் தனிப்படவும் கேட்டனான். மாமி வந்து பிரச்சினை பண்ணிற்றுப் போன கையோட, உனக்குப் பிடிச்சிருந்தா சொல்லு, கலியாணம் செய்து வைக்க நான் தயார் எண்டு மாமாவும் கேட்டவர். அவள் என்னட்டச் சொன்ன பதிலைத்தான் அப்பவும் சொன்னவள்.” என்று இனிதன் சொல்ல, சேந்தன் முகம் கறுத்திட்டு.
“உண்மையாவே தன்ர மனசில அப்படி எந்த எண்ணமும் இல்ல எண்டவள். முதல், உங்களுக்கு ஆதினியைப் பாக்கினம் எண்டு தெரிஞ்ச பிறகும் தான் எப்பிடி விரும்புவன் எண்டும் கேட்டவள். இதுக்கும் பிறகு என்ன சேந்தன்? தயவு செய்து இந்த எண்ணத்த விட்டிருங்க!” இனிதன், கெஞ்சலாகச் சொன்னது போயிருந்தாலும் அதில் கட்டளை இருந்தது.
சேந்தனை வாய்திறக்க விடாது சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட எண்ணித் தொடர்ந்தான், அவன்.
“சும்மாவே அவளுக்கு வீட்டில கன பிரச்சினைகள். நிம்மதி இல்லை. அதில இதும் சேர்ந்து. அவள் பாவம் சேந்தன், ப்ளீஸ், இந்தக் கதையை விட்டிருங்க!” ப்ளீஸ் போட்டாலும் இப்போது அவன் குரலில் கண்டிப்பு இருந்தது.
அதைச் சேந்தனும் உணர்ந்து கொண்டான். “ஓ!” என்ற ஒற்றைச் சொல்லோடு முகம் இறுக அழைப்பைத் துண்டித்திருந்தாலும் மனம், தான் கொண்ட விருப்பிலிருந்து சற்றுமே விலகவில்லை.
இங்கு எப்போது வருவாள் என்று காத்திருந்தான்.

error: Alert: Content selection is disabled!!