கவினி எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, “அக்கா என்னடி இங்க நிண்டு செய்யிற?” என்ற குரல் நடப்புக்கு இழுத்து வந்திருந்தது. ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த அவளது சித்தியின் மகள்தான் காதில் கிசுகிசுத்திருந்தாள். முன்னால் நின்றவனை மென்முறுவலோடு பார்த்தபடி நெற்றியை ஏற்றியிறக்கினாள், வந்தவள்.
“நீ போ, இந்தா வாறன்.” அவளைப் பிடித்து நகர்த்தி விட்டுவிட்டு, நிதானத்தோடு சேந்தனைப் பார்த்தவள் முழுவதுமாய்ச் சுதாகரித்திருந்தாள்.
“உங்கட கோல்கள், மெசுஜுகளுக்கு பதில் போடேல்ல எண்டதில இருந்தே விளங்கி இருக்கும் எண்டு நினைச்சன் சேந்தன்.” கைகளைக் கட்டி நிமிர்வாக நின்றுகொண்டு நிதானமாகப் பார்த்துக் கதைத்தவளை இமைக்காது பார்த்து நின்றான், அவன். இந்த நிமிர்வும் நிதானமும் தானே அவனைக் கவர்ந்ததே!
“ இயலோடயும் உங்களோடயும் கதைச்சுப் பேசக் கிடைச்சதில உண்மையாவே எனக்கு நல்ல சந்தோசம். ஏனெண்டா, நான் அதை எதிர்பார்த்திருக்கேல்ல. காரணம், நீங்க என்ர அம்மாட சினேகிதிட பிள்ளைகள் எண்டது தான்.” நக்கலாகச் சொல்லி நிறுத்தினாள்.
அந்நேரம் அவள் உதட்டோரம் சிறு சிரிப்பில் வளைந்தது கூட அத்தனை கம்பீரமாக இருந்தது. சேந்தன் பார்வை அச் சிறு சிரிப்பில் சிக்குப்பட்டு நிண்டது. செருமினாள், கவினி. பட்டென்று சுத்தகரித்தவன் முகத்தில் கேள்வியோடு, “ஓ!” என்று வைத்தான்.
“என்ன ஓ?” என்றவளை, என்னை நீ வெருட்டுகிறாயா என்ன? என்கிற பார்வை பார்த்தவன் முகத்தில் முறுவல் விரிந்தது. அதைச் சற்றும் ரசிக்கவில்லை, அவள்.
“இஞ்ச பாருங்க, சாதாரணமா நட்பாப் பழக்கிறதிலயே நம்மளுக்க பிரச்சினை இருக்கு. அப்பிடியிருக்க இதெல்லாம் கடைசிவரை சரிப்பட்டு வராது! எல்லாத்தையும் விட, உண்மையா எனக்கு அப்பிடியெல்லாம் எந்த எண்ணமும் இல்ல.” ஒருமாதிரி அசட்டையாகச் சிரித்தாள்.
அவளுள் இருந்த வேதனையை மறைக்க நினைத்தாள் போலும். அது, அந்தச் சிரிப்பின் பின்னால் நெரிந்து கிடந்ததை இவனால் உணர முடிந்ததே!
விளையாட்டை விடுத்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி நின்றான், சேந்தான்.
“உங்கட அம்மாவுக்கு என்னக் கண்டாப் பிடிக்கவே பிடிக்காது சேந்தன். அது நிச்சயம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். உண்மையா எனக்கு அதில எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெண்டா பெத்த தாய்க்கே என்னைப் பிடிக்காது. அத விடுவம்.” கசப்போடு தான் சொன்னாள்.
‘அதை விடு எண்டுதான் நானும் சொல்லுறன். எங்களப் பற்றிக் கதைப்பம்’ என்று, அவன் மனம் சொன்னது வெளியில் வரவில்லை. அசையாது நின்றிருந்தான், அவன்.
“இப்பிடியிருக்க, அண்டைக்கு என்ர அப்பா செய்த அதே விசயத்த இண்டைக்கு நீங்க செய்யப் பார்க்கிறீங்க. ஒருவேள நான் உங்கள விரும்பியே இருந்தாலும் அதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டன். நாளைக்கு என்ர பிள்ளைகளுக்கு என்ர நிலை வந்திரக்கூடாது சேந்தன்.” என்ற போது அவள் விழிகள் பளபளத்தன. அவள் மனம் மிகவுமே கனத்தது. இந்தா அந்தா என்று வடியக் காத்திருந்த கண்ணீரை மறைக்க முயன்றும் முடியாது நின்றாள், அவள்.
“இதோட இந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வச்சிருங்க சேந்தன். இல்லையோ, எப்பவாவது சந்திச்சா நட்பாக் கதைக்கிற நிலை கூட எனக்கும் உங்களுக்கும் இடையில இராது போயிரும்!” என்றவள், தொண்டைக்குள் அடைத்த துக்கத்தை விழுங்கிக்கொண்டே திரும்பி நடந்தாள்.
அவள் விழிகளால் உருண்டு தெறித்த கண்ணீர்த் துளிகளிலும் தொண்டைக் குழி ஏறியிறங்கியதிலும் வைத்தே தன் மீதான நேசத்தை அப்பழுக்கற்று உணர்ந்தவனோ, மென்முறுவலோடு அவளையே பார்த்திருந்தான்.
கைபேசியை இயக்கி அவள் ‘சேட்’ சென்றவன்,
கரையுடைக்கும் கணமொன்றில் உனைக்
கரம் பிடித்திட
காத்திருப்பேன் என் கவினியே
தட்டி அனுப்பினான்.
அக்கணம்,அவள் மீதான நேசம் ஆழமாக அவனுள் ஊன்றிப்போனது. அவளைச் சேர அவள் சம்மதம் மட்டுமே அவனுக்குப் போதும். ஆனால், அவளுக்கு அப்படியில்லை என்று விட்டாள். அவனால் காத்திருக்க முடியும்.முயற்சியை மட்டும் கைவிடவே மாட்டான்.
வேகமாக நகர்ந்த கவினி, கைக்குள்ளிருந்த கைப்பேசி அதிர அதை எடுக்க முனைந்தவள் அப்போதுதான் அங்கு நின்றிந்த தாயையும் விமலா மற்றும் நிவேதாவையும் கண்டாள். தாம் கதைத்தவற்றை நிச்சயம் கேட்டிருப்பார்கள். வெறுப்பு மட்டுமே அவள் விழிகளில். கடந்து செல்ல முயன்றாள்.
“நான் சொல்லேக்க நீ நம்பேல்ல எல்லா? உன்ர மகன் தான் விரும்பிறன் எண்டு கொண்டு திரியிறார். கவினி இல்ல. இனிச்சரி எங்களோட முகத்தை நீட்டுறத நிப்பாட்டு நிவி!” சினேகிதியில் எரிந்து விழுந்த மதிவதனி, கவினியின் நடையை நிறுத்தியிருந்தார்.
“இஞ்ச பாருங்க, நான் உங்களப் பற்றி ஆரிட்டையும் கதைக்கிறேல்ல. இத எத்தினையோ தடவை சொல்லிட்டன். இப்பக் கடைசியா சொல்லுறன், என்னப் பற்றி ஒரு வார்த்த உங்கட வாயில இருந்து வரக்கூடாது. பெத்த பாவத்துக்காக என்ன இப்ப வரை வதைச்சது போதும். சாரலிட வாழ்க்கைய கெடுக்க நான் நினைக்கிறன் எண்டு எப்பச் சொன்னீங்களோ, அப்ப இருந்து நீங்க ஆரோ நான் ஆரோ! இனி, கவினி எண்டு உச்சரிச்சா பரிசுகெட்டிருவீங்க!” தாயிடம் வார்த்தைகளைக் கொட்டியவள் பார்வையோ, நிவேதாவை எரித்தது. சூரியனும் இனிதனும் விறுவிறுவென்று நடந்தவள் பார்வையிலிருந்து தம்மை மறைத்துக்கொண்டார்கள்.
அந்தப் ‘பரிசிகெட்டிருவீங்க’ என்ற வார்த்தையும் அதை அவள் சொன்ன தோரணையும் மதிவதனியைத் தாக்கியதை விடவும் அதிகமாக நிவேதாவைத் தாக்கிற்று. கவினியில் சற்றேனும் இருந்த மதிப்பு மரியாதை எல்லாமே புறமுதுகிட்டிருந்தது.
பின்னாலே வந்த சேந்தன், சினேகிதிகள் மூவரையும் பார்த்து நக்கல் சிரிப்போடு நகர, அவர்கள் முழித்தார்கள்.