ரோசி கஜனின் இயற்கை – 17 -5

 தன்னையே பார்க்கும் தமக்கைக்குத் தன் கலக்கத்தில் சிறிதையும் காட்டப் விருப்பம் கொள்ளவில்லை, அவள். ஏனென்ற கேள்வி நிச்சயம் ஆழமாகவே வரும். இந்தப் பயணம் ஆரம்பித்ததிலிருந்து அவள் வழமையான கலகலப்புத் தொலைந்திருக்கிறாள் என்று ஒரு முறை கேள்வியெழுந்துவிட்டால் பிறகெப்படிச் சமாளிக்க முடியும்!

கைபேசியைசத் தட்டுவது போல் விழிகளைத் தாழ்த்தி, இயர்ஃபோனைச் சுருட்டி  இரண்டையும் கைப்பைக்குள் வைத்துவிட்டு நிமிர்கையில் பெரிதளவில் சுதாகரித்துவிட்டாள். 

 “அம்மா என்ன நீங்க? அப்பிடியெல்லாம் ஓண்ணுமில்ல. எப்பவும் போலத்தான் இருக்கிறன். அது எனக்கும் அக்காக்கும் இடையில, நீங்க ஆரும் வர வேணாம்.” என்று அவள் சொல்ல, அருகிலிருந்த தங்கையைக் கட்டிப் பிடித்தபடி தாயை முறைத்தாள் கவி, “இதையேதான் நானும் சொன்னன்.” என்றபடி.

“இது மட்டுமில்ல கவிக்கா, இன்னொரு செட்டும் இருக்கு, உங்களுக்குத்தான்.” என்ற  இலக்கியின் பார்வை சிடுசிடுப்போடு முன்னால் பாய, வேந்தனோ நெருப்புப் பார்வையால் மோதினான்.

‘எவ்வளவு துணிவிருந்தா இப்பிடிச் சொல்லுவாள்!’  மனதில் எரிச்சல் மண்டியது. இது அவர்களுள் வழமை போல! தமக்கை கேட்டுத் தவிர்க்க முடியாது கொடுத்திருக்கிறாளென்று தன்னைத்தானே சற்றே சமாதானம் செய்ய முயல்கையில் இப்படிச் சொன்னால் என்னவென்று நினைப்பது?

அவன் ஆசையாசையாக வாங்கிக்கொடுத்த பொருளுக்குரிய மதிப்பு அவ்வளவே! அவனுக்கும். அதன்பின் அவனால் பின்புறம் நோக்க முடியவில்லை. மனதுள் அவமான உணர்வு புகைந்துகொண்டிருந்தது!

அப்பட்டமாகவே அவள் தன்னை அவமதித்ததாக உணர்ந்தவனுக்கு, போட்டிருந்த  டீ சேர்ட் முள்ளாகக் குத்தியது. இருக்கையில் அப்படியும் இப்படியும் அசைந்தவன் முகம் சிடுசிடுப்பில்!

திரும்பிப் பார்த்தார் நாதன். ” சொல்ல வேணும் எண்டு நினைச்சனான் தம்பி, உங்கட ஃப்ரெண்ட் மதியும் திரும்ப திரும்ப இன்னொரு ட்ரைவர் ஒழுங்கு செய்யலாம் எண்டு சொன்னவர். அது தேவையில்லை எண்டு நினைச்சாலும் நீங்க இடையிடை எங்களிட்டையும் தரலாம். பெரிய பயணம், தெரியாத இடங்கள் ட்ரைவர் இருந்தால் நல்லது எண்ட அண்ணா தான், யாழ் ட்ராவல்ஸ் ல ட்ரைவரோட வாகனம் புக் பண்ணுற வசதி இருக்கவே அப்பிடியே புக் பண்ணினவர்..” என்று சொல்ல, “அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல அங்கிள். அப்பிடியே எனக்கு முடியாத நேரம் தாறனே.” பட்டுக்கத்தரித்தாற்  போல் இடைமறித்துச் சொன்னவனை மீண்டும் பார்த்தார் நாதன். 

“நீங்க ஓகே தானே  தம்பி?” முடிச்சிட்டிருந்த நெற்றியும் முகமும் ஏதோ சரியில்லையே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதில், கேட்டார். அப்படி அவர்  வினவுகையில் தான் தன் தவறு புரிந்தது, வேந்தனுக்கு. மிகவும் மரியாதையும் அன்புமாக நடத்தும் பெரியவர்களிடம் தன் சொந்தப் பிரச்னைகளைக் காட்டுவானேன்! பட்டென்று இயல்பாகிவிட்டான்.

“நான் நல்லாத்தான் இருக்கிறன் அங்கிள், ஒண்டுமில்ல,  வோஷிங்டன்  போய்ச் சேர்ந்து ஆரூரன் சொன்ன மாதிரி பொட்டானிகல் கார்டினுக்கும் மியூசியத்தும் இண்டைக்கே போறது பற்றி யோசிச்சுக் கொண்டிருந்தன்.” அழகாகச் சமாளித்தான்.

“அதுதானே?  எனக்கு மட்டும் இல்ல அண்ணா, எல்லாருக்கும் அதுதான் விருப்பம்.  இதுக்க, இவையல் ரெண்டு பேரும் உடுப்புக்குப் பிரச்சனப்பட்டுக்கொண்டு!” தமக்கைமாரை முறைத்தான் ஆரூரன். 

 “டோய்! இங்க யாரும் பிரச்சனைப்படேல்ல சரியோ! நாம ஒவ்வொண்டையும் பிளான் பண்ணிட்டு வெளிக்கிட்டும், சிலர் கதைக்கிறதப் பார்க்க நமக்கு ஒண்டும் தெரியாது போலவும் எல்லாம் தனக்குத்தான் தெரியும் போலவும் கிடக்கு!” இலக்கியா சொன்னது சட்டென்று மற்றவர்களுக்கு விளங்கவில்லை. 

அவள் தன்னைச் சீண்டுவது வேந்தனுக்குப் புரிந்தாலும் மனம்தான் சிறிதும் சமாதானம் கொள்ளவில்லை.

“நாம எல்லாருமே இண்டைக்கு அரைமணித்தியாலத்துக்கு முதலே ரெடி. லேட்டா வந்து ஆற அமர சாப்பிட்டுக் குடிச்சிட்டு வந்தது இவர். சோ …இண்டைக்கு இந்த மூண்டு இடத்திலும் இறங்கி வடிவாப் பார்க்க முடியாமல் போனால் அது இவரால் தான்.” படபடவென்று தொடர்ந்தாள், இலக்கியா. 

திரும்பிப்பார்த்துக் கண்டிக்க முனைந்தார், நாதன். அதற்கிடையில், “லூசாடி நீ!” தங்கை கையில் பட்டென்று ஒன்று போட்டிருந்தாள், கவி.

“அதான்… என்ன கதை இது இலக்கி?” மாறனும், “பகிடி கதைக்கிறதுக்கும் அளவிருக்கு. ஆரோட எண்டும் இருக்கு.” சுகுணாவும் சேர்ந்துகொண்டார்கள்.

அதையெல்லாம் முறுவலோடு கேட்டுக்கொண்ட இலக்கியாவின் உள்ளமோ, தன்னை நோக்கிப் பாயும் அவன் பார்வைக்காக காத்துக்கிடந்தது. அந்தோ பரிதாபம், விருப்பமே இல்லையென்றாலும் என்ன செய்வதாம்? கல்லுப்போன்ற அவன் முகத்தையே பிரதிபலித்தது ரியர் வியூ மிரரர்!

‘சரிதான் போடா டோய்!’ மனதுள் சொல்லிக்கொண்டே, “அதில்ல சித்தப்பா, பாத்து ஓகேவா இருக்கிறீங்களா எண்டு கேட்கிற அளவுக்கு அவர் யோசிக்கிறாரே, அது தேவையில்லை எண்ட  அக்கறையில சொன்னா என்னையே எல்லாரும் குற்றம் சொல்லுங்க!” நெளித்துவிட்டு, “நாம முதல் பஸ் டூர் ல போய் வைட்  ஹவுஸ், அடுத்ததா பொட்டானிக்கல் கார்டன் ரெண்டிலும் இறங்கி நேரம் மினக்கடாமல் பார்ப்பம். பிறகு நேரமிருந்தா மியூசியம் போகலாம். இல்லையோ நாளைக்கு விடிய மியூசியம் பார்த்திட்டு அங்கால வெளிக்கிடலாம் தானே?”  தீர்வும் சொன்னாள். 

அதே எண்ணம் தான் வேந்தன் மனதிலும். ஆனாலும், வாயே திறக்கவில்லை! 

 “ம்ம்… முதல் போய்ச் சேர்ந்திட்டு நேரத்தப் பார்த்துச் செய்வம் தம்பி. நாளைக்குத் திரும்பவும் வோஷிங்டனில் நிண்டு மினக்கடுறது பற்றி யோசிக்கவும் வேணும்.”  தன்  டயரியை விரித்து வைத்துக்கொண்டு சொன்னார், நாதன்.

“ஒண்டும் பிரச்சினையில்ல அங்கிள். பார்ப்பமே!” என்றவன் வாகனமோட்டுவதில் கவனமாகிட, மற்றவர்கள் வழமையான கலகலப்பில் இறங்கிவிட்டாலும் மெல்ல கைபேசியை எடுத்து ‘டோய்! இப்படி முகத்தை வச்சிருக்க வேணாம், பார்க்கச் சகிக்கேல்ல!’ என்று தட்டிவிட்டே கலகலப்பில் இணைந்தாள், இலக்கியா. அப்போதும், வெளிப்பார்வைக்கு கலகலப்பாக இருந்தாலும் மனதில் விட்டால் அழுத்திடுவாள் போன்றே இருந்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!