கவிதாவின் வீட்டில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். மித்ராவை தன்னருகிலேயே அமர்த்திக்கொண்ட சங்கரி அவள் மடியிலிருந்த சந்தோஷைப் பார்த்து, “அப்படியே உன்னையே உரித்துப் படைத்துப் பிறந்திருக்கிறான்..” என்றார் அவளிடம்.
அவள் புன்னகையோடு மகனைப் பார்க்க, புது மனிதர்களையும் புது வீட்டையும் குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
“இந்த அழகான மனைவியையும் மகனையும் இவ்வளவு நாட்களும் இங்கே கூட்டி வராமல் இருந்துவிட்டாயே தனா..” என்று சேகரனின் அருகில் அமர்ந்திருந்த கீதனிடம் உரிமையோடு குறைப்பட்டுக்கொண்டார் சங்கரி.
“அது… மாமி..” என்ன சொல்லிச் சமாளிப்பது என்று அவன் யோசிக்கையிலேயே, “அவர் வரச்சொல்லி அழைப்பார் தான் ஆன்ட்டி. வேலைக்குப் போவதால் என்னால்தான் முடிவதில்லை.” என்று பழியைத் தூக்கித் தன்மேல் போட்டுக்கொண்டாள் மித்ரா.
அருகருகே அமர்ந்திருந்த கவிதா, லக்ஷ்மி, யமுனா மூவரும் பாருங்கள் எப்படி நடிக்கிறாள் என்று கண்களாலேயே தங்களுக்குள் பொருமிக்கொண்டனர். கீதனோ என்னவென்று பிரித்தறிய முடியா பார்வை பார்த்தான் அவளை.
“ஆன்ட்டி இல்லை அம்மா என்று சொல்.” என்று திருத்திவிட்டு, “இங்கே பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் புருஷனை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாயே.” என்று மெச்சினார் சங்கரி.
‘நாங்கமட்டும் புருஷனை ஊருக்கே விட்டுக்கொடுத்துக்கொண்டா இருக்கிறோம்’ என்று கவிதா உள்ளுக்குள் புகைய, “பின்னே.. எல்லோரும் உன்னை மாதிரி இருப்பார்களா?” என்று அவர்களின் பேச்சுக்குள் புகுந்தார் தாமோதரன்- சேகரனின் அப்பா.
“இப்போ உங்களை விட்டுக் கொடுப்பதுபோல் நான் என்ன செய்து விட்டேனாம்?” என்று முறைத்தார் அவர் மனைவி.
“அழகான பெண்ணொருத்தி நம் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கு என்னை நீ அறிமுகப் படுத்தினாயா?” என்று அவர் குற்றப்பத்திரிகை வாசிக்க, “அப்பா, இரண்டு பெண்கள் நம் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் யாரை அழகு என்றீர்கள்? யாரை அழகில்லை என்கிறீர்கள்?” என்று வம்பிழுத்தான் சேகரன்.
“அடடா..! நான் யமுனாவை மறந்தே போனேனே. அதற்காக என்னை இப்படியாடா நீ வம்பில் மாட்டிவிடுவாய்.” என்று மகனிடம் பொய்யாகக் கோபம் காட்டியவர், “சங்கரி, இரு அழகிகளிடமும் என்னை அறிமுகப் படுத்திவிடு!” என்றார் உத்தரவு போல.
“முடியாது! கிழவனுக்கு என்ன அறிமுகம் வேண்டிக் கிடக்கிறது?” என்று முறுக்கிக்கொண்டார் துணைவியார்.
“ஏன்மா யமுனா, என்னைப் பார்த்தால் கிழவனாகவா தெரிகிறது. நீ சொல் பார்க்கலாம்?”
இவ்வளவு நேரமும் யமுனா என்கிற ஒருத்தி இருக்கிற நினைவே இல்லாமல் அந்த மித்ராவை அழகி என்று சொன்னவருக்கு இதற்கு மட்டும் நான் வேண்டுமா என்று புகைந்தது யமுனாவுக்கு.
அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “உங்களுக்கு என்ன அங்கிள். நீங்கள் இளமையாகத்தான் இருக்கிறீர்கள்.” என்றாள்.
“கேட்டாயா சங்கரி?” என்று நரைத்த மீசையை முறுக்கிக்கொண்டார் அவர்.
அதிசயத்தைப் பார்ப்பதுபோல் அவர்களின் சம்பாஷணையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. இப்படியான கலகலப்பான குடும்பச் சூழ்நிலையை அவள் பார்த்ததோ அனுபவித்ததோ இல்லை. எப்போதும் முசுடாக இருக்கும் அப்பா. பயந்து நடுங்கும் அம்மா. அவர்களுக்குத் தெரியாமல் கொட்டமடிக்கும் தம்பி தங்கை என்றுதான் குடும்பம் என்றாலே அவள் நினைவில் வருவது.
இங்கேயானால் அம்மா அப்பா, மகன், மருமகள் என்று குடும்பமே ஒருவரை ஒருவர் வாரி, கேலிபேசி சிரிக்கிறார்களே.. ஆச்சரியத்தோடு பார்த்திருந்தாள்.
அவளைக் கவனித்துவிட்டு, “உன் அப்பா எப்போதும் இப்படித்தான் மித்ரா. வயதாகி விட்டதில்லையா அதுதான்.” என்றர சங்கரி.
உரிமை கலந்த பாசத்தோடு அவர் சொன்ன ‘உன் அப்பா..’ அவளை என்னவோ செய்யப் பனிக்கப் பார்த்த விழிகளைப் படாத பாடுபட்டு அடக்கிக்கொண்டு அவரைப் பார்த்து முறுவலித்தாள்.
அங்கே தோழியோடு அளவளாவி கொண்டிருந்த மருமகளைப் பார்த்து, “கவிதா! உன் தோழி இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே தானே இருக்கப் போகிறாள். அவளோடு பிறகும் கதைக்கலாம். இப்போதுபோய் உணவை எடுத்துவை. உன் அண்ணாவும் அண்ணியும் சாப்பிட்டுவிட்டுப் பயணக்களை நீங்க உறங்கட்டும்.” என்று ஏவினார் சங்கரி.
ம்கும்! இவளை நான் கவனிக்க வேண்டுமா என்று தாயை பார்வையால் எரித்தவள், “சரி மாமி..” என்று பல்லைக் காட்டிக்கொண்டு எழுந்து கையிலிருந்த மகளைக் கணவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
மகளுக்கு உதவும் சாட்டில் லக்ஷ்மி அம்மாளும் அவளோடு செல்ல, பின்னாலே யமுனாவும் தொடர்ந்தாள்.
“இந்தக் குட்டிப்பெண் இப்போதுதான் பிறந்தாள் போலிருந்தது. அதற்குள் ஒரு வயதாகிவிட்டது..” என்றபடி கீதன் திவ்யாவை தூக்கிக்கொள்ள, “பெண் பிள்ளைகளின் வளர்த்தி அப்படித்தான் தனா. பார்த்திருக்க வளர்ந்துவிடுவார்கள்.” என்றார் சங்கரி.
“உண்மைதான் மாமி..” என்றவன், திவ்யாவை தூக்கிப் பிடித்து விளையாட அதைப் பார்த்த அவன் பெற்றவனுக்கோ பொறாமை சுறு சுறு என்று ஏறியது. தாயின் மாடியிலிருந்து வழுக்கிக்கொண்டு இறங்கி தகப்பனிடம் ஓடியவன், “அப்பா.. சந்து.. தூக்குங்கோ..” என்றபடி அவன் கையிலிருந்த திவ்யாவை இழுத்தான்.

