அங்கிருந்த எல்லோருக்கும் அவனது உரிமைப்போராட்டம் புன்னகையை வரவழைத்தது.
“பார் தனா உன் மகனின் பொறாமையை. என் மகள் உன் மடியில் இருப்பது அவனுக்குப் பொறுக்கவில்லை.” என்று சொல்லிச் சிரித்த சேகரன், “சந்துக்குட்டி, நீ மாமாவிடம் வா..” என்று தூக்க முயல, மாட்டேன் என்று முறுக்கியது அந்தக் குட்டிக்கன்று.
மீண்டும் தகப்பனின் மடியில் ஏற அவன் முயல, மகனது பாசப்போராட்டத்தில் மனமும் முகமும் கனிய, மலர்ந்த சிரிப்போடு திவ்யாவை மடியில் ஒரு பக்கமும், சந்தோஷை இன்னொரு பக்கமும் தூக்கி இருத்திக்கொண்டான் கீதன்.
அப்போதும் அவளைப் பிடித்துத் தள்ளிவிட அவன் முயல, “அப்படிச் செய்யக் கூடாது சந்தோஷ். குட்டிப்பாப்பா பாவம்.” என்றாள் மித்ரா.
அவனுக்கு என்ன புரிந்ததோ, எனக்குத்தான் முன்னுரிம என்பதுபோல் தகப்பனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டான்.
தன்னை விடக் குட்டியாக இருக்கும் திவ்யாவை குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்தவன், மெல்ல அவளின் அருகே கையைக் கொண்டுபோனான். அதே நேரம் திவ்யாவும் அவனைத் திரும்பிப் பார்க்க, சட்டென்று கையை இழுத்துக்கொண்டான். அதைப்பார்த்த திவி கிளுக்கிச் சிரிக்க, சந்தோஷுக்கோ சந்தோசம் பொங்கிக்கொண்டு வந்தது.
“அப்பா பேபி சிரிக்குது..” என்றான் தகப்பனிடம் கண்கள் மின்ன.
“ஆமாடா கண்ணா..” என்றான் கீதன் மகனின் உற்சாகத்தை ரசித்தபடி.
திரும்பவும் சந்தோஷ் திவ்யாவின் அருகே கையைக் கொண்டுபோக, சரெக்கென்று திவ்யா திரும்பிப் பார்க்க, இவன் கையை இழுத்துக் கொள்ளத் திவ்யா கிளுக்கிச் சிரிக்க அதைப்பார்த்து சந்தோஷும் சிரிக்க என்று அந்த இரண்டு வாண்டுகளுக்குள் அது ஒரு விளையாட்டாகவே மாறிப்போனது.
அங்கிருந்த பெரியவர்களின் முகத்திலும் முறுவல் தன்னாலே அரும்ப, மகனின் குறும்பை ரசித்த கீதனின் விழிகள் அதைப் பகிர்ந்துகொள்ளும் ஆவலுடன் இயல்பாகவே மித்ராவை நோக்கின. அவளும் அதே ரசனையான புன்னகையோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனைப்பார்த்துப் புன்னகைத்தவளின் முகத்தில் அவன் விழிகள் சற்றே அதிகமாகப் படிய, மனம் குழம்பத் தலை குனிந்தாள் மித்ரா.
“அடுத்தப் பிள்ளை எப்போது பெறுவதாக இருக்கிறீர்கள்?”
திடீரெனச் சங்கரி கேட்கவும் திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தாள் மித்ரா.
“சந்தோஷ் எவ்வளவு அழகாகத் திவியோடு விளையாடுகிறான். அவனுக்கு என்று ஒரு தம்பியோ தங்கையோ வேண்டாமா?” என்றார் அவர் மேலும்.
இப்போது திகைப்போடு கீதனைப் பார்த்து விழித்தாள் மித்ரா.
அவனோ அவளது திகைப்பை அளவெடுத்தபடி, “இப்போது என்ன அவசரம் மாமி..?” என்றான் பொத்தாம் பொதுவாக.
“என்ன அவசரமா? சந்தோஷுக்கு மூன்று வயதாகப் போகிறது. இது அளவான இடைவெளி தானே. காலாகாலத்தில் பெற்றுவிட்டால் நீங்கள் தெம்பாக இருக்கும்போதே அவர்களும் வளர்ந்து விடுவார்கள்.” என்றவர் மித்ராவிடம் திரும்பி, “ஒரு பிள்ளை போதும் என்று எதாவது திட்டம் போட்டு இருக்கிறீர்களா?” என்று விசாரித்தார்.
என்ன சொல்வாள்? இந்த ஒரு பிள்ளைக்காக அவள் பட்ட பாடே பெரும்பாடு என்றா?! இழப்பின் வீரியமும் இறந்தகால நினைவுகளும் தாக்க, பல்லைக் கடித்து அதை அடக்கியபடி, “அப்படி.. எ..துவும் இல்லை அம்மா..” என்றாள் அடைத்த குரலில்.
“பிறகென்ன..?” என்று அவர் ஆரம்பிக்க, “விடுங்கம்மா.. நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா. அமையவும் வேண்டாமா..” என்றான் சேகரன்.
குழந்தைதான் உண்டாகவில்லை போலும் என்று எண்ணியவரும், “அது என்னவோ உண்மைதான்..” என்றபடி அந்தப் பேச்சை அதோடு விட்டுவிட, கவிதா சாப்பிட எல்லோரையும் அழைத்தாள்.
உணவுவேளை முடிந்ததும் உறக்கத்துக்குச் சிணுங்கிய மகளோடு கவிதா அவர்களின் அறைக்குள் சென்றுவிட, மாடியில் இருந்த லக்ஷ்மி அம்மாளின் அறையிலேயே யமுனாவை தங்கச் சொல்லிவிட்டு, அங்கேயிருந்த இன்னொரு அறையைக் கீதன் குடும்பத்துக்குக் காட்டினார் சங்கரி.
கீதனை பின்தொடர்ந்து மகனோடு அந்த அறைக்குள் நுழைந்த மித்ரா சற்றே திகைத்துத்தான் போனாள். மூவர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அந்த அறையும் அங்கிருந்த கட்டிலும் போதுமானதுதான். ஆனால், அவர்களின் விசித்திர குடும்பத்துக்கு?
கீதனும் ஒருகணம் தடுமாறித்தான் போனான் என்பது அசையாமல் அவன் நின்றதிலே தெரிய, இனி என்ன செய்வது என்று கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவனோ, ஒன்றும் சொல்லாமல் கொண்டுவந்த பாக்கில் இருந்து ஒரு சரத்தையும் மேல் சட்டையையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

