ஒரு சோபா கூட இல்லாத அந்த அறையைப் பார்த்து முழித்துக்கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது அவளால். எப்படியாவது சமாளிக்கத்தான் வேண்டும் என்றெண்ணியவள் மகனுக்கு இலகுவான உடையை மாற்றிவிட்டு, தனக்கான இரவு உடையை எடுத்து வைத்துவிட்டு கீதன் குளியலறையில் இருந்து வெளியே வருவதற்காகக் காத்திருந்தாள்.
வெளியே வந்தவன், அப்படியே அறையை விட்டும் வெளியே சென்றுவிட, ஒரு பெருமூச்சோடு தானும் இரவுடையை மாற்றிக்கொண்டு வந்து சந்தோஷை நடுவில் போட்டு தான் ஒரு கரையாகப் படுத்துக்கொண்டாள்.
உடம்பெல்லாம் களையாக இருந்தாலும் தூக்கம் வருவேனா என்றது. அவனோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே அறையில் உறங்கப் போகிறோம் என்று நினைக்கவே உள்ளும் புறமும் குறுகுறுத்தது. அதோடு மகன், அவன், அவள் என்று முதன் முறையாகத் தங்கப் போவதை நினைக்க மனதில் ஒருவித பரவசம். இதை அவன் எப்படி எடுத்துக்கொள்வான்? அவளின் அருகிலேயே வரப் பிரியப்படாதவன், அவள் உறங்கும் கட்டிலில் உறங்குவானா? இப்போது எங்கே போகிறான்? எல்லோரும் உறங்கப் போய்விட்டார்களே..
அவனைப்பற்றியே சிந்தித்தபடி இருந்தவளின் விழிகள் எப்போது என்று தெரியாமல் உறக்கத்தில் மூடிக்கொள்ள, இங்கே மாடிப்பக்க காரிடாரில் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்ட கீர்த்தனன் பிரம்பினால் ஆன குட்டி மேசையில் கால்களையும் இலகுவாக நீட்டிக்கொண்டான்.
ஒரே அறையில் தங்கவேண்டிய நிலை வரும் என்பதை அவன் ஏற்கனவே எதிர்பார்த்தான் தான். ஆனாலும் நடைமுறையில் அதை எதிர்கொள்கையில் சமாளிக்க முடியாமல் திணறினான்.
அந்த வீடு முழுவதும் சூழ்ந்திருந்த இருளுக்குள் பார்வையைப் பதித்து, தன் வாழ்க்கையின் விசித்திரத்தை எண்ணியவனுக்கு, அடுத்ததாக அவனுக்குக் காத்திருப்பது என்ன என்பதே புதிராக இருந்தது.
சட்டப்படி மித்ராவை பிரிந்தபிறகும் அவளின் நினைவுகள் அவனை விட்டு அகன்றதில்லை. அவளை நினைக்கையில் எல்லாம் ஆத்திரமும், கோபமும், வெறுப்புமே தோன்றிக் கொண்டிருந்ததன.
அந்த வெறுப்பு, கோபம், ஆத்திரம் தந்த உஸ்ணத்தில் ஒரு வெறியோடு வாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தவனின் நிம்மதியை, அன்று கடையில் வைத்து அவன் முன்னால் தோன்றியவள் ஒற்றைப் பார்வையிலேயே உடைத்துப்போட்டது என்னவோ உண்மைதான்!
அதோடு அவனைப் பிரிந்து வாழ்பவள் ஒன்றும் சந்தோஷவானில் சிறகடித்துப் பறக்கவில்லை என்பது, அவள் முகத்திலும் அளவுக்கு அதிகமாக மெலிந்து எலும்புக் கூடாகவே மாறியிருந்த மேனியிலும் தெரிந்தது.
காலத்தின் கட்டாயத்தினாலா அல்லது விதி விளையாடும் விளையாட்டினாலா மீண்டும் மீண்டும் அவளைச் சந்திக்க நேர்ந்தபோது அவன் மனது தள்ளாடத் தொடங்கியதும் உண்மைதான்.
என்னதான் மனம் தடுமாறினாலும், உடலும் உள்ளமும் அவளுக்காக ஏங்கினாலும் ஒரு ஆண்மகனாய் அவளை அவனால் ஏற்க முடியாது! என்றைக்குமே!
யாரோ இருளில் மாடியேறி வரும் ஓசை கேட்கவும், ஏன் மின்விளக்கை உயிர்பிக்காமல் வருகிறார்கள் என்று அவன் சிந்திக்கையிலேயே செல்லில் இருந்த டார்ச்லைட் உதவியுடன் படியேறி வருகிறவள் கவிதா என்று விளங்கியது.
அவன் இருப்பது தெரியாமல் தாயின் அறைக்குள் அவள் நுழைய, தோழியோடு கதைக்கச் செல்கிறாள் போலும் என்று எண்ணிக்கொண்டவன் மீண்டும் தளர்வாக நாற்காலியில் சாய்ந்துகொண்டான்.
அவனது சிந்தனைகள் மீண்டும் தொடர முயன்றபோது, “உன் மாமனாரும் மாமியாரும் விட்டால் அந்த மித்ராவை தலையில் தூக்கி வைத்துக்கொள்வார்கள் போலவே..” என்று யமுனா புகைவது கேட்டது.
மெதுவாகத்தான் சொன்னாள். ஆனாலும் இரவின் நிசப்தத்தில் அவளின் பேச்சு தெளிவாகக் கேட்டதில், அதுவும் மித்ராவின் பெயர் அடிபட்டதில் செவிகளைத் தீட்டிக்கொண்டான் கீர்த்தனன்.
“அது.. அண்ணாவின் மனைவி என்பதால் அவளுக்குக் கிடைத்த உபசரிப்பு. அவளைப் பற்றிய உண்மை தெரிந்தால் என் மாமியார் அவளை இந்த வீட்டு வாசலையும் மிதிக்க விடமாட்டார்.” என்றாள் கவிதா ஏளனக்குரலில்.
அன்று நெஞ்சைக் கொன்ற வேதனையைத் தாங்க முடியாமல், அம்மா என்று நம்பிக் கொட்டித் தீர்த்த தன் முட்டாள் தனத்தை என்றும்போல் இன்றும் வெறுத்தான் கீர்த்தனன்.
“எனக்கு என்னவோ நாம் நினைக்கிற எதுவும் நடக்கும்போல் தோன்றவில்லை.” என்றாள் யமுனா சலிப்போடு.
“ஏன் நடக்காது. நிச்சயம் உனக்கும் அண்ணாக்கும் திருமணம் நடக்கும்!” என்றாள் கவிதா.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த கீதனின் முகம் இறுகியது.

