“இல்லை வேண்டாம். இனி நீங்களாக வந்தால் கூட எனக்கு வேண்டாம்! என் அண்ணாக்களை எல்லாம் குறை சொல்லும் அளவுக்கு நீங்கள் என்ன அவ்வளவு பெரிய இவரா? இனிமேல் உங்கள் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டேன். உங்களை விட நல்லவராகக் கட்டி வாழ்ந்து காட்டுகிறேன்!” கன்னங்களில் கண்ணீர் வழியச் சொன்னவள், அதற்குமேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் லக்ஷ்மியிடம் விரைந்தாள்.
அந்த நிலையில் அவளைப் பார்த்த லக்ஷ்மியும் கவிதாவும் பதறிப்போனார்கள்.
அங்கே வந்த கீதனிடம், “என்னடா நடந்தது? ஏன் யமுனா அழுகிறாள். என்ன சொன்னாய் நீ?” என்று அதட்டினார் லக்ஷ்மி.
“அதை அவளிடமே கேளுங்கள். எனக்கு வெளியே ஒரு வேலை இருக்கிறது. தேவையானதுகளை எடுத்துவிட்டுச் சொல்லுங்கள், பணம் கட்ட வருகிறேன்.” என்றவன், வெளியே சென்றும்விடத் தாயும் மகளுமாகச் சேர்ந்து அவனை வாயால் வறுத்தெடுத்தார்கள்.
“அங்கே ஜெர்மனியிலும் இப்படித்தான். திவிக்குட்டிக்கு உடை வாங்கப் போனால் தேவையானதுகளை வாங்கிவிட்டுக் கூப்பிடுங்கள் என்றுவிட்டு தன் மகனுக்கு மட்டும் பார்த்துப் பார்த்து வாங்குகிறான். இவனையும் போயும் போயும் பிள்ளையாகப் பெற்றேன் நான்.” என்றவர், யமுனாவிடம் நடந்ததை விசாரித்தார்.
கண்ணீரும் கோபமுமாக நடந்ததைச் சொன்னவள், “இனியும் அவர் திருந்துவார், இந்தக் கல்யாணம் நடக்கும் அது இது என்று ஏதாவது சொன்னீர்கள் என்றால் எனக்குப் பொல்லாத கோபம் தான் வரும் ஆன்ட்டி. இன்றே என் அண்ணாக்களிடம் சொல்லப் போகிறேன், எனக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்க்கச் சொல்லி!” என்றாள் ஆத்திரத்தோடு.
அவர்களை இணைக்க எண்ணி அவளை அவனோடு தனியாக அனுப்பினால் அதை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டானே என்று தலையில் கைவைக்காத குறையாக அமர்ந்துவிட்டனர் தாயும் மகளும்.
இப்படியே எவ்வளவு நேரம்தான் நிற்பது? “கவி! வா வந்ததற்கு உடைகளையாவது பார்த்து எடுப்போம். இல்லாவிட்டால் அதுவும் நடக்காது.” என்றவர் மகளோடு சேர்ந்து உடைகளை எடுக்கத் தொடங்கினார்.
இங்கே வெளியே வந்தவனோ, வீதியில் சும்மா கால்போன போக்குக்கு நடந்தான். மனதில் இனி யமுனா அவன் பக்கம் திரும்ப மாட்டாள் என்று உறுதியானது. அடுத்ததாக அம்மாவும் கவியும்! அவர்களுக்கும் ஒரு வழி செய்தே ஆகவேண்டும்!
இல்லாவிட்டால் மித்ராவுக்கு எப்போது எதைச் செய்வார்களோ என்று அவன் அவர்களின் பின்னே முழுநேரமும் ஓடிக்கொண்டு இருப்பது என்பது சாத்தியமாகாத விஷயம்.
சேகரனோ தாமோதரனோ ஏதாவது அலுவலாக அவனை வெளியே அழைத்தால் போய்த்தான் ஆகவேண்டும். அப்போது மித்ராவை யார் பார்ப்பது? எனவேதான் இன்றைக்கே இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட எண்ணினான்.
அதோடு, என்னதான் எரிச்சலும் கோபமும் யமுனா மேல் வந்தாலும், இன்றுவரை திருமணமாகாமல் அவள் இருப்பதற்கு அவனும் ஏதோ ஒருவகையில் காரணம் தானே!
அந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவர வேண்டுமானால், அவனை உதறிவிட்டு அவள் இன்னொரு திருமணம் செய்யவேண்டும். எனவேதான் கொஞ்சம் கடுமை காட்டினான். அவனது வார்த்தைகள் மிகவுமே அதிகப்படிதான். ஆனால், இதை இன்றோடு முற்று முழுதாக நிறுத்த வேண்டும். அதில் அவனுக்கு வெற்றிதான்!
நடந்துகொண்டிருந்தவனின் பார்வையில் அங்கிருந்த நகைமாடம் தென்பட ஏதோ ஒரு உந்துதலில் உள்ளே நுழைந்தவன், அழகான மயில் ஒன்று
தோகை விரித்தாடுவது போன்ற அமைப்பிலிருந்த நெக்லஸோடு, அதே மயில் தோட்டுடனும் கூடிய நெக்லஸ் செட் ஒன்றை வாங்கிக்கொண்டான்.
அன்று காலையில் அவன் ரசித்த வெண்டைப் பிஞ்சு விரல் கண்முனால் ஆட, அந்த விரலுக்கும் பொருத்தமாய் மயிலிலேயே ஒரு மோதிரமும் வாங்கியவன், மகனுக்கு ஒரு சங்கிலியும் புலிப்பல் வைத்த பென்டனும் வாங்கிக்கொண்டான்.
சற்று நேரத்தில் லக்ஷ்மி அழைக்கவும் அங்கே சென்று, என்ன வாங்கினார்கள் எவ்வளவுக்கு வாங்கினார்கள் என்கிற எந்தக் கேள்வியும் இல்லாமல் மொத்தம் எவ்வளவு என்று கேட்டுப் பணத்தைக் கொடுத்தான்.
“வேறு எதுவும் வாங்க வேண்டுமா “ என்று கேட்கவும் தவறவில்லை.
“ஒன்றும் வேண்டாம். நீ முதலில் ஒரு நல்ல தமிழ் ஹோட்டலாகப் பார்த்து விடு. உன்னோடு கொஞ்சம் கதைக்கக் வேண்டும்!” என்றார் லக்ஷ்மி.
அவனும் இதைத்தானே எதிர்பார்த்தான். மறுபேச்சின்றி ஹோட்டலுக்குக் காரை விட்டவன், அவரவருக்குப் பிடித்ததாய் கேட்டு ஆர்டர் கொடுத்தான்.
“என்னடா யமுனாவிடம் என்னென்னவோ சொன்னாயாமே?” எந்த முகவுரையும் இன்றி ஆரம்பித்தார் லக்ஷ்மி.
“என்னென்னவோ இல்லை. சொல்ல வேண்டிய உண்மையைச் சொன்னேன்.” என்றான் அவன் அமர்த்தலாக.
“இலங்கையில் இருந்து இவ்வளவு தூரம் உன்னைத் தேடி வந்தவளை வேண்டாம் என்றால் என்ன நியாயம்? ஒரு பெண் பிள்ளையின் பாவத்தைச் சம்பாதிக்காதே! முதலும் இவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டதால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறாய். இனியும் நோகடித்தாய் என்று வை, நீ கடைசிவந்தாலும் நன்றாக இருக்கமாட்டாய்.” என்று, தன் திட்டத்தில் மண்ணள்ளிப் போட்ட மகனுக்குச் சாபம் விட்டார் அன்னை.
“என்னைத் தேடி வரச்சொல்லியோ, அவளைக் கட்டிக்கொள்கிறேன் என்றோ என்றைக்குமே நான் சொன்னதில்லை.” என்று அலட்சியமாகச் சொன்னவன், “ஏன் அம்மா, தெரியாமல் தான் கேட்கிறேன், என்னைப்போல ஒருவனை, ஒரு குழந்தைக்குத் தகப்பனை பவிக்குக் கட்டிக் கொடுப்பீர்களா?” என்று நேரடியாகக் கேட்டுவிடப் பதில் சொல்ல முடியாமல் திணறினார் லக்ஷ்மி.

