சம்மந்தி அம்மா மித்ராவுக்கு எடுக்கவில்லையே என்றெண்ணி அவரைத் தப்பாக நினைக்கவும் வழியில்லாமல், அதே நேரத்தில் நீ எங்கள் குடும்பத்தில் சேர்த்தியில்லை, அதனால் உனக்கு எடுக்கவில்லை என்பதை மித்ராவுக்கும் நாசுக்காக உணர்த்தினார் லக்ஷ்மி.
அதுவரை நேரமும் மலர்ச்சியோடு இருந்தவளின் முகம் சட்டெனக் கசங்கிப்போனது.
அவள் எதையுமே அவர்களிடம் எதிர்பார்க்கவே இல்லைதான். அவர்கள் வாங்கிய உடைகளைக் கடை பரப்பியபோது கூட, அவற்றின் அழகை ரசித்தாளே தவிர எனக்கும் வங்கியிருப்பார்களா என்கிற ஆவலோ ஆசையோ அவளிடம் தோன்றவே இல்லை.
ஆனாலும், அதை வெளிப்படையாக லக்ஷ்மி சொல்லி, மறைமுகமாகக் குத்திக்காட்டிய அந்த நிமிடத்தில், என்னவோ அவளும் மகனும் அந்த வீட்டில் அதிகப்படி போல் தோன்றிவிட்டது. அழுகை வரும்போல் இருக்க, உதட்டைப் பற்களால் கடித்து அதை அடக்க முயன்றாள்.
“அவளுக்கும் சந்துவுக்கும் கீதன் ஜெர்மனியிலேயே எடுத்துக் கொடுத்துவிட்டானாம்.” என்றார் சங்கரி.
இது எப்போது என்பதாக மித்ரா அவரைத் திகைப்போடு பார்க்க, கீதனோ இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.
தான் ஜெர்மனியில் எடுத்ததாகச் சொன்னதை, கீதன் அவளுக்கு எடுத்துக் கொடுத்ததாகச் சங்கரி அம்மா எண்ணியிருக்கிறார் என்று பிறகுதான் ஊகித்தாள் மித்ரா.
சதிகாரக் கும்பலோ உடை எடுத்துக் கொடுக்கும் அளவுக்குப் போயிற்றா என்பதாகத் தங்களுக்குள் புகைச்சளோடு பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் மற்றவர்களின் கவனத்தைக் கவராதபடிக்கு தங்களின் அறைக்குள் மகனோடு புகுந்து கொண்டவளுக்கு மகனைக் கட்டிக்கொண்டு கதறவேண்டும் போலிருந்தது.
‘நாம் எல்லோருக்கும் பாரமாகப் போய்விட்டோம் சந்தோஷ். நமக்காக என்று ஒன்று செய்ய நமக்கு யாருமே இல்லை. மகனுக்காவது அவள் இருக்கிறாள். அவளுக்கு?’ என்று எண்ணியவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
“ஏன் அம்மா அழுறீங்க..” காரணம் புரியாமல் கேட்ட மகன் தன்னுடைய பிஞ்சு விரல்களால் அவளின் கண்களைத் துடைத்துவிட, விம்மல் ஒன்று வெடித்தது அவளிடம்.
அவளுக்காக அவள் மகன் இருக்கிறான்! வேறு யாரும் வேண்டாம்! “அம்மா அழவில்லையடா கண்ணா.” என்றவளின் விழிகள் திரும்பவும் கலங்கினாலும், மகனின் பாசத்தில் நெஞ்சம் நெகிழ்ந்துபோயிற்று!
“அச்சா அம்மா..” என்றபடி தன் சின்ன இதழ்களை அன்னையின் கன்னத்தில் அழுந்த பதித்தான் சந்தோஷ்.
சற்று நேரம் மகனோடு இருந்தவள், சங்கரி தேடமுதல் கீழே போக எண்ணி எழுந்து, குளியலறை சென்று முகம் கழுவித் தலை வாரினாள்.
அவள் வெளியே வரவும், கீர்த்தனன் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
அவனைத் தாண்டிக்கொண்டு அவள் வெளியே செல்ல முயல, “ஒரு நிமிடம்!” என்று தடுத்தான் கீதன்.
தயங்கி நின்றாலும் அவன் முகம் பார்க்கவில்லை மித்ரா.
“அவர்கள் உனக்கு உடை எடுக்காமல் விட்ட விஷயம் எனக்குத் தெரியாது. எடுத்த உடைகளுக்குப் பணத்தை மட்டும் தான் நான் செலுத்தினேன்.” என்றான் தன்னிலை விளக்கமாக.
லக்ஷ்மி அவளை நீ யாரோ என்று சொல்லாமல் சொன்னபோது வலித்ததை விட இப்போது அவன் காரணம் சொன்னபோது ஏனோ அதிகமாக வலித்தது. கண்ணைக் கரிக்கப் பார்த்தாலும் அடக்கிக்கொண்டாள்.
இவன் முன் அழக்கூடாது! அசடாக நடந்துகொள்ளக் கூடாது. ஏற்கனவே மதியமே அசட்டு வேலை பார்த்தாயிற்று. அதுவே போதும் என்றெண்ணியவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உங்களிடம் நான் எதையும் கேட்கவில்லையே. அன்று சொன்னதுபோல எனக்கென்று யாரும் இல்லாததால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கத் தோன்றியதில்லை. இன்றும் அப்படித்தான். அதனால் எதற்கும் அதிகமாக ஆசைப்பட்டு உங்களிடம் வந்து நின்றுவிடுவேன் என்று பயப்படாதீர்கள்.”
என்று சொன்னவள் அறையை விட்டு வெளியேற அந்த இடத்திலேயே உறைந்து நின்றான் கீதன்.

