மித்ராவின் கைபேசி எடுப்பார் யாருமின்றி அலறிக்கொண்டிருந்தது.
‘அறைக்குள் தானே இருக்கிறாள். பிறகும் ஏன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள்..’ என்றெண்ணியபடி தங்களின் அறைக்கு வந்தான் கீதன். அங்கே கட்டிலில் கைபேசி கிடக்க, குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது.
திரும்பவும் அலறத் தொடங்கிய கைபேசியை எடுத்துப் பார்த்தான். சத்யன் என்று தெரிந்ததும் அழைப்பை ஏற்று இவன் ஹலோ என்று சொல்ல முதலே, “என்னக்கா, இவ்வளவு நேரமாக எடுக்காமல் எங்கே போனாய்?” என்றான் சத்யன்.
“நான் உன் அத்தான்டா. அவள் குளிக்கிறாள்.” என்றான் கீதன்.
சற்று நேரம் அந்தப் புறத்தில் நிசப்தம் நிலவியது.
பின், “ஓ.. நீங்களா? நான் அக்கா என்று நினைத்தேன். பிறகு எடுக்கிறேன்.” என்று அந்நியக் குரலில் சொன்னவன் கைபேசியை வைக்கப் போக,
“டேய் டேய் கொஞ்சம் பொறுடா. உன் அக்காவோடு மட்டும் தான் கதைப்பாயா? இந்த அத்தானோடு எல்லாம் கதைக்க மாட்டாயா?” என்று சற்றுக் கேலியாகவும் மனத்தாங்கலாகவும் கேட்டான் கீதன்.
அவனுக்கும் உள்ளன்போடு உறவாட ஒரு உறவு வேண்டும் போலிருந்தது. அன்று ஹோட்டலில் வைத்து தாய் தங்கையிடம் கடுமையாக நடந்துகொண்டவன், அதன்பிறகு கடந்த இந்த மூன்று நாட்களிலும் அவர்களிடம் இளக்கம் காட்டவே இல்லை. காட்டப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கூட்டம் அல்லவா!
“அத்தானா? நீங்களா? எந்த வகையில் என்று கொஞ்சம் வி..ள..க்க..மாகச் சொல்கிறீர்களா?” நக்கலையும் எரிச்சலையும் சரி சமமாகக் கலந்து கேட்டான் சத்யன்.
மனம் கனத்தபோதும், “நான் விளக்கமாகச் சொன்னால் தான் உனக்கு விளங்குமா? நீ என்ன சொன்னாலும் நான் உன் அத்தான் தான்டா.. அதை என்றைக்கும் மறக்காதே!” என்றான் கீதன்.
“அதை மறக்க வைத்தவர் நீங்கள் தான். நாங்கள் இல்லை!”
“சரிடா! நான் என்ன சொன்னலும் நீ, ‘நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்றுதான் நிற்பாய். அதனால் அதை விட்டு விட்டு வேலையெல்லாம் எப்படிப் போகிறது என்று சொல்? வித்தி என்ன செய்கிறாள்?” என்று விசாரித்தான்.
அவனுக்கு ஏனோ சற்று நேரம் சத்யனோடு உரையாட வேண்டும் போலிருந்தது. கூடப்பிறந்த பிறப்பின்மேல் உயிரையே வைத்திருக்கும் உறவு கிடைப்பதும் வரமல்லவா!
“நாங்கள் எப்படி இருந்தால் தான் உங்களுக்கு என்ன?” அப்போதும் முறுக்கிக் கொண்டான் அந்தப் பாசக்கார கோபக்காரன்.
“டேய்! நீ அடங்கவே மாட்டியாடா? எப்போ பார்த்தாலும் என்னோடு சண்டை பிடிப்பதிலேயே குறியாக இருப்பாயா?” என்று சிரிப்போடு கீதன் கேட்க அங்கே சத்யனின் பாடுதான் பெரும் கஷ்டமாக இருந்தது.
இப்படி உரிமையோடு பேசிச் சிரிக்கும் அத்தானை எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்குத்தானே தெரியும். தந்தையின் ஸ்தானத்தில் அவன் வைத்திருந்த அத்தான் பொய்த்துப் போனார் என்பதுதானே அவனது கோபமே!
ஆனால், என்னதான் அவன் கோபம் காட்டினாலும் எடுத்தெறிந்து பேசினாலும் அன்பை மட்டுமே பதிலாகத் தரும் அத்தான், அக்காவின் அன்பை மட்டும் ஏன் உதறினார்?
அந்த எண்ணம் கொடுத்த கொதிப்பில், “என் அக்காவின் வாழ்க்கையில் விளையாடியவரை கொஞ்சவா முடியும்?” என்று கோபப்பட்டான் அவன்.
“அன்றிலிருந்து இன்றுவரை உங்களுடைய சுயநலத்துக்காக மட்டுமே என் அக்காவை நீங்கள் பயன்படுத்துவீர்கள். அது தெரிந்தும் உங்களோடு சண்டை பிடிக்காமல் ஒன்றும் தெரியாதவன் போல் நான் இருக்கவேண்டும். அப்படியா?” என்று கொதித்தான்.
“ஏன் சத்தி இப்படியெல்லாம் பேசுகிறாய்? விசாவுக்காக மணந்தது என் சுயநலம் தான் என்றாலும், அதை மறைத்தேனா? அல்லது ஏமாற்றி உன் அக்காவை மணந்தேனா? மணந்த பிறகு நான் அவளோடு வாழ்ந்த வாழ்க்கையில் சுயநலம் இருந்ததா? உன் அக்காவை நான் நன்றாக வைத்துக் கொள்ளவில்லை என்று உன் மனதை தொட்டுச்சொல் பார்க்கலாம்?” என்று வேதனை நிறைந்த குரலில் கீதன் கேட்டபோது சத்யனிடம் பதில் இல்லாமல் போனது.
அவனால் அல்ல அவர்களின் வாழ்க்கையைப் பார்த்த யாராலுமே சொல்ல முடியாது, கீதன் மித்ராவை நன்றாக வைத்திருக்கவில்லை என்று. அந்தளவுக்குப் பூப்போல அல்லவா தாங்கினான்! உயிராக அல்லவோ பழகினான். அதனால் தானே இன்றுவரை அதிலிருந்து மீழமுடியாமல் மித்ரா தவிப்பதும், அதைப்பார்த்து சத்யன் கொதிப்பதும்!
அப்படிச் சொர்க்கத்தையே காட்டிவிட்டுச் சுடுதணலில் தவிக்கவும் விட்டுவிட்டாரே!
“நன்றாக வைத்திருந்தவர்தான் அவளை நடுத்தெருவிலும் கைவிட்டீர்கள். அந்த ஆத்திரத்தில், அவளுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லை என்கிற கோபத்தில் அக்கா வரமாட்டேன் என்று சொல்லியிருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? அவள் மட்டும் நீங்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து, மன்னித்து வரவேண்டும். அதுவே உங்களால் முடியாது. அப்படித்தானே?”

