“எல்லாவற்றையுமே மன்னிக்க முடியும் என்றால் தண்டனை என்கிற ஒன்று உருவாகியே இருக்காது சத்தி. மன்னிக்க முடியாத தப்புக்களும் உண்டு. அதேபோல எல்லாவற்றையும் மறக்கவும் முடியாது. சிலதை நாம் விரும்பினால் கூட நம்மால் மறக்க முடியாதுடா.” என்றான் வறண்ட குரலில்.
“அப்போ என் அக்காவுக்கு நீங்கள் தண்டனை கொடுத்து இருக்கிறீர்களா? அதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?”
“உன் அக்காவுக்கு நான் ஏனடா தண்டனை கொடுக்க? அது என்னால் முடியாதும் கூட. இன்றைய நிலை எனக்கும் தான் வேதனை. அப்படிப் பார்த்தால், மனைவி, பிள்ளை, குடும்பம் என்று வாழமுடியாமல் நிற்கும் எனக்கும் தான் இது தண்டனை. அவளுக்காவது சந்து கூடவே இருக்கிறான். ஆனால் எனக்கு? நான் தனியாகத்தானே நிற்கிறேன்.”
“சும்மா எதையாவது சொல்லாதீர்கள் அத்தான். அவள் செய்தது பிழை, மன்னிக்க முடியாது, மறக்க முடியாது, ஒதுக்க முடியாது என்றுதானே அவளை விவாகரத்துச் செய்தீர்கள்? பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைச் சுவிசுக்குக் கூட்டிக்கொண்டு போனீர்கள்? உங்கள் தங்கையின் வாழ்க்கையில் பிரச்சனை என்றதும் உங்களுக்கு அவள் வேண்டும். மற்றும்படி அவளோடு நீங்கள் வாழமாட்டீர்கள். நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்!”
கோபத்தில் தன்னை மறந்து அத்தான் என்று அழைத்தவனின் பாசம், வறண்டு போய்க்கிடந்த கீதனின் மனதை நனைத்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் பேசினான். இல்லாவிட்டால் அந்தக் கோபக்காரன் இன்னும் முறுக்கிக் கொள்வானே!
“சுவிசுக்கு நான் அவளைக் கூட்டிக்கொண்டு வந்தது பிழைதான். ஆனால், பொய்யாக என்றாலும் என்றைக்குமே அவளை மட்டும் தான் என்னால் மனைவி என்று அடையாளம் காட்ட முடியும். ஆனால் பொய்யாக எப்படிடா வாழ்வது?”
“பொய்யாக உங்களை யார் வாழச் சொன்னது? இதுவே உங்கள் தங்கை யாராவது இப்படி நடந்திருந்தால் அவர்களையும் இப்படித்தான் உறவே வேண்டாம் என்று தூக்கிப் போட்டு இருப்பீர்களா?”
“நிச்சயமாக இல்லை. அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டியது என் கடமை. அதை நான் கட்டாயம் செய்தே இருப்பேன். காரணம் அது என் சகோதரம். இது மனைவி சத்யன். என் சரிபாதி. உயிராக நேசித்து, என் உலகமே அவள்தான் என்று வாழ்ந்தவளோடு கடமைக்காக வாழ முடியாதுடா.
“மனைவியைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டியதும் கடமைதான். என்றாலும், மனம் முழுக்க நேசத்தை மட்டுமே சுமந்து, காதலோடு வாழ்ந்துவிட்டு வெறுப்போடு அவள் பக்கத்தில் போகக்கூட முடியாது சத்தி. என்னால் அது முடியாதுடா. விருப்போ வெறுப்போ உண்மையாய் மட்டும்தான் என்னால் இருக்க முடியும். கட்டிய மனைவியைச் சுகித்து, சுவாசித்துத்தான் வாழ முடியுமே தவிரச் சகித்து வாழ முடியாதுடா. அப்படி வாழ்ந்தால் அது அவளுக்கும் அசிங்கம். எனக்கும் அசிங்கம்.
“அவள் உனக்கு அக்கா மட்டும் தான். ஆனால் எனக்கு? அதையெல்லாம் என்னால் உன்னிடம் சொல்ல முடியாது சத்தி. சொன்னாலும் உனக்கு இப்போது புரியாது. உனக்கும் திருமணமாகி, மனைவி என்று ஒருத்தி வந்து, அவளோடு உயிரும் உணர்வுமாக வாழ்ந்தால் மட்டும்தான் என் நிலை உனக்கு விளங்கும்.” என்றான் உள்ளத்தின் ஆழத்திலிருந்து கீதன்.
சத்யனோ அவன் சொல்வதைப் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிற பிடிவாதத்தில் இருந்தான். அவனுக்கு அவன் சகோதரியின் வாழ்க்கை மட்டுமே முக்கியமாகப் பட்டது!
“சரி! எனக்கு அது விளங்காமலேயே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், நீங்கள் கூப்பிட்டீர்கள் என்றதும், இதுநாள் வரை எதையுமே என்னிடம் மறைக்காத அக்கா எனக்குச் சொல்லாமல் சுவிஸ் வந்திருக்கிறாளே, அது ஏன் தெரியுமா? நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அதை மீறி அவளால் வரமுடியாது. அப்படி முடியாமல் போனால் நீங்கள் கவலைப் படுவீர்கள் என்றுதான் என்னிடம் சொல்லவில்லை. அப்படியானவளின் அன்பை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே! அது ஏன்?” என்று கேட்டான் அவன்.
இவனுக்கு இதற்கு மேலும் எதை எப்படியென்று சொல்லிப் புரிய வைப்பது என்று கீதன் யோசிக்க, “ஆனால் ஒன்றத்தான்! அவளுக்கு நீங்கள் இழைத்த அநீதிக்குக் கட்டாயம் அனுபவிப்பீர்கள்!” என்றான் ஆதங்கமும் ஆத்திரமுமாக.
அதைச் சொல்லும்போதே அவன் குரல் கரகரக்கத் தொடங்கவும், “நான் வைக்கிறேன்.” என்றபடி தொடர்பை துண்டித்தான் அவன்.
‘புதிதாக இன்னும் என்ன தண்டனை வேண்டிக் கிடக்கிறது? அதுதான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவளின்றி வாழவும் முடியாமல் அவளோடு சேரவும் முடியாமல் என்று நரக வேதனையை அனுபவிக்கிறேனே! இதை விடவுமா பெரிய தண்டனை ஏதும் இருக்கப் போகிறது?’ என்றெண்ணியபடி சோர்ந்துபோய்க் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான் கீர்த்தனன்.
எவ்வளவு சொல்லியும் என்னைப் புரிந்துகொள்கிறான் இல்லையே இந்தச் சத்யன்! புரிந்துகொள்ளாவிட்டால் போகட்டும் என்று தூக்கிப் போடவும் முடியவில்லை.
சுயநலமற்ற அந்த அன்பை, பாசத்தை உரிமையோடு அத்தான் என்றழைத்து அவன் பிடிக்கும் சண்டைகளை அனுபவிக்க மனம் ஏங்கியது.

