தனிமைத் துயர் தீராதோ 19 – 1

“அண்ணா, நான் ரெடி!” என்றபடி வந்து நின்றாள் பவித்ரா.

 

ஏற்கனவே தானும் தயாராகி லாப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தவன் தங்கையை நிமிர்ந்து பார்த்தான்.

 

முன்னும் பின்னுமாக ஒரு முறை சுழன்றவள், “எல்லாமே அண்ணி வாங்கித் தந்தவைகள். எனக்கு நன்றாக இருக்கிறதாண்ணா?” என்று அணிந்திருந்தவற்றைக் காட்டிக் கேட்டாள்.

 

அவளின் செய்கையில் புன்னகை உதிக்க, “நன்றாகவும் வெகு பொருத்தமாகவும் இருக்கிறது.” என்றவனுக்கு, மித்ராவை எண்ணிச் சற்று வியப்பாகத்தான் இருந்தது.

 

இதுவரை பவித்ராவை அவள் நேரில் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவள் எடுத்துக் கொடுத்திருந்த ஜீன்ஸ், புல்லோவர், காஷ்மீர் ஷால், ஜாக்கெட் என்று அனைத்துமே அவ்வளவு அளவாகப் பொருந்தி இருந்தது.

 

அன்று மகனை வாங்க அவன் சென்றபோது, “பவித்ரா வந்துவிட்டாளா?” என்று கேட்டவளிடம், “ம்.. நேற்றுத்தான் வந்தாள்.” என்றுவிட்டு மகனோடு வந்துவிட்டான் கீர்த்தனன்.

 

மாலை சந்துவை விடப் போனபோது, சில பைகளை அவனிடம் நீட்டி, “இதைப் பவியிடம் கொடுத்துவிடுங்கள்.” என்றாள்.

 

மறுக்கும் எண்ணத்தோடு வாயை திறந்தவனுக்கு, அவள் விழிகளில் தெரிந்த கெஞ்சலில் வார்த்தைகள் வர மறுத்துவிட்டன. ஒன்றும் சொல்லாது அதை வாங்கிக்கொண்டு வந்து பவியிடம் கொடுத்தவன், அதன்பிறகு அதை மறந்தே போயிருந்தான்.

 

இன்று பவித்ராவை அவன் தயாராகச் சொன்னதே இந்தக் குளிருக்குப் பொருத்தமான உடைகளை வாங்கிக் கொடுக்கத்தான்.

 

அதை முன்கூட்டியே யோசித்து நடந்திருக்கிறாள் மித்ரா. எப்போதுமே அவள் அப்படித்தானே.. என்று ஓடிய அவன் சிந்தனையை, “ஆனால் எனக்குத்தான் இதையெல்லாம் போட ஒருமாதிரி இருக்கிறது.” என்ற பவியின் குரல் கலைத்தது.

 

ஏன் என்கிற கேள்வியோடு அவளைப் பார்த்தான் தமையன்.

 

உடலோடு ஒட்டியிருந்த ஜீன்ஸ் மற்றும் புல்லோவர் ஒருவித சங்கடத்தையும் கூச்சத்தையும் கொடுப்பதைத் தமையனிடம் சொல்ல முடியாமல், “இதுவரை நான் ஜீன்ஸ் போட்டதே இல்லையா.. அதுதான்..” என்றாள் மெல்ல.

 

வியப்போடு தங்கையைப் பார்த்தான் கீதன். அப்படி ஜீன்ஸ் எல்லாம் போடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பவர் அவர்கள் வீட்டில் யாருமே இல்லை. உடம்பை மறைக்கத்தான் உடை என்பதற்கு இணங்க, கண்ணியம் குறையாமல் இருக்கவேண்டும். அவ்வளவுதான். இலங்கையில் இருக்கும்போது கவி போட்டுக்கொண்டு நிற்பதைக் கூட அவன் ஸ்கைப் வாயிலாகப் பார்த்து இருக்கிறானே.

 

“ஏன் பவி? அம்மா ஏதும் சொன்னார்களா?” என்று கேட்டான்.

 

“அம்மா ஒன்றும் சொன்னதில்லை அண்ணா. எனக்குத்தான் ஏனோ பிடிப்பதில்லை. எனக்குச் சுடிதாரும் நீட்டுப் பாவடையும் தான் போட பிடிக்கும். ஆனால், இங்கு இந்தக் குளிருக்கு அதையெல்லாம் போட முடியுமா என்ன? இவ்வளவையும் போட்டே எனக்கு நடுங்குகிறது.” என்று சிரித்தாள் அவன் தங்கை.

 

அவளின் பாவனையில் அவனது புன்னகை விரிய, “போகப் போகப் பழகிவிடுவாய்..” என்றவன் லாப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தான்.

 

“எங்கேண்ணா போகிறோம்?” குளிருக்கு இதமாகத் தலைக்குத் தொப்பியை அணிந்தபடி கேட்டாள் பவித்ரா.

 

“என் நண்பனின் வீட்டுக்கு. அவனுக்கு அஞ்சலி என்று ஒரு தங்கை இருக்கிறாள். அவளையும் கூட்டிக்கொண்டு போய் உனக்குத் தேவையானவைகளை வாங்கிவருவோம்.” அங்கே கதவருகில் தொங்கிய ஜாக்கெட்டை எடுத்து அணிந்தபடி சொன்னான் கீதன்.

 

“ஏன் அண்ணா? உங்களுக்கு எடுக்கத் தெரியாதா?”

 

“எனக்கே உன் அண்ணிதான் எடுத்துத் தருவாள். இதில் நான் எங்கே உனக்கு..” என்றவனின் பேச்சு சட்டென நிற்க திகைப்புற்றுப் போனான்.

 

அண்ணியா?

 

அவனது உதடுகள் உதிர்த்த வார்த்தையின் கனத்தைத் தாங்க முடியாமல் கண்களை இறுக மூடி, நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டவனுக்கு, தன்னை நிலைப்படுத்திக்கொள்ளச் சில நொடிகள் தேவைப்பட்டது.

 

ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு, “வா.. போகலாம்.” என்றுவிட்டு வேகமாக முன்னே நடந்தான்.

 

என்னதான் சமாளித்தாலும் மனம் மட்டும் அந்த அதிர்விலிருந்து வெளியே வர மறுத்தது.

 

மித்ராவை பிரிந்த பிறகான இத்தனை நாட்களில், ஒரே ஒருமுறை தாயிடம் தன் துயரத்தை கொட்டியதை தவிர அவன் யாருடனும் மனம்விட்டுப் பேசியதே இல்லை. இன்னொருவரிடம் சொல்லி ஆறுதல் தேடும் விடயங்களும் அல்லவே அவன் மனதில் இருப்பவை! அதோடு, அந்த வீட்டில் தன்னந்தனிமையில் இருப்பவன் யாரோடு கதைக்க?

 

பவி வந்த பிறகு, ஹீட்டர் போட்டு நிற்பாட்டுவது தொடங்கி, மின்னடுப்பில் சமைப்பதில் இருந்து, வீட்டில் இருக்கும்போது கூடக் காலுக்குச் சாக்ஸ் அணிந்து இலகுவான வீட்டுச் செருப்பு போடுவது வரை அவளுக்குச் சொல்லிக்கொடுப்பதும், குளிர் குளிர் என்று அவளின் புலம்பல்களைக் கேட்டுச் சிரிப்பதும் என்று இந்த நான்கு நாட்களாகத் தான் அவன் அந்த வீட்டில் சிரித்துப் பேசுகிறான்.

 

அப்படிச் சிரிக்கவும் கதைக்கவும் ஒரு நபர் அருகில் இருந்ததில் அவன் மனம் இளகிவிட்டதா?

 

மித்ராவின் அன்றைய கதறல் இன்றுவரை அவன் நெஞ்சுக்குள் இருந்து வதைப்பது மெய்தான்! அவளது செல்லில் அவனது போட்டோக்களைப் பார்த்ததில் இருந்து அவனுக்குள் பெரும் பாதிப்பு வந்திருப்பதும் உண்மைதான்! சங்கரி மாமியின் பேச்சு ‘மன்னிப்பு’ என்கிற திசையில் அவனைச் சிந்திக்க வைக்கத் தொடங்கியிருப்பதையும் மறுக்க முடியாதுதான்! ஆனாலும்.. அண்ணி என்று விட்டானே! அதன் பொருள்? அதற்குமேல் சிந்திக்கப் பிடிக்காமல் தலையை உலுக்கிக்கொண்டான்.

 

error: Alert: Content selection is disabled!!