தனிமைத் துயர் தீராதோ 19 – 4

அவளது பார்வை சங்கடத்தோடு வித்யாவிடமும் பாய, அப்போதுதான் தங்களுக்கு எதிரே இருந்த வித்யாவைக் கவனித்தான் நீக்கோ.

 

“ஹேய்! இது உன் தங்கை தானே.” என்றவன், “ஹாய்..” என்றான் அவளைப் பார்த்து.

 

வித்யாவும் புன்னகைத்து பதிலுக்கு ஹாய் சொல்ல, அவள் மடியிலிருந்து இவனையே குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

 

“இது உன் மகனா?” என்று வித்யாவிடம் கேட்கத் தொடங்கியவன், இடையிலேயே நிறுத்தி சந்தோஷை கூர்ந்து பார்த்தான்.

 

பார்த்தவனின் விழிகள் பளீரென மின்ன, “ஹேய் ஏஞ்சல். இவன் உன் மகன் தானே.. அதே கண்.. அதே குட்டி மூக்கு. அதே சின்ன வாய். முடி கூட அப்படியே உன்னதுதான்.” என்றவனின் கண்களில் எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோசம் இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு பாசமும் இருந்தது.

 

அவனது உயிர் தோழியின் மகன் அல்லவா!

 

அவள் தோளில் இருந்து கையை எடுத்தவன், இரண்டு கைகளையும் சந்தோஷிடம் நீட்டி, “என்னிடம் வருகிறாயா?” என்று கேட்டான்.

 

அப்பாடி! ஒரு வழியாகக் கையை எடுத்துவிட்டான் என்று மூச்சை இழுத்து விடுகையிலேயே தன்னை யாரோ பாப்பதுபோல், உறுத்து விழிப்பதுபோல் உணர்ந்தாள் மித்ரா.

 

உள்ளுணர்வு உணர்த்திய செய்தியில் நெஞ்சு படபடக்க விழிகளைச் சுழற்றியவளின் பார்வையில் அந்த ஹோட்டலுக்குள் வந்துகொண்டிருந்த கீர்த்தனன் பட்டான். மூச்சடைத்தது அவளுக்கு. உடல் முழுவதும் வியர்க்கத் தொடங்க, கைகால்கள் நடுங்கின. அச்சம் நிறைந்த விழிகளால் அவனை நோக்கினாள்.

 

சில நாட்களாய் அவன் முகத்தில் தென்பட்ட இளக்கம் மறைந்து, பழையபடி இறுகிய முகத்தோடு அவளை உறுத்து விழித்தபடி வந்தவனைப் பார்க்க நடுங்கியது.

 

இயல்பாக இருக்கமுடியாமல் தடுமாறும் தமக்கையைக் கவனித்து, அவளின் பார்வையைத் தொடர்ந்த வித்யாவும் கீதனைக் கண்டுகொண்டாள். கண்டவள் திகைத்தாள்.

 

இப்படி ஒரு கோபமுகத்தை அவளின் அத்தானிடம் அவள் கண்டதே இல்லை. இதற்கிடையில் அவர்களை நெருங்கியிருந்தான் கீதன்.

 

எப்போதோ ஒருமுறை மித்ரா அவனுக்கு ‘வாட்ஸ் அப்’ பில் அனுப்பியிருந்த போட்டோவில் பார்த்ததை வைத்துக் கீதனை இனம் கண்டுகொண்டான் நீக்கோ.

 

ஆனாலும், அதை உறுதிப்படுத்த எண்ணி, “இவர் உன் கணவர் தானே ஏஞ்சல்..” என்று அவளருகில் குனிந்து கிசுகிசுப்பாகக் கேட்டான்.

 

அதைக் கண்ணுற்ற கீதனின் முகம் கடுப்பதைக் கண்டு நடுங்கிக்கொண்டே, “ம்ம்..” என்று முனகினாள் மித்ரா.

 

உடனேயே புன்னகையோடு எழுந்து, கையை நீட்டி கீதனின் கரத்தைப் பற்றி, “ஹாய் கீதன். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் நீக்கோ, உங்கள் மனைவியின் உயிர் நண்பன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

ஒற்றைப் புருவத்தை ஏளனமாக உயர்த்தி, “உயிர் ‘நண்பன்’?” என்று நண்பனில் அழுத்தம் கொடுத்து மித்ராவை நோக்கிக் கேட்டவனின் விழிகள் அவளைப் பொசுக்கின.

 

கண்களில் கலக்கமும் கண்ணீரும் ஒருங்கே உற்பத்தியாக அதை மறைக்கும் பொருட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் அவள்.

 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வித்யாவுக்கு, அத்தானின் கோபமும் அக்காவின் கண்ணீரும் ஏன் என்று விளங்காத போதும், அந்த இடத்தில் எதுவோ சரியில்லை என்பது மட்டும் விளங்கியது. அதைச் சமாளிக்க எண்ணி, நீக்கோவையும் உபசரிக்கும் விதமாகப் பணியாளரை அழைத்து எல்லோருக்கும் குடிப்பதற்குக் குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்தாள்.

 

வித்யாவின் அருகில் அமர்ந்துகொண்ட தகப்பனிடம் தாவிய சந்தோஷை கவனித்துவிட்டு, “என்னிடம் வருகிறாயா?” என்று மீண்டும் கேட்டான் நீக்கோ.

 

மறுப்பாக முகத்தைத் திருப்பிக்கொண்டு, கையிலிருந்த புலி பொம்மையோடு அவன் தகப்பனின் தோள்வளைவில் முகத்தைப் புதைக்கவும், அதைப்பார்த்துப் பெரிதாக நகைத்தான் நீக்கோ.

 

“ஏஞ்சல், உன் மகன் உருவத்தில் மட்டுமில்லை செயலிலும் அப்படியே உன்னைப்போலவே இருக்கிறான்.” என்றான்.

 

அதைக்கேட்ட மித்ரா நெஞ்சுக்குள் குளிர் பரவ அச்சத்தோடு கீதனைப் பார்க்க, அவன் விழிகள் நீக்கோவுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த நெருக்கத்தைச் சுட்டி தீக்கங்குகளாய் மாறி அவளை எரித்தது.

 

சட்டென எழுந்துகொண்டாள் மித்ரா.

 

கீதனின் அருகில் செல்ல அவள் நினைக்கையிலேயே, அவளது கையைப் பற்றித் தடுத்த நீக்கோ, “எங்கே ஓடப் பார்க்கிறாய் ஏஞ்சல்? இன்று உன் கணவனிடம் உன்னைப் பற்றிச் சொல்லாமல் விடமாட்டேன்.” என்று பொய்யாக மிரட்டிக்கொண்டே மறுபடியும் அவளை இருத்தினான்.

 

இயலாமையோடு கீதனைப் பார்த்தாள் மித்ரா.

 

error: Alert: Content selection is disabled!!