தனிமைத் துயர் தீராதோ 19 – 5

அவள் புறமாக ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு ஒன்று தெரியுமா கீதன்? உங்கள் மனைவி முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என்னைக் கண்டு பயந்து இதே மாதிரித்தான் கையில் ஒரு பார்பி பொம்மையைப் பற்றியபடி நடுங்கிக்கொண்டு நின்றாள். அன்று அவளைச் சமாதானப் படுத்துவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே.. பிறகானால் எனக்குத்தான் இவளைக் கண்டாலே பயம். இந்தப் போக்கிரிப் பெண் எப்போது எதைச் செய்து வைப்பாள் என்று தெரியாது. ஒருநாள் என் ஷுவை மறைத்து வைப்பாள். இன்னொரு நாள் என் தோழிகளின் நம்பர்களை என் செல்லில் இருந்து அழித்துவிடுவாள்.” என்று அவளது குறும்புகள் ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி சிரித்தான் நீக்கோ.

 

கடவுளே..! இவன் ஏன் இதையெல்லாம் இப்போது வந்து சொல்கிறான் என்று அவள் மனதுக்குள் கலங்கித் தவிக்க, “இப்போதும் அதே குறும்புக் காரிதானா இல்லை நல்ல மனைவியாக நல்ல அம்மாவாக இருக்கிறாளா?” என்று கீதனிடம் கேட்டான் நீக்கோ.

 

“எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாது இல்லையா..” என்றான் கீதன் ஒருமாதிரி குரலில்.

 

அளவிடுவது போல் அவளைப் பார்த்துவிட்டு, “அது என்னவோ உண்மைதான்.” என்று ஒத்துக்கொண்டான் நீக்கோ.

 

“அதுசரி.. அவள் ஏன் உங்கள் வீட்டுக்கு வந்தாள்?” என்று விசாரித்தான் கீதன்.

 

அதுவரை, இலகுவாகக் கதைத்துக் கொண்டிருந்த நீக்கோவின் புருவங்கள் சுருங்கின. “ஏன் என்று உங்களுக்குத் தெரியாதா? ஏஞ்சல் சொல்லவில்லையா?” என்று குழப்பத்தோடு மித்ராவையும் கீதனையும் மாறி மாறி பார்த்தான்.

 

அப்போது, “ஹேய் நீக்கோ.. என்னை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு இங்கே என்ன செய்கிறாய் நீ?” என்று ஒரு பெண்குரல் கேட்கவும் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

 

நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்தி அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். “சாரி செல்லம்! என் தோழியைக் கண்ட சந்தோசத்தில் உன்னை மறந்துவிட்டேன்.”

 

“அப்படி என்னையே மறக்க வைக்கும் அளவுக்கு ஒரு தோழியா? யாரது?” மெல்லிய பொறாமை எட்டிப்பார்க்க கேட்டாள் அவள்.

 

“நீயே கண்டுபிடி பார்க்கலாம்?” அவனுக்கே உரித்தான புன்னகையோடு சொன்னான் நீக்கோ.

 

அங்கிருந்தவர்களை அளவிட்டபடி, புருவங்களைச் சுருக்கி யோசித்தவளின் விழிகள் சட்டெனப் பளிச்சிட்டது. “உன் சின்ன வயது தோழி! தொடர்பு விட்டுப் போயிற்று, எப்படியாவது அவளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பாயே. அவளா? உன் ஏஞ்சலா?” என்று ஆரவாரமாகக் கேட்டவள், அங்கிருந்த வித்யாவையும் மித்ராவையும் ஆவலோடு பார்த்தபடி, “இங்கே இரண்டு பெண்கள் இருக்கிறார்களே. இதில் யார் உன் ஏஞ்சல்?” என்று கேட்டாள்.

 

மித்ராவுக்கு விழிகள் கலங்கியது. என்றைக்குக் கீதன் அவளைப் பிரித்து வைத்தானோ அன்றிலிருந்து அவளின் அத்தனை நண்பர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டாள். அதில் முதலாவதாக இடம் பெற்றவன் நீக்கோ!

 

அதன் பிறகு அவனைப் பற்றி மனதால் கூட நினைக்கக் கூடாது என்று வைராக்கியமாக இருந்திருக்கிறாள். இன்றுவரை!

 

ஆனால் அவனோ.. அவளைத் தேடியிருக்கிறான். தன் துணையிடம் கூடச் சொல்லிக் கவலைப் பட்டிருக்கிறான். அவனளவில் என்றைக்குமே அவள் அவனது ‘சிறுவயது தோழி’!

 

மித்ராவை தோளோடு அணைத்து, “இவள் தான் என் ஏஞ்சல். அது அவளின் கணவர் கீதன். இந்தப் பெரிய மனிதன் அவர்களின் மகன். இது ஏஞ்சலின் தங்கை.” என்று அங்கிருந்தவர்களை அவளுக்கு அறிமுகப் படுத்தினான் நீக்கோ.

 

வலக்கையை உயர்த்தி விரல்களை அசைத்து, “ஹாய்..!” என்று அவள் சொல்ல, இப்போது அவளைக் காட்டி, “இவள் என் காதலி டியானா.” என்றான் நீக்கோ.

 

வித்யாவோ, காதலியா? அப்போ இந்த வயிறு? என்று அந்த டியானாவின் மேடிட்ட வயிறை நோக்கினாள்.

 

அந்த டியானாவோ, “உன்னைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏஞ்சல்..” என்றபடி மித்ராவை அணைத்துக்கொண்டாள்.

 

“எப்போது பார்த்தாலும் உன்னைப் பற்றியே பேசுவான் உன் நண்பன். அவனிடம் சொல்லிவை, கொஞ்சம் என்னையும் நினைக்கச் சொல்லி. எனக்குச் சில நேரங்களில் கோபம் கூட வரும். ஆனாலும் அவன் நல்ல காதலன் என்பதால் தப்பித்தான். எங்கள் காதலைப் போலவே உங்கள் நட்பும் அழகானது இல்லையா.” என்று கள்ளமில்லாது சிரித்தவளை உள்ளம் நெகிழ தானும் அணைத்துக்கொண்டாள் மித்ரா.

 

“உனக்கு இப்போது எத்தனை மாதம்?”

 

வெள்ளையாய் புன்னகைத்து, “ஒன்பது மாதம்..” என்றாள் டியானா.

 

தன்னருகில் நின்றிருந்த டியானாவின் வயிற்றில் மென்மையாக முத்தமிட்டு, “ஏஞ்சல், பிறக்கப்போகும் என் மகளுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறேன் என்று தெரியுமா உனக்கு?” என்று கேட்டான் நீக்கோ.

 

error: Alert: Content selection is disabled!!