தனிமைத் துயர் தீராதோ 20 – 3

அதில் தெரிந்த தவிப்பில், வேதனையில் அவளது நெஞ்சம் துடிக்க, வேகமாக அவன் கன்னங்கள் இரண்டையும் பற்றி, “உன் ஆசை என்ன நீக்கோ? அவளைப் பார்க்க வேண்டும், அவள் சந்தோசமாக இருப்பதைக் காணவேண்டும் என்பதுதானே. இன்று அவளைப் பார்த்துவிட்டாய். நன்றாக இருப்பாள் என்கிற நம்பிக்கையும் இனி உனக்கு இருக்கிறதுதானே?” என்று இதமான குரலில் கேட்டாள்.

 

அவன் தலை ஆமென்பதாக மேலும் கீழுமாக அசைய, “பிறகென்ன? நமக்கு அதுதான் முக்கியம். அதனால் மற்றவைகளை எண்ணிக் கலங்காதே. நீ கவலைப்பட்டால் என்னால் தாங்க முடியவில்லையே நீக்கோ.” என்றாள் தவிப்போடு.

 

அவள் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தவனும் ஒரு நெடுமூச்சை வெளியேற்றி, தன்னைத் தேற்றிக்கொண்டான்.

 

அப்போதும் அகலாத கவலையோடு தன் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்த டியானாவைப் பார்த்துப் புன்னகைத்து, அவளின் கையோடு தன் கையைக் கோர்த்து, “வா..” என்றவன், அவளோடு இணைந்து நடந்தான்.

 

 

இங்கே, தன் வீட்டுக்குள் புகுந்த கீதன், பவியைக் கூட மறந்தவனாக, புயலெனத் தன்னறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டான்.

 

விபத்துக்கள் ஏதுமின்றி எப்படிக் காரை ஓட்டினான், அஞ்சலியை எப்படி அவள் வீட்டில் இறக்கிவிட்டான் என்பது எல்லாம் அவன் அறியாதவை.

 

அந்தளவுக்கு அவனை நிலைகுலைய வைத்திருந்தது மித்ராவின் இறந்தகாலம்.

 

பதினாறு வயதுவரை தாய் தந்தையரின் அன்பை திகட்டத் திகட்ட அனுபவித்தவனுக்கே அதன் பிறகான அன்னையின் மாற்றம் பெரும் வலியை இன்று வரையிலும் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர் மேல் எவ்வளவுதான் கோபம் கொண்டாலும், வெறுப்பு மூண்டாலும், ‘பழைய அம்மா திரும்பக் கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என்கிற ஏக்கம் என்றுமே அவன் உள்ளத்தின் ஒரு மூலையில் உண்டு.

 

அவனுக்கே இப்படியென்றால் மூன்று வயதிலிருந்து ஒதுக்கப் பட்டவளின் நிலை என்ன? தாய் தந்தை பாசத்தையே அறியாதவளின் மனம் என்ன பாடுபடும்?

 

நெஞ்சை அந்த நினைவுகள் பிசைந்த அதேநேரம், இதையெல்லாம் தன்னிடம் சொல்லாமல் விட்டவளின் மீது கோபமும் ஆற்றாமையும் கூட எழுந்தது.

 

‘ஏன் மித்து என்னிடம் இதையெல்லாம் மறைத்தாய்? உன் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விசயத்தையும் யாரோ ஒருத்தன் தான் என்னிடம் சொல்கிறான். அந்தளவுக்கு உன் மனதுக்கு நான் தூரமானவனா?’

 

‘இல்லையே… அப்படி இல்லையே..’

 

வேண்டாம் வேண்டாம் என்று நினைத்தாலும் முடியாமல் அவன் நெஞ்சத்தைப் பிளந்துகொண்டு அன்றைய நாட்கள் அவன் மனக்கண்ணில் வலம் வந்தன. அப்போதெல்லாம் புரியாத புதிராக இருந்த பல விஷயங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்தது.

 

அன்று சட்டப்படி கணவன் மனைவியானவர்கள், நேராக அவர்கள் இருவருமாகச் சேர்ந்து பார்த்து வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கே வந்தனர். அவர்களோடு வால் பிடித்துக்கொண்டு சத்யனும் வித்யாவும்.

 

மூன்று அறைகள், ஹால் என்று கச்சிதமாக அமைந்திருந்த அந்தப் பெரிய வீட்டில் ஒரு அறையில் கீர்த்தனனின் பழைய வீட்டின் பொருட்கள் குடியேறி இருக்க, இன்னொரு அறையில் மித்ராவின் பொருட்கள் குடியேறி இருந்தது.

 

வீட்டுக்குள் வந்ததுமே, “அத்தான், உங்கள் திருமணம் நல்லபடியாக நடந்ததற்கு எங்களுக்கு நீங்கள் விருந்து தரவேண்டும்..” என்று கீதனைப் பிடித்துக்கொண்டாள் வித்யா.

 

அப்போது பதினாறு வயதே நிரம்பி இருந்தவளுக்கு, சத்யனைப் போல் அல்லாமல் அவள் செய்யும் குறும்புகள் அத்தனையையும் புன்னகையோடு ரசிக்கும் அத்தானை மிகவுமே பிடித்துப் போயிருந்தது.

 

“தந்துவிட்டால் போயிற்று! இன்று மதியமே போவோமா?” என்று கேட்டான் கீதன்.

 

“ஓ..! போகலாமே..!” என்று அவள் துள்ளிக் குதிக்க, “தின்பதற்கு என்றே பிறந்து வளர்ந்திருக்கிறாள் அக்கா இவள்.” என்றான் சத்யன்.

 

“நீ மட்டும் என்னவாம்? சாப்பிடாமல் காற்றைக் குடித்து வாழ்கிறாயா? இன்று அத்தான் தரும் விருந்தை நீ எப்படி விழுங்குகிறாய் என்று நானும் பார்க்கத்தானே போகிறேன்.”

 

அவர்கள் இருவரினதும் செல்லச் சண்டையைப் புன்னகையோடு கீதன் பாத்திருக்க, “உங்கள் இருவருக்கும் வேறு வேலையே இல்லை..” என்றபடி மித்ரா சமையலறைக்குள் சென்றாள்.

 

சற்று நேரத்தில் ஹாலுக்கு வந்தவளின் கையில் நான்கு தேநீர் கோப்பைகள் அடங்கிய ட்ரே இருந்தது. அதைப் பார்த்துவிட்டு, “பால் காய்ச்சவில்லையா?” என்று கேட்டான் கீதன்.

 

“பாலா? ஏன்?” புரியாமல் வினவினாள் மித்ரா.

 

“புது வீட்டுக்கு இன்றுதான் குடி வந்திருக்கிறோம். முதலில் பால் தானே காய்ச்சவேண்டும்.”

 

“ஓ..! சாரி. எனக்குத் தெரியாது.” என்றவளை மெல்லிய வியப்போடு பார்த்தான் கீதன். இங்குப் பிறந்து வளர்ந்தவள் என்றாலும், இது கூடவா தெரியாது?

 

error: Alert: Content selection is disabled!!