அன்று வேலை முடிந்துவந்த கீர்த்தனன் வீட்டின் அழைப்புமணியை அழுத்தினான். திறக்கக் காணோம் என்றதும் தன்னிடம் இருந்த திறப்பை கொண்டு திறந்து உள்ளே வந்தவனின் விழிகள் மித்ராவைத் தேடியது.
வீட்டுக்குள் எங்கும் அவளைக் காணவில்லை. மனமோ அனிச்சம் பூவாய் வடிப்போயிற்று!
அதுநாள் வரை எந்தச் சத்தம் சாவடியும் இல்லாமல் இருக்கும் வீட்டின் கதவை, தானே திறந்து வந்து, தன் வேலைகளைத் தானே பார்த்து வாழ்ந்தவனுக்கு, கடந்த இரண்டு வாரங்களாக அவன் வேலை முடிந்து வருகையில் மலர்ந்த புன்னகையோடு கதவைத் திறக்கும் மித்ராவைக் காண்பதே உற்சாகத்தைக் கொடுத்தது.
ஆரம்பத்தில், அவன் இருக்கும் வீட்டில் இன்னொரு நபர்.. அதுவும் ஒரு பெண் இருப்பது சற்றே சங்கடத்தைக் கொடுத்தது என்னவோ உண்மைதான். அதுநாள் வரை அது அவன் பழகியிராத, அனுபவித்திராத சூழ்நிலை. ஆனால், நாட்கள் போகப் போகப் பழகிப் போயிற்று!
பழகிப் போயிற்று என்பதை விட, தெளிந்த வானம் போலிருக்கும் முகத்தையும், அது சிந்தும் புன்னகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தான் என்பதுதான் உண்மை!
இன்றும் அந்த ஆவலோடு வந்தவனை வெறுமையாக இருந்த வீடே வரவேற்றது. மனமும் முகமும் வாட, கையைத் தூக்கி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். ஐந்துமணி. எப்போதும் நான்கு மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும் அவளுக்கு.
இன்று என்ன ஆனது? ஏதும் அதிகப்படி வேலையோ என்று எண்ணியபடி குளித்துவிட்டு வந்தான். அப்போதும் அவளைக் காணவில்லை. அதற்குமேல் எதையும் செய்யத் தோன்றாமல் சில்லென்று வீசும் காற்றை உள்வாங்கியபடி, பால்கனியில் சென்று நின்றுகொண்டான்.
எப்போதும் மாலை நேரக் கஃபே அவர்கள் இருவருமாகச் சேர்ந்துதான் அருந்துவார்கள். இன்றோ, தாகமாக இருந்தாலும் தனியே அருந்த பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடித்த பதத்தில் அவள் கலந்துதரும் கஃபேக்கு நாக்கும் மனமும் ஏங்கியது.
மித்ராவுக்குத் தினமும் காலையில் ஒன்பது மணிக்குத்தான் வேலை ஆரம்பம். கீதன் ஏழுமணிக்கே போகவேண்டும் என்பதால் அவன்தான் முதலில் எழுந்துகொள்வான். காலை உணவை தனக்குச் செய்கையில் அப்படியே அவளுக்கும் செய்து வைத்துவிட்டு வேலைக்குப் போய்விடுவான்.
மாலை நேரத்துக் கஃபேயை போலவே இரவு நேர உணவையும் அவனுக்கும் சேர்த்து மித்ரா செய்துவிடுவாள்.
அவளின்றி எதையும் செய்ய மனமில்லை அவனுக்கு. மாலையானதும் பறவைகள் மெல்ல மெல்ல அதன் கூட்டை அடைவதுபோல், அந்த நான்கு மாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் எல்லோரினதும் கார்களும் பார்க்கிங்கில் வந்து வந்து நிற்க, மித்ராவின் கார் நிற்கும் இடம் மட்டும் வெறுமையாக இருந்தது, அவன் மனதைப் போலவே!
நேரம் இப்போது ஆறையும் தாண்டி ஏழை நெருங்க, இருளும் மெலிதாகக் கவியத் தொடங்கியது. அதற்கு மேலும் காத்திருக்கும் பொறுமையற்று அவளுக்கு அழைத்தான்.
“ஹலோ..”
“எங்கே நிற்கிறாய் மித்ரா?”
“இங்கே என் அலுவலகத்தில்.”
ஆறுமணிக்கே வரித்திணைக்களம் மூடிவிடும் என்று தெரிந்திருந்ததில், “மணி ஏழாகிறதே.” என்றான் கீர்த்தனன்.
“முக்கியமான வேலை ஒன்று. அதை இன்றே முடித்தாக வேண்டும். அதுதான் நின்று செய்கிறோம். ”
“செய்கிறோம் என்றால் இன்னும் வேலை முடியவில்லையா?”
“ஆமாம் தனா. முடிய இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..” என்றவளுக்கு, இவன் ஏன் இதை விசாரிக்கிறான் என்கிற கேள்வி எழுந்தது.
அப்போதுதான் ஏழு மணியாகிவிட்டது என்று அவன் சொன்னது நினைவில் வர, “சாரி தனா. இன்று நான் வீட்டுக்கு வரவே ஒன்பது மணியாகிவிடும் என்று நினைக்கிறேன். அதனால் என்னால் இன்று இரவு உணவை செய்துதர முடியாது. நீங்களே செய்து சாப்பிடுகிறீர்களா? அதற்குப் பதிலாக நாளை காலை உணவையும் நானே செய்து தருகிறேன்.” என்றாள் அவள்.
முதலில் கீர்த்தனனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இவள் ஏன் சம்மந்தமே இல்லாமல் உணவைப் பற்றிக் கதைக்கிறாள் என்றுதான் நினைத்தான். அவள் சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்த்தவனுக்குச் சற்றே கோபம் தான் எட்டிப் பார்த்தது.
காலையில் அவன் செய்வதற்குப் பதிலாகத்தான் மாலையில் அவள் செய்கிறாளாமா? “நான் சாப்பாட்டுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன் என்று உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டான் சற்றே சூடான குரலில்.
“வேறு எதற்கு..? எப்போதும் காலையில் நீங்களும் அதற்குப் பதிலாக மாலையில் நானும் சமையலை பார்ப்பது தானே வழமை. இன்று அதை நான் செய்யவில்லை என்பதால் தானே…” என்று அவள் யோசனையோடு இழுக்க, கீதனுக்குத் தலையை எங்காவது கொண்டே முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

