தனிமைத் துயர் தீராதோ 21 – 2

“அதைத்தவிர வேறு காரணமே இருக்காதா? எப்போதும் நான் வேலை முடிந்து வரும்போது வீட்டில் இருப்பவள் இன்று இல்லை என்றால் எங்கே என்று யோசிக்க மாட்டேனா? உன்னைக் காணவில்லை என்று தேடமாட்டேனா?” என்று கேட்டவனின் குரலில் சூடு குறையவே இல்லை.

 

“ஓ… சாரி. நான் இதை யோசிக்கவில்லை தனா. இனி இப்படி லேட்டானால் உங்களுக்கு அழைத்துச் சொல்கிறேன்.” என்றவளுக்கு, மனதில் மெல்லிய ஆனந்தம் எட்டிப் பார்த்தது.

 

அவளைக் காணவில்லை என்று தேடவும் ஒருவன் இருக்கிறான். அதுநாள் வரை எத்தனை மணிக்கு போனாள், எத்தனை மணிக்கு திரும்பி வந்தாள், எங்கே என்ன செய்கிறாள் என்று யாருமே கேட்டதில்லை. சத்யனும் வித்யாவும் அவள் மேல் பாசம் கொண்டவர்கள் தான் என்றாலும், இப்படி அக்காவையும் கவனிக்க வேண்டும் என்கிற அளவுக்கு இன்னும் புத்தி வராதவர்கள்!

 

கீதனோ, ‘இவள் ஒருத்தி! எதற்கு எடுத்தாலும் ஒரு சாரியை சொல்லிவிடுவாள்!’ என்று சலித்துக்கொண்டான்..

 

“சரி… உன்னைக் கூட்டிக்கொண்டு வர நான் வரவா?” என்று தணிந்துவிட்ட குரலில் கேட்டான்.

 

“தேவையில்லை தனா. இதெல்லாம் எனக்குப் பழக்கம் தான். நானே வருவேன்.”

 

“உனக்கு இதெல்லாம் பழக்கம் என்பதால் உன்னை அப்படியே விட முடியாது. எத்தனை மணியானாலும் பரவாயில்லை வேலை முடிந்ததும் எனக்குச் சொல்லு. நான் கூப்பிட வருகிறேன்.”

 

அவன் சொன்ன தொனியில் மறுக்க முடியாமல், “பிறகு என் காரை என்ன செய்வது?” என்று கேட்டாள் மித்ரா.

 

“திரும்பி வரும்போது நீ உன் காரில் வா. நான் என் காரில் வருகிறேன்.”

 

“எதற்குச் சும்மா அலைய நினைக்கிறீர்கள்? பெட்ரோலும் அநியாயம் தானே.”

 

“எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக எதையாவது சொல்லியே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை மித்ரா. நான் சொல்வதையும் கொஞ்சம் கேட்கலாம்.” என்றுவிட்டுக் கைபேசியை அணைத்தான் கீதன்.

 

அவனால் அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சிறுபிள்ளை என்று சொல்ல முடியாத அளவுக்கு, தம்பி தங்கைகளைப் பார்ப்பது தொடங்கி, தன் அலுவலக வேலையைச் சீராகச் செய்வதில் இருந்து, வீட்டை பராமரிப்பது வரை அவளின் ஒவ்வொரு நடவடிக்கையுமே ஒரு பக்குவப்பட்ட பெண்ணின் செயலாகத்தான் இருக்கும்.

 

பிறகும் ஏன் இப்படி இருக்கிறாள்? இப்படியான பல விசயங்களில் அவள் ஒரு புரியாத புதிர்தான்.

 

 

அன்று சனிக்கிழமை. வித்யாவின் பள்ளித் தோழனின் பிறந்தநாள். சின்ன வயதில் இருந்தே மித்ராவுக்கும் சத்யனுக்குமே அவனைத் தெரியும் என்பதால் அவர்களையும் அவன் அழைத்திருந்தான்.

 

ஏற்கனவே தயாராகியிருந்த மித்ரா குளித்துக்கொண்டிருந்த கீர்த்தனன் தயாராகி வரும் வரைக்கும் ஹாலில் அமர்ந்திருந்து, தன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள்.

 

அப்போது, அங்கிருந்த கீர்த்தனனின் கைபேசி சத்தமெழுப்பியது. எடுப்பதா வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டு அதைப் பார்த்தாள்.

 

அதன் திரையில் ‘அம்மா’ என்று விழ, எடுக்க இவள் தயங்க ஓய்ந்துபோனது கைபேசி. மீண்டும் அது ஒலியெழுப்ப, ஏதும் அவசரமோ என்று எண்ணியவள் தயக்கத்தை உதறி, அழைப்பை ஏற்று, “ஹலோ..” என்றாள்.

 

மகனின் செல்லில் திடீரென்று பெண்குரல் கேட்டதில் முதலில் குழம்பிப் போனார் லக்ஷ்மி. அந்தப் பக்கம் எந்தப் பதிலும் இல்லாமல் இருந்ததில், “யார் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள் மித்ரா.

 

“முதலில் நீ யார் என்று சொல்? என் மகனின் செல் எப்படி உன்னிடம் வந்தது?” என்று அதட்டினார் லக்ஷ்மி.

 

எந்தவித ஆரம்பமும் இன்றி அவர் அதட்டியதும் சட்டெனப் பதில் சொல்ல இயலவில்லை அவளால். “நா..ன் மித்ரா..”

 

“மொட்டையாக மித்ரா என்றால் என்னவென்று நினைப்பது? நீயேன் என் மகனின் செல்லில் பேசுகிறாய்? எங்கே தனா?”

 

“அவர் குளிக்கிறார்..”

 

“குளிக்கிறானா? அவன் வீட்டில் உனக்கு என்ன வேலை?” என்று அவர் கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் மித்ரா.

 

“ஏய்! என்ன பேச்சைக் காணோம்? நீ யார், அங்கே என்ன செய்கிறாய் என்று சொல்!”

 

அப்போது குளித்துமுடித்து வந்த கீர்த்தனனுக்கு, தன் செல்லை வைத்துக்கொண்டு முழித்துக்கொண்டு நின்ற மித்ராவைக் கண்டதும் சிரிப்புத்தான் வந்தது. இதழ்களில்அரும்பிய புன்னகையோடு, யார் என்று கையால் சைகை செய்து கேட்டான்.

 

“உ…ங்கள் அம்மா..” என்றபடி, அவனிடம் செல்லை நீட்டினாள் மித்ரா.

 

 

error: Alert: Content selection is disabled!!