தனிமைத் துயர் தீராதோ 21 – 3

அரும்பிய புன்னகை அப்படியே மடிய, அவன் முகம் சற்றே கடினப்பட்டது. அவளிடம் இருந்து செல்லை வாங்கி, காதுக்குக் கொடுத்து, “சொல்லுங்கம்மா…” என்றான்.

 

“யாரடா அவள்? கேட்டால் ஏதோ பெரிய இவள் மாதிரி நான் மித்ரா என்கிறாள். அவள் ஏன் உன்னிடம் வந்திருக்கிறாள்?” என்று கேட்டார் அன்னை.

 

“என் மனைவி என்னிடம் வராமல் வேறு எங்கேம்மா போவது?” என்று நிதானமாகக் கேட்டான் கீதன்.

 

“என்னது?” வாய்விட்டே அதிர்ந்தார் லக்ஷ்மி.

 

அன்று, ‘திருமணம் என்பது என் வாழ்க்கையில் ஒரு தடவைதான். அது யமுனாவாக இருந்தாலும் சரி, வெள்ளைக்காரியாக இருந்தாலும் சரி’ என்று சொன்னவன் அதைச் செயலில் காட்டுவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

 

ஏதோ கோபத்தில் கத்துகிறான், கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என் வழிக்கு வருவான் என்றுதான், ‘விசாவுக்காக ஒரு வெள்ளைக்காரியை கட்டு’ என்று சொன்ன அன்றைக்குப் பிறகு அவனோடு கதைக்காமல் இருந்தார்.

 

அதுநாள் வரை அவனை விட்டுப் பிடித்தது போதும், இனி என்ன சொன்னாலும் கேட்பான் என்றெண்ணி அவர் அழைக்க, அவனோ அவர் தலையில் இடியை இறக்கினான்.

 

தன் பேச்சை மீறி எதையும் செய்யமாட்டான் என்கிற அவரின் அபார நம்பிக்கையை முற்றாகத் தகர்த்திருந்தான் அவன்!

 

“சும்மாவேனும் எனக்குக் கோபத்தைக் கிளப்புவதற்காகப் பேசாதே தனா. எனக்கு என் மகனைப் பற்றித் தெரியும். என் சொல் மீறமாட்டான்.” என்றவரின் குரலில் நடுக்கம்.

 

சொல்லும் சொல்லில் நம்பிக்கை இருப்பின் குரலில் நடுக்கத்துக்கு அவசியமில்லையே!

 

‘இந்த நம்பிக்கையில் தானே இத்தனை நாட்களும் என்னை உங்கள் விருப்பம்போல் ஆட்டி வைத்தீர்கள்.’ என்று மனதில் நினைத்தவன், “பொய்யில்லை அம்மா. மித்ரா இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் பெண். அவளைச் சட்டப்படி மணந்துகொண்டேன். இது நடந்து இரண்டு வாரமாகிறது.” என்றான் மைந்தன்.

 

“என்னடா சொல்கிறாய்? இப்படிச் செய்யப் போகிறேன் என்று ஒரு வார்த்தையாவது சொன்னாயா நீ? அம்மா அப்பா என்று நாங்கள் எல்லோரும் எதற்கு இருக்கிறோம்?”

 

“ஏன் சொல்லாமல்? கடைசியாகக் கதைத்தபோது சொன்னேனே.”

 

அவன் பேச்சில் சுள்ளென்று கோபம் எழுந்தாலும் அதை ஒதுக்கி, இனி என்ன செய்யலாம் என்று வேகமாக யோசித்தார் லக்ஷ்மி. சட்டென வழி கண்டவராக, “சரி. விசாவுக்காகத்தானே அவளைக் கட்டினாய். பரவாயில்லை. உடனேயே அவளை வெளியே போகச் சொல். அவளோடு ஒரே வீட்டில் இருக்க வேண்டாம். பிறகு விவாக ரத்து செய்துவிட்டு யமுனாவைக் கட்டு.” என்றார் வேகமாக.

 

அந்தப் பேச்சில் தாய் மேல் இருந்த கொஞ்சநஞ்ச பாசமும் அற்றுப்போனது அவனுக்கு. “விசாவுக்காக என்றாலும் அவளோடு கடைசிவரை வாழ்வதற்காகத்தான் திருமணம் செய்தேன் அம்மா. விவாக ரத்துச் செய்ய இல்லை! மித்ரா என் மனைவி. அவள் என் வீட்டில் தான் இருப்பாள்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

“அப்போ யமுனாவின் கதி?” சுதி ஏறிய குரலில் கேட்டவரிடம், “இந்தக் கேள்விக்கு அன்றே பதில் சொல்லிவிட்டேன்.” என்றவன், தாயின் அனுமதி இன்றிக் கைபேசியை அணைத்தான்.

 

திரும்பத் திரும்ப யமுனாவை பேச்சில் இழுக்கும் அன்னை மேல் எரிச்சல் பொங்கியது. அதோடு, அவரிடம் ‘நான் கீர்த்தனனின் மனைவி’ என்று சொல்லாதவள் மேலும் கோபம் எழ, அங்கே பால்கனியில் நின்றிருந்த அவளிடம் சென்றான்.

 

“இங்கே ஏன் நிற்கிறாய்?”

 

அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து, “நீங்கள் உங்கள் அம்மாவோடு கதைக்கையில் நான் எதற்கு நந்தி மாதிரி? அதுதான் இங்கே வந்தேன்..” என்றாள் அவள்.

 

உங்கள் அம்மாவா? அப்போ அவர் அவளுக்கு உறவில்லையா? எதையும் வெளியே காட்டாமல், “அம்மா என்ன கேட்டார்?” என்று கேட்டான்.

 

“உங்களை எங்கே என்று கேட்டார்..”

 

“வேறு ஒன்றும் கேட்கவில்லையா?” அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்துக் கேட்டான் கீதன்.

 

“என்னை யார் என்று கேட்டார்.”

 

“நீ என்ன சொன்னாய்?”

 

“நான் மித்ரா என்றேன்.”

 

இதென்ன இப்படி விடுத்து விடுத்துக் கேட்கிறான் என்று தோன்றினாலும் பதில் சொன்னாள் மித்ரா.

 

“நீ மித்ரா மட்டும் தானா?” என்றவனின் குரலில் கூர்மை ஏறியிருந்தது.

 

அந்தக் கேள்வியின் பொருள் புரியாமல் அவனைப் பார்த்தாள் மித்ரா. “நான் வேறு என்ன…?” அதை எப்படிக் கேட்பது என்றே தெரியவில்லை அவளுக்கு.

 

கீர்த்தனனின் கோபத்தின் அளவு கூடிக்கொண்டே போனது. “என் மனைவி இல்லையா?” என்று அவன் கேட்டபோது, “அட… ஆமாமில்லையா!!” என்றவளை என்ன செய்தால் தகும் என்றிருந்தது அவனுக்கு.

 

“பிறகேன் அதைச் சொல்லவில்லை?”

 

“ஓ.. அதனால் தான் கோபமாகக் கதைத்தாரா? எனக்கு அது நினைவில் வரவில்லை தனா.” என்று அவள் சொன்னபோது, எரிச்சலும் சினமும்தான் பொங்கியது.

 

error: Alert: Content selection is disabled!!