அதுவே கீதனின் கோபத்தை இன்னும் கிளறியது!
“இதைத்தான் இங்கே இருந்து நீ தினமும் செய்கிறாயா?” என்று கேட்டவனிடம், “தினமும் இல்லை தனா. சனி ஞாயிறுகளில் மட்டும். அதுவும் எப்போதாவது தான்.” என்றாள் மித்ரா அவசரமாக.
“என்ன பேசுகிறாய் நீ? எப்போதாவது என்றால் மட்டும் வளரும் பிள்ளையிடம் சிகரெட் வாங்கிவரச் சொல்லலாமா?” என்று அவன் அவளிடம் அடிக்குரலில் கொதிக்க, “ஈஸ்வரி! உன் மகன் இன்னும் போகாமல் என்ன செய்கிறான்?” என்று சண்முகலிங்கம் கத்தும் குரல் கேட்டது.
இனியும் சத்யன் போகாவிட்டால் அதே வேலையை ஈஸ்வரி செய்யும் நிலை வரும்! சத்யன் கோபப்பட்டுக் கத்தும் நாட்களில் அதுதான் நடக்கும். அப்படி நடந்தால் அது இன்னும் கேவலமாகி விடாதா?
“அவர் செய்வது பிழைதான். ஆனால், அதைப் போதையில் இருக்கும் அவரிடம் சொல்ல முடியாது தனா. அம்மாவோடுதான் கத்தத் தொடங்குவார்.” என்றாள் மித்ரா அழாக்குறையாக.
கீர்த்தனன் தன் மாமியாரை திரும்பிப் பார்த்தான். ஒரு மூலையில் சுவரோடு சுவராக, முகம் கன்ற கூனிக் குறுகிப்போய் நின்றிருந்தார். ஒருமுறை விழிகளை மூடித்திறந்து தன்னை நிதானப் படுத்தினான் கீதன்.
“நீ நில். நானே போய் வாங்கிவருகிறேன்..” என்றபடி அவன் நடக்க, “ஐயோ தனா வேண்டாம்..” என்று மித்ராவும், “அத்தான் வேண்டாம்! நானே போகிறேன்..” என்று சத்யனும் பதறினார்கள்.
அவர்களை ஒரு பார்வையால் அடக்கிவிட்டு போய் வாங்கிக்கொண்டு வந்தவன், அதைச் சண்முகலிங்கத்தின் முன்னால் வைத்தான்.
அவரோ, அவனையும் தனக்குச் சேவை செய்ய வைத்துவிட்ட திமிரோடும் வெற்றிக் களிப்போடும் சிவந்த விழிகள் மின்ன அவனைப் பார்த்தார்.
அதை லட்சியமே செய்யாமல், மித்ராவிடம் வந்து, “வா போகலாம்!” என்றான்.
தாயின் கண்ணசைவில், “ஏதாவது குடித்துவிட்டுப் போங்கள் அத்தான்..” என்ற வித்யாவுக்கு, “அங்கே சாப்பிட்டதே வயிறு புல் வித்தி..” என்றுவிட்டுக் கிளம்பியேவிட்டான் கீர்த்தனன்.
கிளம்பும் முன், “நாளைக்கு இருவரும் அங்கே கட்டாயம் வாருங்கள்.” என்று சத்யனிடம் சொல்லவும் மறக்கவில்லை அவன்.
காரில் ஏறிய பிறகும் கீர்த்தனன் காரை இயக்காமல் இருக்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள் மித்ரா.
அதற்காகவே காத்திருந்ததுபோல், “சத்தி வித்தியை நம்மோடு கூட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன?” என்று கேட்டான் அவன்.
உள்ளே திடுக்கிட்டாலும், “ஏன்?” என்று கேட்டாள் மித்ரா.
“என்ன ஏன்? அங்கே உன் அப்பா இருந்த கோலத்தைப் பார்த்தாய் தானே? அதையெல்லாம் சத்யன் பார்ப்பதே கூடாது. இதில் வித்தியும் இருக்கிறாள். பிள்ளைகள் வளரும் சூழ்நிலையா அது? நன்றாக இருக்கும் பிள்ளைகளை அவரே கெடுத்துவிடுவார்.” என்றான் கீதன் கொதிப்புடன்.
அவன் சொல்வதுபோல் அவர்களைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள மித்ராவுக்கும் ஆசைதான். இன்று நேற்றல்ல, முழுநேரமாக அவள் வேலை செய்யத் தொடங்கிய நாளில் இருந்து அவளின் விருப்பம் அதுதான்.
அதன்பிறகு அம்மாவின் நிலை? தனித்துப் போவாரே! சத்யனும் இல்லை என்றால் அம்மாவை இன்னும் படுத்தி எடுப்பார் அப்பா.
அதோடு, கிழமை நாட்களில் இப்படி அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் இல்லை அவர். பிறகு அடுத்தநாள் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாதே!
வார இறுதிகளில் மட்டும் தான் இந்தக் கோலம். அதனால் வார இறுதிகளில் தன்னோடு சத்யனையும் வித்தியையும் வைத்துக் கொள்கிறவள் உறங்க மட்டும் அங்கே அனுப்பி வைப்பாள். அதையே கீதனிடம் சொன்னாள் மித்ரா.
ஆனால், அவனோ இப்படிப் புகையும் குடியும் இருக்கும் வீட்டில் அவர்கள் வளர்வதே கூடாது என்று நின்றான்.
“இதைப் பார்த்துப் பார்த்து வளரும் பிள்ளைகள் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவர்களும் பழகிவிடுவார்கள். பிறகு கிடந்து தவிப்பதில் அர்த்தமில்லை. எதுவும் வரமுதல் காக்கவேண்டும்.” என்றான் அவன்.
“என் தம்பியும் தங்கையும் அப்படி நடக்கமாட்டார்கள்!” உறுதியாகச் சொன்னாள்.
என்னவோ சத்யனும் வித்யாவும் கெட்டே போய்விடுவார்கள் என்பது போலல்லவா இருக்கிறது அவன் பேச்சு!
“நடந்துவிட்டால் என்ன செய்வாய்?” அவள் குரலில் தெரிந்த பேதத்தை உணர்ந்தும், விடாமல் கேட்டான் கீதன்.
“அவர்களைப் பற்றி எனக்குத் தெரியும்.”
“எனக்கும் தெரியும்தானே. ஆனால், சூழ்நிலைகள் ஒவ்வொருவரையும் எப்படி மாற்றும் என்று சொல்லமுடியாது.” என்றவன், “இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்.” என்றான் முடிவாக.

