தனிமைத் துயர் தீராதோ 23 – 1

“என்ன முடிவு?” என்று அவசரமாகக் கேட்டாள்.

 

“அவர்கள் இருவரையும் எங்களோடு வைத்திருக்கும் முடிவுதான்.”

 

“இல்லையில்லை வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும்.”

 

“ஏன்?” புருவங்கள் சுருங்கக் கேட்டான் கீர்த்தனன்.

 

“என்ன இருந்தாலும் அம்மா அப்பாவோடு இருப்பது மாதிரி வராது.” எனும்போதே அவள் குரல் உடைந்துவிடும் போலிருந்தது.

 

அவளுக்குக் கிடைக்காத பாக்கியம், அவர்களாவது ஒரு குடும்பச் சூழலில் வளரட்டுமே!

 

“இதென்ன பேச்சு? நான் என்ன அங்கே போகவே கூடாது என்கிறேனா? நம்மோடு இருக்கட்டும். விரும்பியபோதெல்லாம் அங்கும் போய்வரட்டும் என்றுதானே சொல்கிறேன்.”

 

பிறகு, அவளைப்போல அவர்களும் அல்லவா தந்தையின் கோபத்துக்கு ஆளாவார்கள்! இதை அவனிடம் சொல்ல முடியாதே! சொன்னால் அவளைப் பற்றியும் அவளுக்கு நடந்தவைகளைப் பற்றியும் சொல்ல நேரிடும். இப்போதே இந்தத் துள்ளு துள்ளுகிறவன் கட்டாயம் அம்மாவையும் தூக்கி எறிவான் அப்பாவையும் தூக்கி எறிவான். சத்யன் வித்யாவை அந்த வீட்டுப் பக்கமே போகக் கூடாது என்றும் சொல்லக் கூடியவன்! அவர்களும் இவனின் பேச்சை தட்டவே மாட்டார்கள். அதுவும் சத்யன் பெற்றவர்கள் மீது முழு வெறுப்பையும் வளர்த்து வச்சிருக்கிறவன். பெட்டியை கட்டிக்கொண்டு வந்தே விடுவான்.

 

பிறகு அப்பாவிடம் அம்மா படாத பாடுபட, சண்முகலிங்கம் சத்யன் வித்யாவையும் வெறுத்துவிடுவார். இல்லை! கூடவே கூடாது! ரணப்பட்ட மனது கத்திச் சொன்னது!

 

“அவர்கள் அங்கேயே இருக்கட்டும்.” அமைதியான குரலில் என்றாலும் முடிவுபோல் மித்ரா சொல்லவும், அவளை முறைத்தான் கீதன்.

 

“அது சரியே வராது!” என்றான் அவனும் பிடிவாதமாக.

 

அவனை நேராகப் பார்த்தாள் மித்ரா.

 

“இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கையிலேயே நான் சொன்னது சத்யன் வித்யா என் பொறுப்பு என்று. அதில் நீங்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை.” என்றாள் தெளிவான குரலில்.

 

அவனுக்கோ சூடு நன்றாகவே ஏறியது. “நானும் அன்றே அவர்கள் என் பொறுப்பு என்று சொல்லிவிட்டேன். என் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படியோ போகட்டும் என்று என்னாலும் விடமுடியாது.”

 

“நானும் அப்படி விடமாட்டேன். அவர்களை நான் பார்த்துக்கொள்வேன், அதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.”

 

“நீ பார்த்துக்கொண்ட லட்சணத்தைத் தான் இன்று பார்த்தேனே..” என்று சீறிவிட்டு அதே சீறலோடு காரை கிளப்பினான் கீர்த்தனன்.

 

அவனது முதல் கோபம்! அவர்களுக்கிடையிலான முதல் பிணக்கு! மனதில் வருந்தினாள் மித்ரா.

 

ஆனாலும் மனம் மட்டும் முரண்டிக்கொண்டு நின்றது. அவர்களின் பழக்க வழக்கத்தில் என்ன குறை கண்டானாம்? அவளின் வளர்ப்பில் என்ன பிழையாம்?

 

வீட்டுக்கு வந்தவர்கள் ஒருவரோடு மற்றவர் பேசிக்கொள்ளவே இல்லாமல், ஏன் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவரவர் அறைக்குள் முடங்கிக்கொண்டனர். அந்த ஒருமாத காலமாக, அவரவர் அறைக் கதவருகில் நின்று புன்னகைத்த முகமாக இரவு வணக்கத்தைச் சொல்லி உறங்கச் செல்வதுதான் வழக்கம். இன்று அது மாறிப் போனதில் மனம் கனத்துப் போனது மித்ராவுக்கு.

 

உறக்கம் வருவேனா என்று நின்றது. அதே கனத்துடன் அடுத்தநாள் காலையும் விடிந்தது. எப்போதும் போல் காலைத் தேநீரையும், உணவையும் கீதனே தயாரித்தபோதும் அவளோடு ஒருவார்த்தை கதைக்கவில்லை அவன்.

 

உணவு வேளை முடிந்ததும் உடையை மாற்றிக்கொண்டு கீழே இறங்கியவன், அவர்கள் இருவரினதும் காரையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டுசென்று கழுவிக்கொண்டு வந்து நிறுத்தினான்.

 

அவன் வீட்டுக்குள் வரவும் சத்யன் வித்யா வரவும் சரியாக இருந்தது.

 

நேற்றைய நிகழ்வுகளை எல்லாம் முற்றிலுமாக மறந்தவர்களாக, வீட்டுக்குள் வந்ததுமே, “அத்தான், அண்ணாக்குக் கார் வாங்கித் தருவதாகச் சொன்னீர்களாம். எனக்கும் வாங்கித் தருவீர்கள் தானே. இவன் என்னவோ தனக்கு மட்டும் தான் எல்லாம் கிடைக்கும் என்று சொல்கிறான்.” என்று புகார் வாசித்தாள் வித்யா.

 

“உனக்கும் வாங்கித் தருவேன். அதற்கு முதலில் நீ லைசென்ஸ் எடு.” என்றான் கீர்த்தனன் புன்னகையோடு.

 

“ஹை! நன்றித்தான்!” என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு தொங்கியவள், “உன் காதில் விழுந்ததா?” என்று கேட்டு தமயனையும் சீண்டினாள்.

 

“லைசென்ஸ் எடுத்தால் எனக்கு என்ன வாங்கித் தருவீர்கள்?” என்று திரும்பவும் அவள் கீதனிடம் கேட்க, “என்ன வேண்டும் சொல்?” என்று கேட்டான் அவன்.

 

“ஹண்டி?”

 

“சரி! அந்த நேரம் எது புதிதாக வருகிறதோ, அதை வாங்கித் தருகிறேன்.” என்று கீதன் சொன்னதும், அவளுக்கோ பெருத்த கொண்டாட்டம்.

 

பின்னே, சத்யனுக்கு அப்படி எதுவும் லைசென்ஸ் எடுத்தபோது கிடைக்கவில்லையே! “ஹேஹே.. அண்ணா பார்த்தியா? பார்த்தியா?” என்று சத்யனை வெறுப்பேற்ற,

 

“அத்தான்! நான் ஏற்கனவே லைசென்ஸ் எடுத்துவிட்டேன். அப்போ எனக்கும் நீங்கள் ஏதாவது வாங்கித் தரவேண்டும்!” என்றான் சத்யன் இப்போது.

 

“அதெல்லாம் உனக்கு எதுக்குச் சத்தி? உன்னிடம் தான் நல்ல ஹண்டி இருக்கிறதே..” என்றாள் மித்ரா அவசரமாக.

 

வித்யாதான் சின்னவள். இவனும் அவளைப்போலக் கேட்க, இந்தக் கீர்த்தனன் அதற்கும் நீ வளர்த்த லட்சணத்தைப் பார் என்று சொல்லிவிட்டால்?

 

அப்போதுதான் தமக்கையின் முகத்தைக் கவனித்தான் சத்யன். அது பொலிவிழந்து கிடந்தது. காரணத்தைத் தேடி புருவங்களைச் சுருக்கியவனுக்கு முதல்நாள் இரவு நடந்தவைகள் நினைவில் வந்தது.

 

அப்பாவால் அக்காவுக்கும் அத்தானுக்கும் ஏதாவது பிரச்சனையோ? என்று அவன் யோசிக்கையில், “ உனக்கு என்ன வேண்டுமோ கேள். அத்தான் வாங்கித் தருகிறேன்.” என்றான் கீர்த்தனன்.

 

 

error: Alert: Content selection is disabled!!