தனிமைத் துயர் தீராதோ 24 – 2

அப்படி மணந்துகொண்டவளின் மீது அவனுக்குள் தினந்தினமும் பெருக்கெடுப்பது அன்பல்லவா! நேசமல்லவா!

 

அவள் இல்லாத வாழ்க்கை… நான் செத்துவிடுவேன்! உறுதியாகச் சொன்னது மனது!

 

ஆனால், இதே கீதன் தான் பின்னொரு நாளில் அவளை விட்டு சட்டப்படி பிரிந்தும் போனான்! அதை அன்று அறியாதவனின் மனமும் முகமும் தெளிந்தது.

 

அதைக் கவனித்தபோதும், “எந்தப் பெண்ணைக் கண்டாலும் சலனப்படுகிறவனாக நீ இருந்திருந்தால் இங்கு எத்தனையோ பெண்களோடு பழகியிருப்பாய். இங்கே கண்ட கண்ட பெண்களுடன் கூத்தடித்துக்கொண்டு அங்கே ஊரில் இருக்கும் அம்மா அப்பாவுக்கு நல்லபிள்ளைக்கு நடித்திருப்பாய். அப்படி நீ நடந்திருந்தாலும் யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது சொல்? எவ்வளவோ சுதந்திரம் உள்ள இந்த நாட்டிலேயே ஒருத்தியையும் திரும்பிப் பார்க்காமல் வாழ்ந்த நீயாடா பெண்களைக் கண்டதும் சலனப் படுகிறவன்? உள்ளும் புறமும் உரசிப் பார்க்கத் தேவையே இல்லாத சொக்கத் தங்கம் நீ! அதனால் சும்மா கண்டதையும் நினைத்து உன்னையும் குழப்பி உன் வாழ்க்கையையும் சிக்கலாக்கிக் கொள்ளாதே!” என்றான் அர்ஜுன் கண்டிப்புடன்.

 

“ம்ம்.. இப்போதான்டா நிம்மதியாக இருக்கிறது. இவ்வளவு நாட்களும் உள்ளூரத் தவித்துக்கொண்டு இருந்தேன்.” என்றான் கீர்த்தனன், அதுநாள் வரை அவனைக் கட்டியிருந்த தளை நீங்கியவனாய்.

 

“அடுத்தப் பிரச்சனை என்ன.. உன் மனைவி உன்னைத் தேடிவரவில்லை என்பதுதானே. அதற்கும் நான் ஐடியா தருகிறேன். அதற்கு முதலில் நீ..” என்று ஆரம்பித்தவனைத் தடுத்து நிறுத்தினான் கீர்த்தனன்.

 

“வேண்டாம் அர்ஜூன். அது செயற்கையாகவோ திட்டம் போட்டோ நடக்கவேண்டாம். அவளாக என்னை விரும்பி என்னிடம் வரவேண்டும். அதுவரை என் மனதை அவளுக்கு உணர்த்தியபடி நான் காத்திருப்பேன். இப்படிக் கனவுகளோடு காத்திருப்பதும் சுகம் தான்டா.” என்றான் மாறாத முறுவலோடு.

 

“ம்கும்! இதில் எல்லாம் விவரமாகத்தான்டா இருக்கிறாய்.” என்று பொய்யாகச் சலித்தான் அர்ஜூன். “வயது இருபத்தியெட்டாகிவிட்டதே. பையன் இன்னுமே கன்னி கழியாமல் இருக்கிறானே என்று சொல்ல வந்தால்.. இன்னும் கிடந்து காய்டா..”என்றான் பொய்க்கோபத்தோடு.

 

வாய்விட்டுச் சிரித்தான் கீர்த்தனன். “அதை என் கன்னியே செய்யட்டும்.” என்றுவிட்டு, அதுநாள் வரை இருந்த உறுத்தல்கள் மறைந்துவிட்ட உல்லாச மனநிலையோடு வீட்டுக்குக் கிளம்பினான்.

 

“ஒரு நாளைக்கு மித்ராவைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வாடா.” என்று அழைப்பை விடுத்து அவனை அனுப்பிவைத்தான் அர்ஜூன்.

 

இங்கே வீட்டுக்கு வந்தவனோ, அழைப்பு மணியை அழுத்தினான். எப்போதுமே அதை அழுத்திவிட்டுக் காத்திருக்கையில் அவன் மனம் பரபரக்கும் தான். இன்று சற்று அதிகமாகவே பரபரத்தது.

 

மெல்லிய பாதடி ஓசை அவன் மனத்தைக் கொள்ளை கொண்டவள் கதவை நோக்கி வருவதை உணர்த்த, ஆவலோடு காத்திருந்தான்.

 

கதவு முழுவதுமாக அல்லாது மெல்லத் திறக்கப்பட, பூரணச் சந்திரனாய் மின்னிய முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகையைச் சிந்தி, “வாருங்கள் தனா.” என்று வரவேற்றாள் மித்ரா.

 

விழிகளால் அவளை விழுங்கியபடி உள்ளே அவன் ஓரடியை எடுத்துவைக்க, அவன் வருவதற்கு ஏதுவாகச் சற்றே ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டு நின்றாள் மித்ரா. ஒருக்களித்துத் திறந்திறந்த கதவு வழியாக நுழைந்தவன், தன் தேகம் உரசி கதவு உடைந்துவிட்டாலும் என்று அவளை நன்றாகவே உரசிக்கொண்டு உள்ளே வந்தான்.

 

அவன் செய்கையிலும், அவனது விசமப் பார்வையிலும் பொய்யாக முறைத்தவளின் முகத்தில் கோபப் புன்முறுவல் ஒன்று பூத்தது! ‘கள்ளன்! வேண்டும் என்றே செய்கிறான்!’ அவன் செய்கையை ரசித்த மனம் செல்லமாக வைதுகொண்டது!

 

அவனோ தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தவனாய் அந்த இடத்திலேயே நின்றுவிட்டான். அவளைச் சேதாரம் செய்ய நினைத்தவனின் தேகம் தான் இப்போது சேதாரப்பட்டு நின்றது.

 

அங்கேயே நின்றால், அர்ஜூனிடம் சொன்னதைச் செய்யமுடியாமல் போய்விடுமோ என்று பயந்து, “குளித்துவிட்டு வருகிறேன்..” என்று முணுமுணுத்துவிட்டு, தன்னுடைய அறைக்குள் புகுந்துகொண்டான்.

 

மித்ராவோ சமையலறைக்குள் புகுந்துகொண்டாள். கீதனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் ஒருவிதக் கூச்சம் தடுக்க, தோசை செய்கிறேன் பேர்வழி என்று அங்கேயே நின்று தோசைக்கல்லுடன் மல்லு கட்டத் தொடங்கினாள்.

 

கீதனுக்குள் கொளுந்துவிட்ட உணர்வுகள் குளித்ததில் அடங்கினாலும், குளியலறையை விட்டு வெளியே வந்தவனின் விழிகள், மலர்களை நாடும் வண்டினைப்போல் அவளைத் தேடியது.

 

சமையலறையில் அவள் நிற்பதைக் கண்டுவிட்டு, “என்ன செய்கிறாய் மித்ரா?” என்று கேட்டுக்கொண்டு அங்கே அவனும் வந்தான்.

 

error: Alert: Content selection is disabled!!