இலகுவான சட்டையும் சரமும் அணிந்து, குளித்ததற்கு அடையாளமாய்ப் புத்துணர்ச்சியுடன் இருந்த முகமும், சிலுசிலுத்துக்கொண்டு நின்ற சிகையுமாக வந்தவனைப் பார்த்து, சாதரணமாகப் புன்னகைக்க முயன்றபடி, “தோசை சரியாக வருகிறதா என்று பார்த்தேன்..” என்றாள் மித்ரா.
அதைக் கேட்டவனின் முகம் மலர்ந்தது. அவனுக்குப் பிடிக்கும் என்று அவன் சொன்னதைக் கேட்டு, தன் தாயிடம் செய்முறை அறிந்து செய்து தருவதாகச் சொன்னவள், சொன்னதோடு மட்டுமாக நில்லாமல் அவனுக்குச் செய்து தரவும் நினைக்கிறாளே!
அவளாக அவனை நோக்கி வரவேண்டும் என்று ஆசை கொண்டவனின் மனம், அவளின் அந்தச் செய்கையைத் தனக்குச் சார்பாகவே எண்ணிக் களித்தது.
துள்ளல் குரலில், “அதற்கு எதற்கு இப்போதே செய்கிறாய்? நேரம் ஆறு மணிதானே..” என்று கேட்டுக்கொண்டே அடுப்பை பார்த்தவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
தோசை மாவை கல்லில் வட்டமாக ஊற்றத் தெரியாமல் ஊற்றி, அது என்ன வடிவம் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்தது. இதில் குண்டும் குழியுமாக என்று மிகப் பரிதாபமாகக் காட்சியளித்தது.
பொங்கிய சிரிப்பை அவன் அடக்குவதைக் கவனித்துவிட்டு, “சிரிக்காதீர்கள் தனா! அது வட்டமாக வரமாட்டேன் என்கிறது. அதற்கு நான் என்ன செய்யட்டும்?” என்று பொய்க் கோபத்தோடு அவனை முறைத்தவளின் முகத்திலும் முறுவல்!
அவளை வருடிச்சென்ற அவன் பார்வையில் அவளின் தேகம் சிலிர்த்தது.
‘இப்போதெல்லாம் இவனுக்கு இதே வேலையாகவே போய்விட்டது!’ என்று மனம் செல்லக் கோபம் கொள்ள, பார்வையைத் தோசையின் பக்கம் திருப்பித் தன் படபடப்பை அடக்க முயன்றாள்!
அடுப்பில் இருந்த தோசை வெந்துவிடவும் அதை எடுத்துவிட்டு அடுத்ததை அவள் ஊற்ற முயல, “கொஞ்சல் பொறு..” என்று தடுத்தான் கீர்த்தனன்.
அவளின் பின்னால் வந்து நின்று, கரண்டியை அவள் கையோடு சேர்த்து பற்றி, சட்டியில் இருந்த மாவை அள்ளினான்.
தன்னோடு உராய்ந்துகொண்டு நின்றவனின் தேகம் உண்டாக்கிய அதிர்வலைகளைத் தாங்கமுடியாமல் சற்றே முன்னுக்கு நகர்ந்து, அவனுக்கும் தனக்குமிடையில் இடைவெளியை உருவாக்க முயன்றாள் மித்ரா.
தோசையில் கவனமாக இருந்தவனோ, “ஹேய்! அடுப்புக்கு அருகே போகாதே..” என்றபடி மற்ற கையால் அவள் இடையை வளைத்து தன்னோடு சேர்த்துப் பிடித்தான்.
மித்ரவுக்கோ சகலதும் ஸ்தம்பித்தது.
தன் ஒருபக்கத் தோளுக்கு மேலால் தெரிந்த அவன் முகத்தை விரிந்த விழிகளில் அதிர்ச்சியோடு பார்க்க, “அங்கே பார்!” என்றான் அவன் தோசையில் கவனமாக.
சாவி கொடுத்த பொம்மையாக அவள் அடுப்பை பார்க்க, அவள் கையோடு சேர்த்துப் பற்றியிருந்த கரண்டியில் அள்ளிய மாவை தோசைக் கல்லுக்கு எடுத்துச் சென்று, கல்லில் ஊற்றி அதை வட்டமாகச் சுற்றினான் கீர்த்தனன்.
மெல்ல மெல்ல தோசை பெரிய வட்டமாக உருவாக, இருந்த நிலை உண்டாக்கிய அதிர்ச்சியையும் மீறி, “வட்டமாக வருகிறதே தனா!” என்றாள் உற்சாகக் குரலில்.
“ம்ம்.. முதலில் எல்லோருக்கும் உன்னை மாதிரித்தான். பிறகு பிறகு சரியாக வந்துவிடும்.” என்றவன், கரண்டியை தோசைமா இருந்த சட்டியில் வைத்துவிட்டு அந்தக் கையையும் அவளைச் சுற்றிப் போட்டுக்கொண்டான்.
கிட்டத்தட்ட அவனது கைச்சிறைக்குள் அவள் என்கிற நிலை!
சொல்லமுடியாத சுக மயக்கத்துக்குள் ஆட்பட்டாள் மித்ரா. இப்போதெல்லாம் அவள் அடிக்கடி அனுபவிக்கும் இன்ப வேதனை இது!
காரணம் மட்டும் புரிய மறுத்தது!
அவனோ அவளின் தோள் வளைவினூடாக அவள் முகத்தைப் பார்த்து, “உன் அம்மாவிடம் நீ சமையல் பழகிக் கொள்ளவில்லையா மித்து?” என்று கேட்டான்.
‘இவன் என்ன ஒருமுறை மித்ரா என்கிறான் இன்னொரு முறை மித்து என்கிறான்..’ என்று மனம் கேள்வி கேட்டாலும், “ம்ஹூம்..” என்றாள் எதோ ஒரு சொப்பன உலகில் மிதந்தபடி.
“ஏன்டா? உனக்குத்தான் சமைக்கப் பிடிக்குமே..”
“பிடிக்கும் தான். பதினெட்டு வயதிலேயே தனியாக வந்துவிட்டேன் இல்லையா.. அதுதான்..” என்றவளுக்குத் தொண்டை அடைக்க, கீதனுக்குமே அதைக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.
அவளின் வளர்ப்புத் தந்தையின் குணத்தைத் தான் அவன் அன்று பார்த்தானே.
“நிரம்பவும் கஷ்டப்பட்டியா?” என்று கேட்டவன், அந்தக் கேள்வியின் கனத்தைக் குறைக்க முயல்பவன் போல், கைகளின் இறுக்கத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி, அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து மெல்ல உரசினான்.
ஆறுதலை கொடுத்த அதே வேளையில் அவளுக்குள் எதையோ புரட்டிப் போடவும் தொடங்கியது அவன் செய்கை!
தன்னை மறந்தவளாக, “ம்ம்..” என்றவளின் விழியோரங்கள் நீ கசியத் தொடங்கிற்று! அத்தனை நாட்களும் நெஞ்சுக்குள் அடைத்து வைத்திருக்கும் அத்தனை துன்பங்களையும் அவனிடம் சொல்லிக் கதறிவிடத் துடித்தாள்.

