தனிமைத் துயர் தீராதோ 25 – 4

“அப்போ அத்தான் மட்டும் குடிக்கலாமா? அவர் கேட்டால் மட்டும் கொடுக்கிறாய்?” என்று நியாயம் கேட்டான் அவன்.

 

‘எல்லாம் உங்களால் வந்தது!’ என்று கீதனை முறைத்தாள் மித்ரா. அதைச் சுகமாக உள்வாங்கியவனோ, அவள் கொடுத்த கஃபேயை அருந்திக்கொண்டே கண்ணைச் சிமிட்டிச் சிரித்தான்.

 

கடவுளே..! அவனை முறைத்துவிட்டு, “அவர் சொல்வதைக் கேட்டால் தானே சத்தி?” என்றாள் தம்பியிடம்.

 

“சரிக்கா… இனி குடிக்கவில்லை. இன்றைக்கு மட்டும் தா.” என்றான் அவன்.

 

“முடியாது போ! ஜூஸ் இருக்கிறது. வேண்டும் என்றால் சொல் தருகிறேன்.”

 

“எனக்குக் கஃபே தான் வேண்டும்.” என்றவன், கீதன் அருந்திக் கொண்டிருந்த கப்பை தான் பறித்து அருந்தத் தொடங்கினான்.

 

கீதனுக்கோ மிட்டாயை பறிகொடுத்த குழந்தையின் நிலை. “இன்றைக்கு மட்டுமாவது அவனுக்குக் குடு மித்து! இல்லாவிட்டால் என்னைக் குடிக்க விடமாட்டான்.” என்றான் பரிதாபமாய்.

 

“முடியாது!” என்று உறுதியாக மறுத்தாள் அவள்.

 

அவளிடம் தன் கெஞ்சல் எடுபடாமல் போனதில், “டேய்! நானே அவளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு கப் வாங்கினேன். அதையும் நீ பறித்துக்கொண்டால் எப்படிடா? உன் அத்தான் பாவம் தானே. கொடுடா சத்தி..” என்றான் இப்போது சத்யனிடம்.

 

“முடியாது! வேண்டும் என்றால் உங்கள் மனைவியிடம் இன்னொரு கப் வாங்கிக் குடியுங்கள்.” என்றவன் அதை வேக வேகமாகப் பருக, “அவள் தந்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பாள்.” என்றவன், சத்தியிடம் இருந்து கஃபேயை இப்போது தான் பிடுங்கிக்கொண்டான்.

 

அவன் ஒருவாய் அருந்த முதலே திரும்பப் பறித்துக்கொண்டான் சத்யன்.

 

இருவரும் ஒரு கப்புக்காக அடிபட, “கஃபேயை என் கார்ப்பெட்டில் ஊற்றினீர்கள் என்று வையுங்கள். இருவருமாகச் சேர்ந்து அதைக் கழுவுவீர்கள்!” என்றாள் மித்ரா மிரட்டலாக.

 

“அம்மாடி! அதற்கு நான் இதைக் குடிக்காமலே இருப்பேன்.” என்ற சத்யன் கீதனிடம் கப்பை கொடுத்தான்.

 

ஆவலோடு வாங்கிப் பார்த்தால் அங்கே நீர் வற்றிய கிணறாகக் கிடந்தது கப்!

 

சத்யனை கீர்த்தனன் முறைக்க, “விடுங்கத்தான்! இதெல்லாம் உங்களுக்குப் புதுசா என்ன?” என்று வாரினான் சத்யன்.

 

உண்மைதான்! சத்யனின் இந்த உரிமையும், சண்டையும் இப்போதெல்லாம் கீர்த்தனனுக்கு வழமையாக நடப்பவை தான்!

 

வித்யாவும் வந்துவிடவே, கீதனின் விசாவை பார்த்துவிட்டு, அந்தச் சந்தோசத்தைக் கொண்டாட எங்காவது போகவேண்டும் என்று வழமைபோல் துள்ளிக் குதித்தாள் அவள்.

 

“இவள் ஒருத்தி! என்ன சாட்டுக் கிடைக்கும் ஊரைச் சுற்ற என்று காத்திருப்பாள்!” என்றான் சத்யன்.

 

“நான் என்ன உன்னிடமா கேட்கிறேன்? என் அத்தானிடம் தானே!” என்றவள், கீதனின் மறுபுறம் வந்து அமர்ந்தபடி, “ஏன் அத்தான் நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்களா?” என்று கேட்டாள் சலுகையோடு.

 

“வித்திக்குட்டிக்கு இல்லாததா? எங்கே என்று சொல், போகலாம்!” என்றான் அவன் கனிவோடு.

 

சத்யனை ஒரு வெற்றிப் பார்வை பார்த்துவிட்டு, “ஐரோப்பா பார்க் போவோமா அத்தான்?” என்று கேட்டாள் அவள்.

 

“இன்றைக்கா?” நேரம் மதியமாவதை உணர்ந்து கீதன் யோசனையோடு கேட்க, “இன்றைக்குப் போனால், போனதும் திரும்பி வரத்தான் நேரம் சரியாக இருக்கும். நாளை மறுநாள் சனி தானே. அன்று போவோம்.” என்றாள் வித்தி.

 

கீதன் கேள்வியாக மித்ராவைப் பார்க்க, அவள் சம்மதமாகத் தலையை அசைக்க, “சரி! சனியே போவோம். அப்போ நாளை இரவு நீங்கள் இருவரும் இங்கேயே தங்குங்கள். அப்போதான் காலையில் நேரத்துக்கே இறங்கலாம்.” என்றான் கீதன்.

 

சொன்னது போல அந்தச் சனிக்கிழமை காலையில் நேரத்தோடு புறப்பட்டனர் நால்வரும்.

 

இப்போதெல்லாம் அவர்கள் நால்வரும் எங்குப் போவதாக இருந்தாலும் கீதனே கார் ஓட்டுவதில், “இன்றைக்கு நான் ஓட்டவா?” என்று மித்ரா கேட்டாள்.

 

“அத்தான்! அக்காவிடம் காரைக் கொடுத்துவிட்டு இந்தப் பிசாசையும் முன்னுக்குத் தள்ளிவிடுங்கள். நாம் பின்னுக்கு இருந்து கேம் விளையாடலாம், வாருங்கள்.” என்று சத்யனும் அழைத்தான்.

 

“நீதான் பிசாசு!” என்று அவனை முறைத்துவிட்டு வித்யா முன்னிருக்கையில் அமர்ந்துகொள்ள, சரியென்று திறப்பைக் கொடுத்துவிட்டு சத்யனோடு பின்னால் அமர்ந்துகொண்டான் கீதன்.

 

அது அவனுக்குமே ஒருவித புது அனுபவம்! அதுநாள் வரை அவனது காரில் பின்னிருக்கையில் அமர்ந்துவரும் சந்தர்ப்பங்கள் அவனுக்கு அமைந்ததே இல்லை!

 

அவர்கள் இருவரும் கேம் விளையாட, வித்தி தமக்கையோடு எதையோ சலசலக்க, மித்ரா அவர்களின் ஊர்மனைக்குள் இருந்து வெளியேறி வேக வீதியில் காரை செலுத்திக்கொண்டிருந்தாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!