அன்றைய நாள் மிக அழகாகப் புலர்ந்தது. எழுந்ததுமே கீதனை பார்த்துவிட மித்ராவின் மனதில் ஆவல் உண்டாயிற்று! இப்போதெல்லாம் அதுவே அவளது வடிக்கை!
அடுத்த வருடமே குழந்தையோடு போட்டோ எடுப்போம் என்று சொன்னால் மட்டும் போதுமா? அதற்கான எந்த வேலையையும் பார்க்கக் காணோம்! பிறகு எப்படிக் குழந்தை பிறக்குமாம்? மனதில் சிணுங்கினாள்.
ஐரோப்பா பார்க் போய்வந்து ஒருமாதம் கடந்திருந்தது. விதம் விதமாக அணைப்பதும், அவளைச் சீண்டுவதும், ரசனையோடு பார்ப்பதும் மட்டுமே நடந்தது! அதைத்தாண்டி அவன் போகவேயில்லை!
எப்போது போவான் என்று அவளைத்தான் தவிக்க வைத்துக்கொண்டிருந்தான்.
இன்றும் அதே ஏக்கங்கள் தொடர, காலைக் கடன்களை முடித்து அப்படியே தலைக்குக் குளித்துவிட்டு வெளியே வந்தவளை கீதனின் இறுகிய அணைப்பு வரவேற்றது.
இனிமையாக அதிர்ந்து, அந்தக் காலை நேரத்து ஏக்கங்கள் அத்தனையும் வடிய, அவன் மார்பில் உரிமையோடு சாய்ந்துகொண்டாள் அவனது மனையாள்!
“ஹேய் பெண்டாட்டி! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என்று அவளின் காதுக்குள் வாழ்த்தியவனின் உதடுகள் கன்னக்கதுப்பை உரசியபோது, தேகமெல்லாம் புது இரத்தம் பாய்ந்தது மித்ராவுக்குள்!
ஆச்சரியமாய் அவனைப் பார்த்து, “இன்று என் பிறந்தநாளா?” என்று கேட்டாள்.
“இதையெல்லாமா மறப்பாய்?” என்றபடி அவள் நெற்றியில் முட்டிவிட்டு, “அதுசரி.. பிறந்தநாளுக்குப் பரிசு எதுவும் இல்லையா?” என்று கேட்டான்.
“நான் தருவதா? பரிசு நீங்கள் தான் எனக்குத் தரவேண்டும்.” அவளும் பொடிவைத்துப் பேசினாள்.
“அப்போ தரட்டுமா?” அவள் இதழ்களின் மேல் பார்வையை நிறுத்தி அவன் கேட்டபோது, முடிக்கற்றைகள் நிறைந்த அவன் மார்புக்குள் முகத்தைப் புதைத்தபடி, “ம்ம்..” என்றாள் வெட்கத்தையும் மீறிய ஆவலோடு.
“இப்படி முகத்தை மறைத்தால் எப்படித் தருவதாம்?”
“அது உங்கள் கெட்டித்தனம்.”
“இன்றைக்கு நீ அதைப் பார்க்கத்தானே போகிறாய்..” என்றவன், அவள் தாமரை முகத்தை இரு கைகளிலும் தாங்கி, மிக மிக மென்மையாகத் தன் இதழ்களை அவள் இதழ்களில் பதித்தான் முதன் முதலாக!
விழிகள் சுகமாய் மூட, தளிர்மேனி சிலிர்க்க, மென்கரங்கள் இரண்டும் அவனை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள அவன் கொடுத்த முத்தத்துக்குள் மொத்தமாக மூழ்கிப்போனாள் மித்ரா.
மென்மையாய் ஆரம்பித்த முத்தம் வன்மையாய் மாறி, அவனிடமிருந்து அவள் இதழ்கள் விடுபட நெடிய நேரம் பிடித்தது. விடுவித்த போதோ அவள் மொத்தமாகத் தன் சுயத்தை இழந்திருந்தாள்.
தன் கைகளில் தளர்ந்து கிடந்தவளின் காதருகில் குனிந்து, “பரிசு பிடித்ததா?” என்று கிறக்கமான குரலில் கிசுகிசுத்தான். வெட்கத்தில் அவன் மார்புக்குள் அவள் முகத்தை மறைக்க முயல, அதற்கு விடாமல் தடுத்து, அவளின் வெட்கத்தை ரசித்தான் அவன்.
“த..னா!” அவள் சிணுங்க சிரித்தான் அவன். ஒரு பையை, “பிரித்துப்பார்..” என்று கொடுத்தான்.
ஆவலோடு அவள் பிரிக்க, அங்கே பச்சை உடலில் சிவப்புக் கற்கள் ஒளிவீசிக் கொண்டிருந்த சேலையும், அதற்குப் பொருத்தமாய்ப் பச்சையும் சிவப்பும் கற்கள் சேர்ந்த கழுத்தாரமும் அவளைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தன!
“எனக்கா இதெல்லாம்?” என்று ஆவலோடு அவள் கேட்ட, “யார் இப்போ பிறந்தநாள் பரிசு கேட்டதாம்?” என்றான் அவன் அவள் இதழ்களை மொய்த்தபடி.
“நீயும் எனக்குப் பரிசு தரவேண்டும்.. அது இரவுக்கு..” என்றான் கிறங்கிய குரலில்.
கிடைத்த பரிசின் தித்திப்பு இன்னும் அடங்காமல் நின்றவளோ, அன்றிரவு தான் அவனுக்குக் கொடுக்கப் போகும், அவன் தன்னிடமிருந்து எடுக்கப் போகும் பரிசை எண்ணித் திரும்பவும் நாணமெனும் கூட்டுக்குள் புகுந்துகொள்ள, அவனோ தன்னிடம் சற்றுமுன் படாதபாடு பட்ட அவளின் செவ்விதழ்களை ஆசையோடு தன் பெரு விரலினால் வருடினான். அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான். இடையில் பதிந்திறந்த கரமோ அதன் அழுத்தத்தைச் சற்றே கூட்டியது!
அவன் விழிகளில் தெரிந்த தாபத்தில், கரம் காட்டிய வேகத்தில், அவனின் சின்னச் சிரிப்பு எழுப்பிய மோகத்தில் உருகிப் போனவளின் தேகம் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நடுங்க, அதைத் தாங்க முடியாமல் அவன்மீதே சரிந்தவளின் இதழ்களை, மீண்டும் தன்வசப்படுத்தினான் அவளின் கீர்த்தனன்!
முடிவின்றித் தொடர்ந்த முத்தத்தைப் பிடிப்பின்றி முடித்து வைத்தவன், “இது தொடர்ந்தால் இன்று நான் போட்ட ப்ளான் எல்லாமே கெட்டுவிடும். அதனால் நீ சேலையைக் கட்டிக்கொண்டு வா! இன்று நாம் ஓரிடத்துக்குப் போகிறோம்.” என்றுவிட்டு அவளின் அறையை விட்டு வெளியேறினான்.
எல்லாம் சரிதான்! ஆனால், அவளுக்குச் சேலையும் கட்டத் தெரிய வேண்டுமே, அதைக் கட்டிக்கொண்டு அவன் கூப்பிடும் இடத்துக்கெல்லாம் போக. அதோடு ஏனோ அவளின் பிறந்தநாளை ஒட்டி பத்து நாட்கள் லீவும் எடுக்கச் சொல்லியிருந்தான் கீர்த்தனன். அது ஏன்? இன்று என்ன திட்டம்?
ஒன்றும் புரியாமல் சேலையை வைத்துக்கொண்டு முழித்துக்கொண்டு அந்த இடத்திலேயே நின்றிருந்தாள் மித்ரா.
அன்னை சேலை கட்டிய தருணங்களை மீட்டிப் பார்த்து, பிளவுசையும் உள் பாவாடையையும் அணிந்து கொண்டவளுக்குச் சத்தியமாக அதற்கு மேலே என்ன செய்வது என்று தெரியவே இல்லை!
என்ன செய்யலாம்? அந்தச் சேலையைப் பிரட்டிப் பிரட்டிப் பார்த்தாள். சட்டெனத் தன் கைபேசியை எடுத்து ‘யு டூப்’ சென்று சேலை கட்டுவது எப்படி என்று தேடத் தொடங்கிய தருணத்தில், பெயருக்குத் தட்டிவிட்டு அவளது கதவை திறந்துகொண்டு வந்தான் கீர்த்தனன்.
அவளை எத்தனை எத்தனையோ கோலங்களில் கற்பனையில்கண்டபடி வந்தவன், நிச்சயமாய் அப்படி ஒரு அழகு கோலத்தில் நினைத்துப் பார்க்கவேயில்லை.
அடுத்த அடி எடுத்துவைக்க இயலாமல் அந்த இடத்திலேயே தன்னை மறந்து நின்றவனை, விரல் நகத்தைக் கூட அசைக்காமல் தன் காலடியில் வீழ்த்தியிருந்தாள் மித்ரா!

