அதுனால் வரை அவள் கோவிலுக்கே சென்றதில்லை. இன்றோ அந்தக் கோவிலை விட்டு வரவே பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்திருந்து சற்றுநேரம் பொழுதை அமைதியாகவும் நிறைவாகவும் கழித்தவர்கள், மதிய உணவையும் வெளியே முடித்துக்கொண்டு, விருப்பம்போல் சுற்றிவிட்டு, சத்யனையும் வித்யாவை அவர்களின் வீட்டில் இறக்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.
மயக்கும் மாலைப் பொழுதில் அழகான அமைதி அவர்களுக்குள்!
அதுநாள் வரை அவர்கள் இருவரும் தான் அந்த வீட்டில் இருந்திருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான்! ஆனாலும், அவன் முன்னால் நிற்க முடியாமல், விழுங்கும் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் மெல்லத் தன் அறைக்குள் நழுவிக்கொண்டாள் மித்ரா.
அங்கிருந்த கண்ணாடியின் முன் சென்று நின்று, தன் கழுத்தில் புதிதாகத் தொங்கிய தாலியையும், அது அவள் முகத்துக்குத் தந்த பொலிவையும், நெற்றி வகிட்டில் வீற்றிருந்த திலகத்தையும், முகத்தில் தெரிந்த பூரிப்பையும் சற்றுநேரம் ரசித்தாள்.
அவள் இத்தனை அழகா? இன்றுதான் உணர்கிறாள்.
அவன் கட்டிவிட்ட சேலையை அவிழ்க்க மனமே இல்லாதபோதும், உடலின் கசகசப்பும், இதமான குளியலுக்கு ஏங்கிய மனதுக்கு இசைவாகவும் இரவு உடை ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றவள் குளித்து, நைட்டி மாற்றி வெளியே வந்தபோது, அவளது கட்டிலில் இன்னொரு சேலை வீற்றிருந்தது!
வெட்கத்தில் கன்னங்கள் சட்டெனச் சிவந்தாலும் உள்ளம் பூரிப்பில் துள்ளியது! சேலை கட்டிவிட வருவானே அவளைக் களவாடப் போகிறவன்!
தன் எண்ணம் போகும் போக்கை எண்ணி வெட்கினாலும், அந்த நினைவுகளை நிறுத்த அவள் தயாரில்லை. அதன் பாட்டுக்கே விட்டுவிட்டு உள்ளுக்குள்ளே ரசித்துக்கொண்டாள்!
சற்று நேரத்தில் தானும் குளித்ததன் அடையாளமாய்த் தலையின் ஈரம் முற்றிலும் காயாமல் வந்த அவளின் மணாளனும் வேட்டி சட்டையில் தான் இருந்தான்!
அவன் கண்களில் சிரிப்பும் எதிர்பார்ப்பும்.
தன் படபடப்பைக் காட்டிக்கொள்ளாமல் அவனை நிமிர்ந்து பார்க்கத்தான் நினைத்தாள்! எங்கே அது முடிந்தால் அல்லவோ!
சின்னச் சின்னச் சில்மிஷங்களாலே அவளைத் துள்ளித் துடிக்க வைத்தபடி சேலையைக் கட்டிவிட்டான் அவன்! தாங்கமாட்டாமல் அவனிடமே அவள் தஞ்சம் புக, அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்துக்கொண்டே தன் அறைக்குள் அழைத்துச் சென்று, கட்டிலில் அவளோடு தானும் அமர்ந்துகொண்டான்.
அந்தக் கணமே அனைத்தையும் ஆரம்பித்துவிட மனமும் உடலும் துடித்தாலும், அவளின் கரத்தைப் பற்றி அதைத் தனக்குள் அடக்கி, “நம் வாழ்க்கையை நாம் தொடங்கலாம் தானே மித்து..” என்று கேட்டவனின் குரலில் தாபம் கொட்டிக் கிடந்தது.
இதென்ன கேள்வி? வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையை மீண்டும் குனிந்துகொண்டாள் அவள்.
குறும்போடு அவள் காதருகில் குனிந்து, “காலையில் நான் கேட்ட பரிசு கிடைக்குமா?” என்று கிசுகிசுக்க, அவன் மார்பிலேயே தன் சிவந்த இதழ்களைப் பதித்துத் தன் சம்மதத்தை அவள் சொல்லாமல் சொன்னபோது, அதற்குமேலும் கணமும் தாமதிக்கவில்லை அவளின் கணவன்!
தன் தேவைகளை அவளுக்குள் தேடி, அவளையும் தேடவைத்து, அவனது வேகம் தாங்காமல் தடுமாறியவளை தேற்றி அவளைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தபோது, அவளின் இதயம் மட்டுமல்லாது பொன்தேகமும் அவன் ஆட்சியின் கீழ் அழகாய் வந்தது!
தேடல்கள் முடிந்தாலும், தேவைகள் தொடர்ந்ததில் மீண்டும் மீண்டும் தேடி.. இது என்றைக்குமே முடிகிற தேடல் அல்ல என்பதை அறிந்து, தன் இருபத்தியெட்டு வருட விரதத்தை முடித்துக்கொண்டு பூரணத் திருப்தியோடு அவன் விலகியபோது, மித்ராவின் கீதனாக முற்றாக மாறியிருந்தான் கீர்த்தனன்!
அவனுக்குள் ஊனும் உயிருமாய்க் கலந்தவள் அவன் வயிற்றைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்துக்கொண்டாள் களைப்போடு.
ஒருகையால் அவளை அணைத்து, மறுகையால் கலைந்திருந்த முடிகளைக் காதோரமாய் ஒதுக்கி விட்டவன், நிறைவோடு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்!
காலை விடிந்து நெடுநேரம் ஆனபின்பும் கீர்த்தனனே முதலில் கண்விழித்தான். திறந்த விழிகள் முதலில் உள்வாங்கியது மனையவளின் மதி முகத்தையே!
ஆசையாக அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எழுந்துகொண்டான். குளிப்பதற்காக அணிந்திருந்த சட்டையைக் கழட்ட எண்ணி பட்டனில் கை வைத்தவனின் இதழ்களில் வெற்றி கொண்டவனின் புன்னகை!
அவனது சட்டையெல்லாம் அவளின் நெற்றிக் குங்குமம் கோலம் வரைந்திருந்தது! இதழ்களில் கள்ளச் சிரிப்பொன்று ஜனிக்க, அது ஆர்வத்தோடும் ஆசையோடும் மனையாளை நோக்க வைக்க, அவள் கிடந்த கோலமோ அவன் இளமைக்கே சவால் விட்டது!
சேலை எங்கோ ஓர் மூலையில் கிடக்க, முதல் நாள் இரவு நடந்த காமன் போரில் களைத்துப்போய், அயர்ந்து உறங்கிக்கொண்டு கிடந்தவளின் நிலையே அவனைப் பாடாய்ப் படுத்தியது!
பெண்களின் அழகு மட்டுமல்ல அலங்கோலம் கூட ஆண்களை வதைக்க வல்லது என்பதை அந்த நொடியில் உணர்ந்தான் கீர்த்தனன்.
அவளை நோக்கி இழுத்த மனதையும் உடலையும், இரவும் அவளை அவன் சும்மா விட்டு வைக்கவில்லை என்கிற இரக்கம் வந்து தடுக்கக் குளியலறைக்குள் புகுந்து, தண்ணீரின் அடியில் உற்சாகமாய் நின்றுகொண்டான்.
குளித்துவிட்டு வந்தவன், உடைமாற்றி, காலை உணவை செய்து, தேநீரைப் பருகி முடித்தும் எழுந்துகொள்ளவில்லை அவள்!
ஒரு கப்பில் அவளுக்கான தேநீரை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்றவனுக்கு, முதலிரவை முடித்த மனைவி ஈரத் தலைக்குத் துண்டைக் கட்டிக்கொண்டு, வெட்கத்தில் சிவந்த முகத்தோடு கையில் காபிக் கப்புடன் வந்து கணவனை எழுப்பும் திரைப்படக் காட்சி கண்முன்னால் வர, தான் இப்போது தன்னவளை தேடிச் செல்லும் நிலைக்கும் அந்தக் காட்சிக்கும் உள்ள ஒற்றுமையை எண்ணிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தான்.

