கழுத்தோரம் மோதிய மூச்சுக்காற்றும், செவியோரங்ககளைச் சீண்டி விளையாடிய இதழ்களும், மேனியையே சிலிர்க்க வைத்த சிங்கார மீசையின் தீண்டலும் உணர்வுகளுக்குள் அவளைப் புதைத்து, பொன் மேனியை தள்ளாட வைக்க, “கீ..த..ன்..” என்றவளின் இதழ்களும் உச்சகட்ட உணர்ச்சிப் போராட்டத்தில் துடித்தன.
அந்த அழைப்பு, அது வந்த தொனி அவனையும் உசுப்ப, இடையோடு சேர்த்து அவளைத் தன்னோடு இறுக்கி, கழுத்து வளைவில் தன்னைப் புதைத்தான் கீர்த்தனன்.
ஒருவருக்குள் மற்றவர் மூழ்கி, உயிருக்குள் உயிர் கரைய, உலகை மறந்து நின்றவர்களை, “அக்கா..” என்கிற வித்தியின் அழைப்பு நினைவுலகுக்கு மீட்டது.
“உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்.” என்றவன், வேகமாக அவளிடமிருந்து விலகிப் போனான். சற்று நேரம் பிடித்தது மித்ராவுக்கு அவனுடைய ஆளுகைக்குள் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள!
சத்யனும் வந்துவிட நால்வருமாகக் கிளம்பி விமான நிலையத்துக்குச் செல்ல, மித்ரா ஆச்சரியமும் ஆவலுமாகக் கணவனைப் பார்த்தாள்.
“எங்கே போகிறோம் கீதன்? இனியாவது சொல்லுங்களேன்..” என்று கெஞ்சியவளிடம் கையிலிருந்த டிக்கெட்டைக் காட்டினான்.
பத்து நாட்கள் ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுலா பயணிகளாக அவர்கள் செல்வதாக அதில் இருந்தது.
என்றோ ஒருநாள் பேச்சு வாக்கில் “ஸ்பெயின் நாட்டுக் கடற்கரைக்கு எப்போதாவது போகவேண்டும்.” என்று ஆசையோடு அவள் சொன்னது அவளின் காதிலேயே எதிரொலித்தது!
விழிகள் மலர, நெஞ்சம் பூரிக்கக் கணவனை அவள் பார்க்க, “நான் சொன்ன அந்தக் காபி சீனில் அடுத்தக் கட்டமா வருவது தேன்நிலவு சீன். அந்த நிலவுதான் இது.” என்று குறும்போடு சொல்லிச் சிரித்தான், அவள் வாழ்வின் மொத்த சந்தோசத்தையும் தன்னகத்தே வைத்திருந்த அவளின் உயிரானவன்!
அவர்களின் அந்தத் தேன்நிலவுப் பயணம் இனிதே ஆரம்பிக்க, அவர்கள் மீதான விதியின் விளையாட்டும் இங்கே மெதுவாய் ஆரம்பித்தது!
எந்தச் சந்தோசமும் மித்ராவுக்கு நிரந்தரம் இல்லை போலும்! அல்லது அவளுக்கான சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை போலும்!
விதி ‘விஸ்வா’ என்கிறவனின் வடிவில் அவளைப் பார்த்து மெல்லச் சிரிக்கத் தொடங்கியது!
மித்ராவின் கீதன் இன்னும் வருவான்! பாகம் இரண்டில்!

