அவனோடு வாதாடி வெல்ல முடியாது என்பதை அவள் கருத்தரித்த இந்த மூன்று மாதங்களில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவளோ, தன்னை தாங்கித் தாங்கி கவனிக்கும் கணவனின் அன்பில் நெஞ்சம் பூரிக்க, “நீங்களே என்னை சோம்பேறி ஆக்குங்கள். பிறகு, ஏன் இப்படிச் சோம்பிக் கிடக்கிறாய், உடம்புக்கு ஏதும் செய்கிறதா, டாக்டரிடம் போவோமா என்று பதறுங்கள். வீட்டு வேலைகளையாவது செய்தால் தானே கொஞ்சமாவது உஷார் வரும். பிறகு உங்கள் மகனும் சோம்பேறியாகத்தான் பிறப்பான்.” என்று பொய்யாக சலித்தாள்.
“அதென்ன மகன் என்கிறாய்? மகள் பிறந்தால் என்ன செய்வாயாம்? எனக்கு மகள்தான் வேண்டும்.”
“அடுத்ததாக ஒரு மகனைப் பெற்றுக்கொள்வேன்!” என்று பதில் சொல்லிவிட்டு, தன் மணிவயிற்றின் மீது கரம் பதித்து, “ஆனால், குழந்தையை பற்றி நினைத்தாலே மகன் என்றுதான் வாயில் வருகிறது கீதன்.” என்றாள்.
விழிகளில் குறும்பு மின்ன, “அல்லது ஒரே நேரத்தில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகளை பெற்றுத் தாவேன். உன் ஆசையும் தீரும் என் ஆசையும் தீரும்.” என்றான் கணவன்.
“முடியாது! ஒவ்வொன்றாகத்தான் பெற்றுக்கொள்வேன். அந்த ஒவ்வொரு முறையும் தாய்மையை முழுமையாக அனுபவித்துப் பெறவேண்டும். அதேபோல ஒவ்வொரு குழந்தையையும் பார்த்துப் பார்த்து நம் கண்ணுக்குள் பொத்திப் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.” சொல்லும்போதே உணர்வுமேலீட்டில் விழியோரங்கள் நீரால் நனைந்தன.
மனைவியின் மனதை நொடியில் கணித்தான் கீர்த்தனன். “நீ கஷ்டப்படுவாயே என்றுதான் இரட்டையாகப் பெற்றுத்தா என்றேன். ஆனால்.. என் காட்டில் மழைதான் போ!” என்றான் குறும்போடு.
“இல்லாவிட்டால் மட்டும் உங்கள் காடு வறண்டுதானே கிடக்கிறது. இப்போ கொஞ்ச நாட்களாகத்தான்.. அதுவும் பிள்ளைக்காக ” என்றவள் அதற்குமேல் சொல்ல இயலாமல் நிறுத்த, மிகுதியை கன்னங்களின் சிவப்புச் சொல்லிற்று.
“அதைவிடுங்கள், எனக்கு என்ன கஷ்டமாம்? அதைச் சொல்லுங்கள்.” என்று பேச்சை வளர்த்தாள் அவள்.
“என் பிள்ளையை சுமப்பதால் தானே இப்படி முடியாமல் கஷ்டப் படுகிறாய்.” என்றான் அவன்
“இதெல்லாம் கஷ்டமா கீதன். இதெல்லாம் சந்தோசம். ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்பட்டுக் கேட்கும் வரம். அனுபவிக்கத் துடிக்கும் இன்பமான வலி! எவ்வளவுதான் முடியாமல் போனாலும் பிறக்கப் போகிற குழந்தையை நினைத்தாலே போதும் எல்லாக் கஷ்டமும் ஓடிவிடும். அதுவும் எனக்கு.. உங்களுக்கு ஒரு பிள்ளையை பெற்றுத் தரப்போகிறேன் என்கிற நினைவே எவ்வளவு பெரிய சந்தோசத்தைக் கொடுக்கிறது தெரியுமா?” என்றாள் பொங்கும் நேசத்தோடு.
கனிந்த விழிகளில் காதல் மின்ன அவளை அணைத்துக்கொண்டான் கீர்த்தனன். “என் பிள்ளையை சுமப்பதால் என்னைக் கவனிக்க மறந்துவிட்டாயே..” என்றான் குறும்போடு.
“உங்களை கவனிக்காமலா உங்கள் குழந்தையை சுமக்கிறேன்.” என்று முணுமுணுத்தவளின் ஒரு கை உயர்ந்து கணவனின் மார்பில் கோலம் போடத் துவங்கியது.
அதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தான் அவள் கணவன். “பார்ரா..! என் பெண்டாட்டியும் நன்றாகப் பேசுகிறாள்!”
“கற்றுக் கொடுத்ததே நீங்கள் தானே..” விடாமல் அவள் வாயடிக்க, “அப்போ.. நான் கற்றுத் தந்தது எல்லாமே நினைவில் இருக்கிறதா? டெஸ்ட் வைத்து பார்க்கலாமா?” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதிலே இல்லாமல் போனது.
“என்னம்மா வாய்காரி, எங்கே பதில்?”
“ச்சு.. சும்மா இருங்கள் கீதன்..” அவன் மார்புக்குள் இருந்து சொன்னாள்.
அப்போது அர்ஜூன் அழைக்க, “சொல்லுடா..” என்றபடி செல்லை காதுக்குக் கொடுத்தான் கீர்த்தனன்.
“வீடு ஒன்று இருக்கு தனா. பார்க்க வருகிறாயா? நீ கேட்ட மாதிரி மூன்று மாடிகள் கொண்ட வீடு. தனித்தனியா மூன்று குடும்பமும் இருக்கலாம், ஒன்றாகவும் பாவிக்கலாம்..” என்றான் அர்ஜூன்.
மித்ராவின் ஆசைப்படி ஜெர்மனியிலேயே சொந்தமாக வீடு ஒன்று வாங்கப் பார்த்துக் கொண்டிருந்தான் கீர்த்தனன்.
“இல்லடா. மித்ராவால் இப்போதைக்கு எங்கும் அலைய முடியாது. குழந்தை பிறந்தபிறகு பார்க்கலாம்.” என்று அவன் சொல்ல, “இப்போதே பார்ப்போம் கீதன். பிடித்திருந்தால் வாங்கிவிடலாம்..” என்று ஆர்வத்தோடு இடைபுகுந்தாள் மித்ரா.
“வாங்குவோம் மித்து. ஆனால் பிறகு.” என்றான் கணவன்.
“ப்ளீஸ்பா மறுக்காதீர்கள். அது காலையில் தலை சுற்றல் இருப்பது வழமை. அதுவும் ஆரம்பத்தில் தான் அப்படி இருக்கும் என்று டாக்டரே சொன்னார் தானே. இப்போது நான் நன்றாகத்தானே இருக்கிறேன். என்னால் முடியும். வாருங்கள் போய்ப் பார்த்துவிட்டு வருவோம். வீடு வாங்குவதை தள்ளிப்போட வேண்டாமே..”
அவர்களின் பேச்சை செல்லின் ஊடாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனும், “எனக்கும் இந்த வீடு நன்றாகவே பிடித்திருக்கிறது. நீ கேட்ட மாதிரியே அமைந்தும் இருக்கிறது. மித்ராவுக்கு முடியவில்லை என்றால் நீ மட்டுமாவது வா. வேண்டுமானால் அவளுக்கு வீடியோ எடுத்துக்கொண்டுபோய் காட்டு.” என்றான்.
கீர்த்தனனின் செல்லில் மைக்கை ஆன் பண்ணி கேட்டுக்கொண்டு இருந்தவளோ, “அண்ணா சொல்வது நல்ல ஐடியா. அப்படிச் செய்யுங்கள்.” என்றாள்.
“வீடு வாங்க ஆசைப்பட்டதே நீ. பிறகு எப்படி நீ நேரில் பார்க்காமல் வாங்குவது..” என்றான் அவன்.
“அப்போ நானும் வருகிறேன். வாருங்கள் இப்போதே போவோம்..” என்று துளிக்கொண்டு அவள் எழும்ப, அங்கே இணைப்பில் அர்ஜூனும் இருந்ததில் விழிகளால் மட்டும் மனைவியை அதட்டி முறைத்தான் கீர்த்தனன்.
கண்களை சுருக்கி உதட்டைக் குவித்து ‘சாரி’ என்று வாயசைத்து சொன்னவள், போதாக்குறைக்கு அவன் தாடையை செல்லமாகப் பிடித்து ஆட்டி, ‘என் கீதன் தானே.. நோ கோபம்..’ என்றாள் அப்போதும் வாயசைப்பாக.

