கணவனின் புறம் திரும்பி, “அன்று, நடந்த பழையவைகளை எல்லாம் இனி நீ நினைக்கவே கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இன்று நீங்களே அதை தூண்டித் துருவுகிறீர்களே கீதன்.” என்றாள் பரிதவிப்போடு.
தம்பி எதையும் வாய் விட்டுவிடக் கூடாதே என்கிற தவிப்பு!
எப்போது சொன்னேன் என்பதாக அவன் புருவங்களை சுருக்க, “அன்று.. அன்று.. முதன் முதலாக நான் தோசை செய்தபோது..” என்று அவசரமாக அவள் நினைவூட்ட, அவனுக்கும் நினைவு வந்தது.
ஆமாம்! சொன்னான் தான்! அன்று அவள் படும் பாட்டை தாங்க முடியாமல் சொன்னான் தான்! ஆனால், இன்று அவனல்லவா என்னவென்று தெரியாமல் தவிக்கிறான்.
மித்ரா அவற்றை சாதரணமாக எடுத்திருக்க அவனுமே பெரிதாக எடுத்திருக்க மாட்டான். ஆனால், எப்போதெல்லாம் அந்தப் பேச்சுக்கள் வருகிறதோ அப்போதெல்லாம் மனைவி படும் வேதனைகளைக் கண்கொண்டு பார்ப்பவனால் அவற்றை சாதரணமாக எடுக்க இயலவில்லை.
தலையே வெடிக்கும் போலிருந்தது.
ஆனாலும் சத்யனின் முன்னால் மனைவியிடம் கோபத்தைக் காட்டப் பிடிக்காமல், “நான் ஆசியன் கடைக்குப் போய்விட்டு வருகிறேன். குங்குமப்பூ வந்திருக்கிறதாம். நான் வரும்வரை உன் அக்காவோடேயே இரு!” என்று சத்யனிடம் பணித்துவிட்டு வெளியேறினான் கீர்த்தனன்.
அவனது கார் மறையும் வரைக்கும் அமைதியாக இருந்த சத்யன், “அத்தானிடம் நீ எதையுமே சொல்லவில்லையா?” என்று தமக்கையிடம் கேட்டான்.
மறுப்பாக தலையசைத்தாள் மித்ரா.
“ஏன்?”
கேள்வி கேட்பது எவ்வளவு இலகு என்று மனதில் எண்ணியவள், தன்பக்க காரணங்களாக தான் நினைத்தவைகளை தம்பியிடம் சொன்னாள்.
உண்மைதான் என்று தோன்றியது சத்யனுக்கும். அவனுக்கு அத்தான் தந்தையை உதறுவதில் எந்த ஆட்சேபனையுமே இல்லை. அந்தளவு கோபம் இருந்தது அவர்மேல். ஆனால் அம்மா… அவர் மேலும் அவனுக்குக் கோபம் உண்டுதான். ஆனாலும்.. கொஞ்சம் மனதில் தடுமாறினான்.
“என்ன இருந்தாலும் அத்தானிடம் சொல்லாமல் இருப்பது தப்புக்கா.”
“அது எனக்கும் தெரியும் சத்தி. ஆனால் வேறு வழியும் இல்லையேடா. நடந்தவை தெரிந்தால் நிச்சயம் அம்மா அப்பாமேல் பெருங்கோபம் கொள்வார்.” என்றாள் மித்ரா கணவனை அறிந்தவளாக.
சத்யனோ என்ன பதில் சொல்வது என்று தெரியாது அமைதிகாக்க, இவனை நம்ப முடியாது என்று எண்ணியவள் அவன் முன்னால் தன் கையை நீட்டினாள். புரியாமல் அவன் பார்க்க, “சத்யம் செய்! எந்தக் காலத்திலும் இதைப்பற்றி அத்தானிடம் மூச்சுக்கூட விடமாட்டேன் என்று!” என்றாள்.
“சொல்லமாட்டேன்” என்றுமட்டும் சொன்னான் சத்யன்.
“இல்லை. உன்னை நம்பமுடியாது. அவர் ஒன்று கேட்டால் அதை நீ மறுக்கமாட்டாய். அதனால் சத்யம் செய்!” தம்பியையும், அவன் தன் கணவன்மேல் வைத்திருக்கும் பாசத்தையும், மதிப்பையும் அறிந்தவளாக மித்ரா கேட்க,
“சரிக்கா. சத்தியமாக சொல்லமாட்டேன். ஆனால், இது பிழை என்றுமட்டும் தெரிகிறது.” என்றான் தம்பி.
அது எனக்கும் தெரியுமே என்று எண்ணிக்கொண்டவள் அன்று மாலை வந்த வித்யாவிடமும் அதே சத்யத்தை வாங்கிக்கொள்ளத் தவறவேயில்லை!
அதன்பிறகே நிம்மதியாக மூச்சுவிட்டாள். இனித்தான் அவளது நிம்மதியே கெடப்போகிறது என்பதை அறியாமல்!

