“என்ன சொல்கிறாய்?” அவள் தோள்கள் இரண்டையும் பற்றி அவன் உறுமியபோது, நெஞ்செல்லாம் நடுங்கத் தொடங்கியது மித்ராவுக்கு.
“அது நீக்கோ.. என்னோடு.. நான்.. அவனும் நானும்..” என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.
அவள் விளக்கத்தைக் கேட்கும் பொறுமையற்று, “அவன் சொன்னது உண்மையா? இல்லையா? அதை மட்டும் சொல்லு!” என்று கேட்டு உலுக்கிய உலுக்கலில் அவளது தோள்கள் இற்றுவிடும்போல் வலித்தது.
எப்போதும் அவளை பூவிலும் மென்மையாக கையால்பவனின் கடுமையில், மேனியெல்லாம் நடுங்க, கண்களில் கண்ணீர் பெருக, சொல்லொணா துயரை நெஞ்சில் தாங்கி அவனைப் பார்த்தவளின் தலை மட்டும் மேலும் கீழுமாக அசைந்தது.
அடுத்த நொடியே, அசிங்கத்தின்மீது கால் பதித்தவன் போன்று, “ச்சை!” என்றபடி வெறுப்போடு அவளை உதறித் தள்ளினான்.
அந்தக் கணத்தில், அந்த நொடியில் உள்ளத்தால் மரணித்தாள் மித்ரா!
அன்பான கணவனின் வெறுப்புக்கு ஆளாகிப் போனாளே! எந்த அன்புமே அவளுக்கு நிலைக்காதா?!
அவளின் வாய்மொழியாகக் கேட்டபிறகும் அவனால் நம்ப முடியவில்லை. “சொல்லு! நீ சொல்வது உண்மையா? விளையாட்டுக்கு எதையும் சொல்லாதே மித்ரா, கொன்றே போடுவேன்! நீ அப்படிக் கிடையாது! எனக்குத் தெரியும்!” என்று கர்ஜித்தான், மனதில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் போட்டிபோட!
“அப்போது அதெல்லாம் தப்பென்று எனக்குத் தெரியாது கீதன். அதோடு என்னை அவன் மண..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே கைநீட்டித் தடுத்தான் அவன்.
“உன் விளக்கம் எதுவும் எனக்கு வேண்டாம்! அவன் சொன்ன மாதிரி… “ என்றவனின் பேச்சுத் தடைப்பட தேகமெல்லாம் இறுகியது.
கட்டிய மனைவியிடம் நீ இன்னொருவனோடு வாழ்ந்தாயா என்று கேட்கும் நிலையில் நிற்கிறானே! கணவனாக அந்த நொடியே இறந்துபோனான் அந்த முழுமையான ஆண்மகன்!
ஆனாலும், புரிதலில் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு, “உனக்கும் எவனுக்கும் தொடர்பு இருந்ததா? நீங்கள் ஒன்றாக… வாழ்ந்தீர்களா? நன்றாக யோசித்து சொல்லு!” என்றான் நெஞ்சம் கசந்து வழிய!
உடனேயே, “இல்லைதானே.. அப்படி இல்லை தானே? நீ சும்மாதானே சொன்னாய்?” என்று தன்னை மீறிப் பதறினான்.
இல்லை என்று சொல்ல முடியாமல் தன்னை நிறுத்திய விதியை நொந்தபடி கண்ணீரோடு அவள் பார்க்க, அந்தப் பார்வையே அவனைக் கொல்ல, “சொல்லுடி! இல்லை என்று சொல்லு! நீ அப்படி கிடையாது. என் மித்து அப்படிக் கிடையாது! எனக்குத் தெரியும்!” என்று, தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம் என்பதையே அறியாமல், தன் இயல்பை மீறிப் பதறித் துடித்தான் கீர்த்தனன்.
“அது உண்மைதான் கீதன். என்னை மணந்துகொள்வான் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவன்..” என்று ஆரம்பித்தவள், “மூடடி வாயை!” என்றவனின் கர்ஜனையில் நடுங்கி ஒடுங்கிப்போனாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு கைகால்கள் எல்லாம் நடுங்கியது. அளவுக்கு மீறிய ஆத்திரத்தில் நெஞ்சம் பதறியது. எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கும் அளவுக்கு இரத்தம் கொதித்தது. கொண்டவள் மேல் அவன்கொண்ட அசையா நம்பிக்கை எரிமலைக் குழம்பாய் வெடித்துச் சிதறியது. அடுத்து என்ன செய்வது என்ன சொல்வது என்றே தெரியால், அந்த ஆறடி உயர ஆண்மகன் தரையில் விழுந்த கண்ணாடிப் பாத்திரமாய் சில்லுச் சில்லாய் சிதறிப்போய் நின்றான்.
உயிருக்கு உயிராக வாழ்ந்தவள் கொடுத்தது மரணஅடியில் கதிகலங்கிப் போய் நின்றான் அந்தக் காதல் கணவன்!
அவளுடன் சுகித்து வாழ்ந்த ஒவ்வொரு நிமிடங்களும் கண்முன்னால் வந்து நின்று என்ன வாழ்க்கையடா வாழ்க்கை என்று கேட்டுச் சிரித்தது!
நம்பிக்கை துரோகத்தையும் தான் நம்பி ஏமாந்ததையும் நினைக்க நினைக்க விறைத்து எழுந்தது தேகம்! அந்த விஸ்வா அத்தனை தடவைகள் சொல்லியும் துளியும் நம்பவில்லையே அவன்! அவனை அல்லவோ வெறிகொண்ட வேங்கையாக அடித்து நொறுக்கினான்.
ஏன், அவனைப் படைத்த கடவுள் கண்முன்னால் வந்து சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டனே! அந்தளவு நம்பிக்கை! என் மனைவி மாசு மறுவற்ற சுத்தத்தங்கம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை!
இருக்காது! அப்படி இருக்காது என்று அவன் இதயம் எவ்வளவு உறுதியோடு அடித்துச் சொன்னது?! அந்த நம்பிக்கையை, அவனது வாழ்வின் ஆதாரத்தை ஒற்றை வார்த்தையில் நசுக்கிப் பொசுக்கிவிட்டாளே பாவி!
சுர்ரென்று கோபத்தீ உடல் முழுவதும் பற்றிக்கொள்ள, இரத்தக் கட்டிகளென சிவந்து தணல்போல் ஜொலித்த விழிகளால் அவளைப் பார்த்து உறுத்தவனின் உக்கிரத்தில் அந்த இடத்திலேயே பொசுங்கிப்போனாள் மித்ரா.
உள்ளமோ, கடைசில் உயிராய் நேசித்த கணவனின் வெறுப்புக்கும் ஆளாகிப்போணோமே என்று கதறிக் கண்ணீர் வடித்தது! எதையும் நான் அறிந்து செய்யவில்லையே என்று கதறியது நெஞ்சு!
வெறிகொண்ட வேங்கையென அவள் முன்னால் வந்து நின்று, “இந்தக் கருமத்தை ஏனடி முதலே சொல்லவில்லை? எதற்காக மறைத்தாய்? உன்னிடம் எதையாவது நான் மறைத்தேனா? விசாவுக்காகத்தான் உன்னைக் கட்டுகிறேன் என்று நேரடியாக சொல்லித்தானே கட்டினேன். அப்படி இதை நீயேன் சொல்லவில்லை? அன்றிருந்த என் நிலைமைக்கு, நீ என்ன சொல்லியிருந்தாலும் ஏற்று இருப்பேனே.. நீ இவ்வளவுதான் என்று நினைத்து வாழ்ந்திருப்பேனே. அதை விட்டுவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவிக்கு ஏனடி வேஷம் போட்டாய்?” என்று, வார்த்தைகளை சாட்டையாய் வீசினான் கீர்த்தனன்.
“எனக்கு இது வேண்டுமடி! ஒழுக்கம், நேர்மை, நியாயம் என்று வாழ்ந்தவன் விசாவுக்காக என் வாழ்க்கையையே அடகு வைத்தேன் பார்! கண்மூடித்தனமாக உன்னை நம்பினேன் பார்! அதற்கு எனக்கு இது வேண்டும்!” என்று தன்னையே வெறுத்துப் பேசியவனுக்கு என்னவோ புதிர் பிடிபட்டது போலும்.

