தனிமைத் துயர் தீராதோ 30 – 4

ஆனால், தனிமையில் உழன்றவளின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தவன், அவள் வாழ்க்கையின் கசப்பான பக்கத்தை அறிந்து பிரிந்து போனான். உயிரைப் பிரிந்த வேதனையை அனுபவித்தாலும், எனக்கு விதித்தது இவ்வளவுதான் போலும் என்று தன்னையே பெரும்பாடு பட்டுத் தேற்றி, மகனுக்காக என்று அவள் வாழ ஆரம்பிக்கையில் மீண்டும் அவள் முன்னால் வந்து நின்று, அவள் மனதில் எதிர்பார்ப்புக்களையும் மீண்டும் எதிர்காலம் மீதான மெல்லிய நம்பிக்கையையும் தந்துவிட்டு, திரும்பவும் இப்படி விலகிப் போகிறானே..

 

தான் மீண்டும் அத்துவானக் காட்டில் தனிமைப் படுத்தப் பட்டதுபோன்ற துயர் தாக்க, இப்படி கடைசிவரையும் மகிழ்ச்சியை நிரந்தரமில்லாமல் ஆக்கிய அந்த நிகழ்வுகள் அவள் மனதுக்குள் இருந்து பொத்துக்கொண்டு வெளியே வரத்தொடங்கிற்று.

 

அவற்றை தடுக்கும் சக்தி அற்றவளாக, மனதை அதன் பாட்டுக்கே விட்டுவிட்டாள்.

 

 

அதேநேரம் இங்கே காரில் சென்று கொண்டிருந்த கீர்த்தனனுக்கு அழைத்தான் சத்யன். “நான் ‘பொன்’னுக்கு வந்துவிட்டேன். இன்றே.. உங்களால் முடிந்தால் இபோதே சந்திக்கலாமா?” என்று கேட்டான்.

 

மித்ராவின் இறந்தகாலத்தை சந்தேகமற அறிந்துகொள்ள துடித்துக்கொண்டிருப்பவன் மறுப்பானா? உடனேயே சம்மதித்து எங்கே சாந்திப்பது என்றும் கேட்டுக்கொண்டான்.

 

பவித்ராவையும் மகனையும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, “நான் கொஞ்சம் வெளியே போகிறேன் பவி. சந்துவோடு தனியாக இருக்க அலுப்படித்தால் அஞ்சலியை கூப்பிடு. வருவாள்.” என்றுவிட்டு அவன் செல்ல, அஞ்சலிக்கு அழைத்தாள் பவித்ரா.

 

 

ஒரு சிறிய பூங்கா ஒன்றில் காத்திருந்த சத்யன், கீர்த்தனனை கண்டதும் வெளிப்படையாகவே அதிர்ந்தான். அந்தளவுக்கு முகம் களையிழந்து, சோர்ந்து, உற்சாகமிழந்து பார்க்கவே என்னவோ மாதிரி இருந்தான்.

 

தன்னை மறந்து, தான் அவன்மேல் கோபமாக இருக்கிறோம் என்பதை மறந்து, “என்னத்தான் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான்.

 

அதற்குப் பதில் சொல்லாமல், அவன் ‘அத்தான்’ என்று அழைத்ததைக் கூட உணரமாட்டாமல், “உன் அக்கா வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்று சொல் சத்தி?” என்றான் நேரிடையாக.

 

கடவுளே.. இதென்ன புதுப்பிரச்சனை என்று அதிர்ந்து நின்றான் சத்யன்.

 

ஆனால், கீர்த்தனனின் கோபமோ ஆத்திரமாக வெடித்தது. “இப்படி ஆளாளுக்கு என்ன நடந்தது என்று கேட்டால் மூச்சும் விடாதீர்கள். பிறகோ நான் மட்டுமே முழுக்கெட்டவன் என்று சொல்வீர்கள். அப்படித்தானே?” என்று வெடித்தான்.

 

முதன் முதலாக தன்னிடம் கோபப்படும் அத்தானை சற்றே பயத்தோடு அவன் பார்க்க, அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை கீர்த்தனன்.

 

உடலும் உள்ளமும் சோர, அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று விழுந்தான். தலைப்பாரத்தை சுமக்க முடியாதவன் போன்று கைகளால் தலையைத் தாங்கி, “முழுவதையும் சொல்லிவிடு சத்தி. இனியும் என்னால் முடியும் போல் தோன்றவில்லை. அந்த நீக்கோ என்னெனவோ சொன்னான். அதெல்லாம் உண்மையா?” என்று கேட்டான்.

 

முகம் இறுக ஆம் என்பதாக தலையை அசைத்த சத்யனுக்கு அக்கா வாங்கிய சத்தியம் நினைவில் வந்தாலும், அதைக் காப்பதில் எந்த நல்லதும் நடந்துவிடாது என்று தெரிந்துபோயிற்று.

 

நீக்கோ அவளை எப்படிப் பார்த்துக்கொண்டான், எவ்வளவு பக்கபலமாக இருந்தான், எப்படி அவளைத் தட்டிக்கொடுக்கும் கையாக இருந்தான் என்பதை எல்லாம் சொன்னான்.

 

கீதனுக்கோ மனம் கசந்து வழிந்தது. வழிகாட்டியாய் வந்தவன் எதற்காக அவள் வாழ்க்கையில் விளையாடினான்?

 

அதையே அவன் கேட்டபோது, எதையும் சொல்லப் பிடிக்கவில்லை அவனுக்கு. ஆயினும், சொன்னாலாவது தமக்கையின் வாழ்வில் நல்லது எதுவும் நடந்துவிடாது என்கிற ஆசையுடன் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முதலில், மித்ராவின் பதினெட்டாவது வயதில் நடந்தவைகளை சொல்லத் தொடங்கினான்..

 

“நான் எதையும் நேரில் பார்த்ததில்லை. ஒருநாள் படியில் சறுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு அக்கா ஆஸ்பத்திரியில் இருந்தாள். அன்று தன்னை மீறிய மயக்கத்தில் அவள் சொல்லிக் கதறியபோது கேட்டதுதான்.” என்று தொடங்கினான்.

 

சத்யன் இங்கே வாய்மொழியாக சொல்ல ஆரம்பித்த அதே நேரம், அங்கே மித்ராவும் அவள் மனம் வழியாக கசப்பான அந்த நாட்களுக்குள் கண்ணீரோடு மிதக்கத் தொடங்கினாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!