அன்று மாலை, வேலை முடிந்து களைப்போடு ரெஸ்டாரென்ட்டை விட்டு வெளியே வந்து, காரை நோக்கி நடந்துகொண்டிருந்தவளை, “ஹாய் ஏஞ்சல்..!” என்றபடி நீக்கோ ஓடிவந்து கட்டிக்கொண்டபோது, மனம் துள்ளத் திரும்பினாள் அவள்.
“நீ எங்கேடா இங்கே?” உற்சாகமாய்க் கேட்டாள் மித்ரா.
“இங்கேதான் பயிற்சிக்கான வேலை கிடைத்திருக்கிறது. இப்போதுதான் வந்தேன். உணவை முடித்துக்கொண்டு உனக்கு அழைக்கலாம் என்று நினைக்க, கண்முன்னால் நீ!” என்றான் நீக்கோ, தன் குறுகுறு விழிகளால் அவளை அளவெடுத்துக்கொண்டே!
“என்னடா அப்படிப் பார்க்கிறாய்?” கூறும்போது நகைத்துக்கொண்டே கெட்டவள் விழிகளும் அவனை அளவெடுத்தன.
“நீ ஏன் பார்க்கிறாய்?”
“நன்றாக வளர்ந்துவிட்டாயே என்று பார்க்கிறேன்.”
“நீயும்தான்! நாம் பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்குமா..? அதற்குள் நீ நிறைய மாறிவிட்டாய். அழகான பெண்ணாக என் கண்களுக்கு தெரிகிறாய்..” என்றான் அவன், தன்னுடைய அதே குறுஞ்சிரிப்புடன்.
கலகலத்துச் சிரித்தாள் அவள். “சரி சொல்லு.. என்ன வேலை? எங்கே தங்கப் போகிறாய்?”
“பாங்கில் வேலை. மூன்று மாதங்களுக்கு தானே நண்பனின் ரூமில் தங்கலாம் என்று வந்தேன். அவன் என்னவோ அவசரமாக காதலியிடம் போய்விட்டானாம். அவன் வரும்வரை எங்கே தங்குவது என்று தெரியவில்லை..” என்றவனை முறைத்துக்கொண்டே அவன் மண்டையில் எம்பிக் குட்டினாள் மித்ரா.
“வளர்ந்தும் இதை நீ மறக்கவில்லையா?” என்றபடி மண்டையை தேய்த்துவிட்டவன், “எதற்கு குட்டினாய்?” என்று கேட்டான்.
“பின்னே! இங்கே நான் ஒருத்தி இருக்கிறேன் என்று தெரிந்தும், எங்கே தங்குவது என்று யோசித்தால் குட்டாமல் இருப்பேனா..” என்றாள் கோபத்துடன்.
“உன் அப்பா அவர் வீட்டில் உன்னை விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம். இதில் நானுமா?”
“ஓ.. அதுதானா. ஆனால், உனக்கு சொல்ல மறந்துவிட்டேன் நீக்கோ. நான் இப்போது தனிவீட்டில் இருக்கிறேன்.” என்றாள் மித்ரா.
“இது எப்போதில் இருந்து?” என்று கேட்டவன் இப்போது அவளை முறைத்தான். அதைப்பற்றி அவனிடம் சொல்லவில்லை என்கிற கோபம்!
“சாரிடா.. நேரமே இல்லை. அதுதான்.. ப்ளீஸ் தப்பாக நினைக்காதே..” என்றாள், மெய்யாகவே வருந்தி.
“வாட்ஸ் அப்பில் ஒரு ஹலோ ஹாய் சொல்லக் கூடவா நேரமில்லை? நான் அழைத்தாலும் நீ எடுப்பதில்லை.”
அப்படி துண்டாகவே நேரமில்லை என்று சொல்ல முடியாதுதான் என்றாலும், காலையில் படிப்பு பின் வேலை, சமையல், வீடு துப்பரவாக்குதல், தேவையான பொருட்கள் வாங்கவேண்டும் என்று அவளுக்கு எப்போதும் ஏதோ ஒரு வேலை இருந்துகொண்டே தான் இருக்கும். அதோடு தம்பி தங்கையை கவனித்துக்கொள்ளுதல். அப்படி எந்த வேலையும் இல்லை என்றால் விழுந்து படுக்கத்தான் உடலும் உள்ளமும் சொல்லும். அந்தளவுக்கு தினமும் மனதாலும் உடலாலும் களைத்துப் போவாள். அதோடு, நானாகவே படித்து முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்கிற ஒரு வைராக்கியம் வேறு!
அதைச் சொன்னால் இதையெல்லாம் முதலே என்னிடம் ஏன் சொல்லவில்லை, பண உதவி ஏன் கேட்கவில்லை என்று குதிப்பான். எனவே, “சாரிடா..” என்றுமட்டும் சொன்னாள் மித்ரா.
ஆனால், அவள் சொல்லித்தான் அவளது நிலையை புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லையே!
தனியாக இருப்பதும், ரெஸ்டாரென்ட் வேலையை முடித்துக் களைத்துச் சோர்ந்து தெரிந்தவள் தோற்றமும் எல்லாவற்றையும் விளக்க, உள்ளூர மனம் கனத்தாலும், “சரிசரி விடு. அப்போ என் தங்குமிட பிரச்சனை முடிந்தது.” என்றவன், அவளோடு அவள் வீட்டுக்கு புறப்பட்டான்.
ஐந்து மாடிகள் கொண்ட வீட்டில் மூன்றாவது தளத்தில் குடியிருந்தாள் மித்ரா. இருவருமாக அவளின் வீட்டுக்கு படியேறிச் செல்லும்போது, இரண்டாவது தளத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆணின் கோபத்தில் உயர்ந்த குரலும், ஒரு பெண்ணின் அழுகைக் குரலும் கேட்க மித்ராவின் நடை அந்த வீட்டுக்கு முன்னால் தேங்கி நின்றது.
நீக்கோவும் அதைக் கவனித்துவிட்டு, பாஷை புரியாததில், “எந்த நாட்டுக்காரர்கள்?” என்று கேட்டான்.
“தமிழர்கள்..” சுருக்கமாக சொன்னாள் மித்ரா.
“அப்போ பெல்லை அழுத்தி என்ன என்று கேள் ஏஞ்சல். எனக்கு என்னவோ ஏதோ பிரச்சனை நடக்கிறது போல் தெரிகிறது.”
“நமக்கு எதற்கு அதெல்லாம்? நீ வா.” என்றபடி அவள் நடக்க, நின்று அவளை முறைத்தான் அவன்.
“அந்தப் பெண்ணின் அழுகை சத்தம் வெளியே வரைக்கும் கேட்குது. கேட்டும் நமக்கு எதற்கு என்று போகச் சொல்கிறாயா?” என்றான் கோபமாக.
“அதற்காக, அடுத்தவர்களின் குடும்பப் பிரச்சனையில் நாம் தலையிட முடியுமா.”
“என்ன சொல்கிறாய் நீ? உனக்கு உன் அப்பா அடித்ததுபோல் அந்தப் பெண்ணுக்கு அந்த மனிதன் அடிக்கிறானோ என்னவோ. அப்படி எதுவும் என்றால் அதிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டாமா?”
விழிகள் கலங்க நிமிர்ந்தாள் மித்ரா. நீக்கோ சொன்னதுபோல அந்த மனிதன் குடித்துவிட்டு மனைவிக்கு அடிக்கிறான் என்பதை அவள் அறிவாள். அந்தப் பெண் இவளைக் காணும்போதெல்லாம் கண்கள் கலங்குவதையும் கவனித்திருக்கிறாள். தன்னுடைய தாய், தந்தையிடம் பட்ட வேதனைகள் எல்லாம் கண்முன்னால் வந்து போகும். போலிசுக்கு அழைத்து, அந்தப்பெண்ணை காப்பாற்ற மனம் துடிக்கும். ஆனால், ஒருமுறை தான் அப்படி நடந்து இன்றுவரை படுகின்றவை போதாதா? தன்னைத் தானே அடக்கிக்கொள்வாள்.

