தனிமைத் துயர் தீராதோ 31 – 2

அன்று, அன்னை வேறு ‘குடும்பத்தில் இதெல்லாம் நடப்பதுதான்’ என்றுவேறு அவளைத் திட்டினாரே. அதுபோக, எதுவாக இருந்தாலும் அந்தப் பெண் தானே முடிவெடுக்க வேண்டியவள்.

 

இன்றும் அதையே எண்ணி தன்னை அடக்கியவள், “இது ஒரு பெண்ணின் வாழ்க்கை நீக்கோ. அதைப்பற்றி அவள்தான் யோசிக்க வேண்டும். நீ வா!” என்று அவன் கையை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு போனாள்.

 

அன்றைய மிகுதிப்பொழுது, அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் கழிந்த அந்த நான்கரை வருட வாழ்க்கையை பற்றி பேசுவதிலேயே கழிந்தது. அதன் பிறகு வந்த ஒரு வாரமும் மிகுந்த சந்தோசத்தோடு கழிந்தது மித்ராவுக்கு.

 

தனிவீட்டில் தனியாக வசித்தவளுக்கு சிறுபிராயத்து நண்பன், அவளைப் பற்றிய அனைத்தையும் அறிந்தவன் அவளோடு வசித்ததில் எந்தவித தங்கு தடைகளும் இன்றி கதைத்துப் பேச முடிந்தது. இருவருமாக சேர்ந்து சமைப்பது, வீட்டை துப்பரவாக்குவது, ஏதாவது படத்தைப் போட்டுக்கொண்டு பார்ப்பது, பாப்கோர்னை அடிபட்டு உண்பது, சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுவது என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கழிந்தது அந்த ஒரு வாரம்.

 

அன்று சனிக்கிழமை. இருவருமாக சைக்கிளில் ஊர் சுற்றிவிட்டு மாலையிலேயே வீடு திரும்பினர். மித்ரா விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்க இருந்ததில், “நீக்கோ என் சைக்கிளையும் பூட்டிவிட்டு வா..” என்றவள், அவன் பதிலைக் கூட எதிர்பாராதவளாக வேகமாக மாடி ஏறத் தொடங்கினாள்.

 

இரண்டாம் தளத்தில் அடிக்கடி கேட்கும் அந்த ஆணின் கோபக் குரலும் பெண்ணின் அழுகைக் குரலும் இன்றும் கேட்டது.

 

‘இப்படி கட்டிய மனைவிகளை காட்டுமிராண்டியாக அடிக்கும் இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்!’ வெறுப்போடு எண்ணமிட்டவளின் கால்கள் ஒருகணம் தயங்கி நின்றது. அடுத்தகணம் ‘இந்த இடத்தில் நிற்கவே கூடாது’ என்று எண்ணியவள் மூன்றாவது மாடியை ஏறுவதற்காக முதல் படியில் காலை வைக்க, அதே நேரத்தில் அந்த வீட்டுக் கதவும் திறந்தது.

 

மித்ரா திரும்பிப்பார்த்த நொடியில், “என்னைக் காப்பாற்றுங்கள்..” என்றபடி ஓடிவந்து அவள் காலில் விழுந்தாள் அந்தப் பெண்.

 

கலைந்த தலை, வீங்கிய கன்னங்கள், அதில் வழிந்த கண்ணீர், அவை போதாதா மித்ராவுக்கு அவள் நிலையை உணர்த்த!

 

ஆனாலும், எதிர்பாரா வேளையில் திடீரென நடந்துவிட்ட அந்த நிகழ்வுக்கு எப்படி பிரதிபலிப்பது என்று தெரியாமல் நொடித்துளிகள் திகைத்து நின்றவள், நடந்தது உறைக்க, “ஐயோ.. என்ன இது? எதற்காக என் காலில் விழுகிறீர்கள்.” என்று பதறி துள்ளித் தள்ளி நின்றாள்.

 

“இந்த நரகத்திலிருந்து வெளியே போக எனக்கு உதவி செய்யுங்கள். சாகும் வரைக்கும் மறக்கமாட்டேன்..” மித்ராவின் கால்களை விடாது பற்றிக்கொண்டு கன்னங்களில் கண்ணீர் வழியக் கெஞ்சினாள் அந்தப்பெண்.

 

அவளைப் பார்க்கவே பெரும் பாவமாக இருந்தது. “நான்.. என்ன.. என்ன உதவி செய்வது? முதலில் எழுந்திருங்கள்..”

 

தன் அதிர்ச்சியை ஒருவாறு அடக்கிக்கொண்டு அந்தப்பெண்ணை எழுப்பி நிறுத்தினாள் மித்ரா.

 

அச்சத்தோடு திறந்திருந்த கதவுப்பக்கம் பார்வை சென்று மீள, “தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துச் சித்ரவதை செய்கிறார். அம்மா அப்பா என்று யாரோடும் என்னைக் கதைக்க விடுவதும் இல்லை. இலங்கைக்கே என்னை அனுப்பிவிடுங்கள் என்றால் அதுவும் மாட்டாராம். தயவுசெய்து போலிசுக்கு அழைத்து சொல்லுங்கள். என்னால் இனியும் இந்தக் கொடுமையை எல்லாம் தாங்க முடியாது..” என்றாள் அழுகையோடு.

 

போலிசுக்கா? மனம் அதிர்ந்தாலும், அவள் நின்ற கோலம் அந்தக் காட்டுமிராண்டியின் வக்கிரத்தைக் காட்ட, ‘போலிசுக்கு எல்லாம் போகவேண்டாம், சமாளித்துப்போ’ என்று சொல்ல மித்ராவால் முடியவே இல்லை.

 

“நான் எப்படி? உங்களுக்கு பிரச்சனை என்றால் நீங்கள் தானே சொல்லவேண்டும்.” என்றாள் அப்போதும் தயங்கி.

 

“எனக்கு டொச்சு தெரியாதே. தெரிந்திருக்க எப்போதோ சொல்லி இருப்பேனே. போன் கூட வீட்டில் இல்லை. இனியும் என்னால் முடியாது.. ஐயோ கதைத்து நேரத்தை ஓட்டாதீர்கள். அவன் பாத்ரூமில் நிற்கிறான். வெளியே வரமுதல் போலிசுக்கு சொல்லுங்கோ.. இல்லையென்றால் அதற்கும் அடிப்பான்..”

 

“அது.. அது.. நீங்களே.. மொழி தெரியாவிட்டாலும் உங்கள் வீட்டு அட்ரெஸ்சை சொன்னால்…” என்றவளின் காலில் மீண்டும் விழுந்தாள் அந்தப் பெண்.

 

“உங்கள் சகோதரியாக நினைத்து எனக்கு இந்த உதவியை செய்யுங்கள். இல்லாவிட்டால் பால்கனியால் குதித்துச் செத்துவிடுவேன். இரண்டு உயிர்கள் போவதற்கு நீங்களும் காரணமாகிப் போவீர்கள். தயவுசெய்து என்னையும் என் பிள்ளையையும் காப்பாற்றுங்கள்.” என்றவளின் கதறலில் சகபெண்ணாய் மித்ராவின் உள்ளம் துடித்தது.

 

இரண்டு உயிரா? திகைத்துப்போய் பார்த்தவளின் விழிகளில் அப்போதுதான் சற்றே மேடிட்டிருந்த அவளது வயிறு தென்பட்டது.

 

என்ன மிருகம் அவன்? வயிற்றில் அவன் வாரிசை சுமப்பவளை போட்டு அடித்திருக்கிறானே!

 

அதோடு அவள் சொன்ன ‘பால்கனியால் குதிப்பேன்’ என்றது நெஞ்சை அதிரவைக்க, அதற்குமேலும் தான் தயங்குவதுதான் தவறு என்று உணர்ந்து உடனேயே போலிசுக்கு அழைத்தாள்.

 

அழைத்து விஷயத்தை சொன்னவள், போலிஸ் வந்ததும், அந்த மனிதன் தன் மனைவியை இன்று மட்டுமல்ல எப்போதும் அடிப்பது வழமை என்பதை அயல் வீட்டுக்காரியாக சாட்சியும் சொன்னாள்.

 

போலிஸ் வாகனத்தைக் கண்டதும் அந்தக் கட்டிடத்தில் இருந்த அனைவருமே அங்கு ஒன்று கூடி நின்றிருந்த வேளையிலும், “சாகும்வரைக்கும் இந்த உதவியை மறக்கமாட்டேன்.” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அந்தப் பெண்.

 

error: Alert: Content selection is disabled!!