தனிமைத் துயர் தீராதோ 33 – 2

“ஹாய்..” என்றான் அவன் ஸ்நேகமாக.

 

இவளுக்கோ இருந்த படபடப்பு இன்னும் அதிகரித்தது.

 

ஏற்கனவே அவனோடு மோதிவிட்டதில் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அது போதாது என்று தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளாலும் அவளுக்குள் என்னென்னவோ மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தான் அவன். இதில் அஞ்சலி வேறு அறிமுகப் படுத்திவைக்க, “ஹா..ய்..” என்றாள் பெரும் சிரமப்பட்டு.

 

“இவர் ஜான் அண்ணா பவிக்கா. என்னுடைய பாட்மிண்டன் ட்ரைனர். அதோடு எங்கள் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவனும் கூட. இல்லையா அண்ணா?”

 

ஆம் என்பதாக தலையை அசைத்தவன், “இவளோடு எப்படிப் பழகுகிறீர்கள்? எப்போது பார்த்தாலும் லொடலொடத்துக்கொண்டு இருப்பாளே.” என்று கேட்டான்.

 

அவனது கண்ணோரங்கள், அடக்கப்பட்ட சிரிப்பில் துடிபதைக் கண்டவளின் இதயம் எம்பிக் குதிக்கத் தொடங்கியது.

 

பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற, “அண்ணா…!!” என்று சிணுங்கிய அஞ்சலி, “பவிக்கா தனா அண்ணாவின் தங்கை. தனா அண்ணா என் அண்ணாவின் நண்பர். பிறகு எப்படி பழகாமல் இருப்பதாம்?” என்றாள்.

 

“தனா… அண்ணா?” கேள்வியாக ஏறிட்டான் அவன்.

 

“தனா அண்ணாவை தெரியாதா? நியூ சிட்டியில் வேலை செய்கிறாரே.. அவர்தான்.”

 

“ஓ….!” என்று இழுத்துவிட்டு, “ம்ம்.. தெரியும்.” என்றவனின் விழிகள் பவித்ராவின் முகத்தில் சற்றே அதிகமாக படிந்தது.

 

அதை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தாள் பவித்ரா. வெட்கம் என்றல்லாது ஒருவித கூச்சம். அதுநாள் வரை அவள் அறிந்த ஆண் தந்தை மட்டுமே. தமையன் கீர்த்தனனின் அருகாமை கூட இந்த சில மாதங்களாகத்தான். அடுத்த ஆணென்றால் அது சந்தோஷ்.

 

அப்படியிருக்க, ஒரு ஆணோடு அதுவும் நேருக்கு நேராக மிக அழுத்தமாக மோதிக்கொண்டோமே என்று நினைக்க நினைக்கவே மேனியெல்லாம் என்னவோ செய்தது. அவனோ அதன் பாதிப்பு சிறிதும் இல்லாமல், அவளின் முகம் பார்த்து பேசினான். அது அவனை பாதிக்கவே இல்லை என்பதும், தவறுதலாக நடந்ததை அவன் இயல்பாக ஒதுக்கியதும் அவளுக்கு பிடித்திருந்த போதிலும், அவனைப்போன்று இயல்பாக முகம்பார்த்து கதைக்க முடியவே இல்லை. நெஞ்சப் படபடப்பும், கைகால்களின் பதறலும் இன்னுமே அடங்க மறுத்தது.

 

“அவர் தனியாக இருப்பதாகத்தானே கேள்விப்பட்டேன்.” என்று அவன் கேள்வியாக இழுக்க, “பவிக்கா ஜெர்மனி வந்து கொஞ்ச நாள்தான் ஆகிறது.” என்றாள் அஞ்சலி.

 

“ஓ… அப்போ ஊருக்கு புதிதா?” என்றவனின் விழிகளில் மெல்லிய பளபளப்பு.

 

இதென்ன விதமான பார்வை என்று பவித்ரா யோசிக்கத் தொடங்கும் போதே, “ஜெர்மனி பிடித்திருக்கிறதா உங்களுக்கு?” என்று வினாவினான் அவன்.

 

“ம்ம்..” என்றவளின் விழிகளிலோ தடுமாற்றம்.

 

அவன் என்னவோ அவளோடும் அஞ்சலியோடு சகஜமாகத்தான் உரையாடினான். அவளுக்குத்தான், அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், கம்பீரமாக நிமிர்ந்து நின்று வரிசைப் பற்கள் பளீரிட உரையாடும் அவனை சகஜமாக எதிர்கொள்ள இயலவில்லை.

 

அதை உணராமல், முதலில் சாதரணமாக அவளிடம் பேச்சுக் கொடுத்தவனுக்கு அவளின் தடுமாற்றம் புரிய புருவங்கள் சுருங்கியது. அதன்பிறகு அஞ்சலியோடு மட்டும் பேசிவிட்டு, விடைபெற்றுச் சென்றான்.

 

வருகிறேன் என்பதற்கு அடையாளமாக அவன் அசைத்த அந்த சின்னத் தலையசைப்பு அவளுக்குள் பெரும் பிரளயத்தையே உண்டாகிற்று!

 

அதன்பிறகு நடந்த எதுவுமோ அவள் கண்ணிலும் படவில்லை. கருத்திலும் பதியவில்லை.

 

 

இங்கே சத்யனோடு கதைத்துவிட்டு வந்த கீர்த்தனன், காரை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு, அதற்கு மேலும் முடியாமல் ஸ்டேரிங் வீலின் மேலேயே கவிழ்ந்துகொண்டான்.

 

கத்தி அழுதால் என்ன என்றுதான் இருந்தது. அந்தளவுக்கு நெஞ்சமெல்லாம் காயம்! ரணம், வலி, வேதனை என்று வார்த்தைகளில் வடிக்க முடியாத உணர்வுகள் அவனை தாக்கின.

 

ஒழுக்கக் கேடாக நடந்தவள் என்று வெறுத்து, தன் வாழ்க்கையில் இருந்தே ஒதுக்கிய மித்ராவின் வாழ்வில் இவ்வளவு பெரிய காயங்கள் உண்டு என்பதை அவன் அறியானே! அறிவதென்ன, கனவிலும் கூட நினைத்துப் பார்த்ததே இல்லை!

 

ஆனாலும், அவள் செய்ததை, நீக்கோவுடனான அந்த உறவை இப்போதும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது உண்மை! அந்த வேதனை அவனுக்குள் நிச்சயம் உண்டு! ஆனால், அதற்கான காரணங்களை, சந்தர்ப்ப சூழ்நிலைகளை விளங்கிக்கொள்ள முனைந்தான். அது அவனால் இப்போது முடிந்ததும் கூட!

 

சின்ன வயதிலேயே அநாதரவாக்கப் பட்டவளுக்கு, கெட்டுப் போவதற்கும் பிழையான பாதையில் செல்வதற்கும் பல சந்தர்பங்கள் அமைந்திருக்கும். அதை இத்தனை வருடகால வெளிநாட்டு வாழ்க்கை மூலம் அவன் அறிவான். அப்படி இருந்தும், தன்மேல் பாசமே காட்டாத அன்னைமேல் பாசம் வைத்து, தன்னுடைய பெயரளவு தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் மேல் உயிரையே வைத்து, அவர்களுக்காகவும் தனக்காகவும் என்று சின்ன வயதில் இருந்தே போராடி, உழைத்து, படித்து முன்னேறியவள் இயல்பிலேயே கெட்டவளாக இருக்க சந்தர்ப்பமே இல்லையே!

 

ஆனால், அத்தனை நாட்களும், அவ்வளவு துயர்களையும் எதிர்த்து நின்று வாழ்வில் முன்னேறக் கடுமையாக போராடியவள் அன்று மட்டும் ஏன் நெறி பிறழ்ந்தாள்? அது அவள் வாழ்க்கையில் நடந்த பெரும் பிசகா? அல்லது அவனோடும் அவளோடும் விளையாடிப் பார்க்க எண்ணிய விதியின் சதியா?

 

அன்றைய தினத்தை தவிர வேறு எப்போதும் அவள் தவறவில்லையே! அன்று, உடல் தேவைதான் அவளது தேவை என்றிருக்க, அந்த வாழ்க்கையை தொடர்ந்திருக்கவும் முடியுமே.

 

அங்கே அவளுக்கு தேவைப் பட்டது மனதுக்கு ஒரு துணை! உனக்கு என்றைக்கும் பக்க பலமாக நானிருப்பேன் என்கிற நம்பிக்கை! காலமெல்லாம் சேர்ந்து நடக்க ஒரு ஜோடிக் கால்கள்!

 

error: Alert: Content selection is disabled!!