அப்படி துணையாக வருவான் என்று அவள் நம்பியவன், பிடிக்கும் மட்டும் சேர்ந்திருப்போம் என்று சொன்னபோது மறுத்துவிட்டாளே!
அதோடு, அன்று அவன் கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவள் சொல்லியிருக்க, அதன்பிறகு யார் என்ன சொல்லியிருந்தாலும் அவன் நம்பியே இருக்க மாட்டானே!
ஆனால், அதை ஏன் அவள் முதலே சொல்லவில்லை? எதற்காக மறைத்தாள்? மறைக்கும் எண்ணம் முதலே இருந்திருக்க அவன் கேட்டபோதும் இல்லை என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்?!
அதோடு, ஜெர்மனியில் பிறந்து வளர்ந்து, படித்து, சம்பாதித்து சொந்தக் காலில் நிற்பவளுக்கு அவனுடைய துணை என்பது பொருளாதார விசயத்திலோ மற்ற விஷயங்களிலோ தேவை என்பது இல்லை. அவனே சட்டப்படி அவளை உதறித் தள்ளியபிறகு, தனக்குப் பிடித்த வாழ்க்கையை தனக்கு பிடித்த விதமாக அமைத்துக் கொண்டிருக்க அவளால் இயலும்!
அதனை தட்டிக் கேட்கும் உரிமை அவன் உட்பட யாருக்குமே கிடையாது. அப்படியிருந்தும், இன்றுவரை அவனுக்காக காத்திருப்பவளின் காத்திருப்புக்கு பொருள் என்ன?
திடீரென காரின் கதவு திறக்கப்பட்டு, “அப்பா..” என்றபடி அவன் மடியில் ஏற முயன்ற சந்தோஷ் அவனது நினைவுகளை கலைக்க, நிமிர்ந்து அமர்ந்தான் கீர்த்தனன்.
சந்துவோ வேகமாக தந்தையின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டு ஸ்டேரிங்கை தன் கைகளால் பிடித்துச் சுழற்றி விளையாடத் தொடங்க, அருகில் நின்ற தங்கையை திரும்பிப் பார்த்தான் கீர்த்தனன்.
“வந்து நிறைய நேரமா அண்ணா?” என்று கேட்டாள் அவள்.
அவள் கையிலிருந்த பைகளை கவனித்துவிட்டு, “இப்போதான் நானும் வந்தேன். கடைக்கு போவதாக சொல்லியிருக்க காசு தந்திருப்பேனே பவி” என்றான், தன்னை சமாளிக்க முயன்றபடி.
“நீங்கள் ஏற்கனவே தந்தது இருந்தது அண்ணா. அதோடு, அஞ்சு முதலில் கடைக்கு போவதாக சொல்லவில்லை.” என்றவள், மூவருமாக வீட்டுக்குள் வந்ததும், வாங்கிக்கொண்டு வந்த உடைகளை அலமாரிக்குள் அடுக்கும் சாட்டில் தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
தமையனோடு சாதரணமாக உரையாட முடியாமல் என்னவோ களவு செய்தவள் போன்று மனம் தடுமாறியது. எந்த வேலையும் ஓட மறுக்க கட்டிலில் சாய்ந்து, கண்களை மூடிக்கொண்டாள். மூடிய விழிகளுக்குள் ஜான் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, “ஹாய்..” என்றான்.
திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள். ஏன் இப்படி அவனையே நினைக்கிறோம்? நினைக்க கூடாது என்று நினைத்தாலும் முடியவில்லையே!
எதிர்பாராமல் நடந்த ஒன்றை ஏன் இந்தளவு தூரத்துக்கு மனம் காவுகிறது என்பதும் புரியவில்லை.
திடீர் என்று அழகான ஆணை சந்தித்தும் அவனோடு மோதியதாலும் உண்டான சலசலப்பு போலும் என்று அவள் எண்ண, அவனோ நாட்கள் சில கடந்தும் அவளின் நினைவுகளில் இருந்து மறைய மறுத்தான்.
அந்த கூரிய விழிகளும், கம்பீரத்தைக் கூட்டும் நாசியும், அழுத்தமாய் அமைந்த உதடுகளும், நகைக்கையில் பளீரிட்ட வரிசைப் பற்களும், களையான முகமும், அவனது உயரமும், ஒரு கையில் அவனுடைய கோர்ட்டை மடித்துப் போட்டபடி இலகுவாக நின்று உரையாடியதும் கண்ணுக்குள்ளேயே நின்றது.
ஒரு பென்சிலும் பேப்பரும் எடுத்தவள் அவன் முகத்தை வரைந்தாள். நெற்றியில் புரண்ட அடர்ந்த சிகை தொடங்கி, இடப்பக்க புருவ முடிவில் சின்னதாய் இருந்த மச்சத்தில் இருந்து, அவன் தாடையில் தெரிந்த சின்ன வெட்டுக்காயம் வரை அவளின் சித்திரத்தில் இடம் பெறத் தவறவில்லை.
அதன்பிறகோ, அந்த சித்திரமே அவளுக்கு எல்லமாகிப் போனது. அந்த சித்திரத்தோடு பேசினாள், சிரித்தாள், அதை தலையணைக்கு கீழே வைத்துக்கொண்டு உறங்கினாள், விடிந்ததும் முதன் முதலில் அவன் முகத்தையே தரிசித்தாள்.
தான் ஏன் இப்படியாகிப் போனோம் என்பது புரியாதபோதும், ஒருவித இன்பத்தையும், சந்தோசத்தையும், பரவசத்தையும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் அனுபவித்தாள்.
இப்போதெல்லாம், “வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க அலுப்படிக்கிறது அண்ணா..” என்று சொல்லிவிட்டு, அடிக்கடி நடந்து வெளியே சென்று வந்தாள். அஞ்சலி வீட்டுக்கு கூட நடந்து போய்வந்தாள்.
விழிகளில் எப்போதும் ஒரு தேடல்! மனதினில் ஒருவித ஏக்கம்! பசியில்லை, தாகமில்லை, உறக்கமில்லை!
அஞ்சுவிடம் வேறு, “அன்று எடுத்த உடைகள் போதுமா?” என்று வேறு மெதுவாக கேட்டுப் பார்த்தாள்.
இவள் மனதில் புகுந்துவிட்ட களவை அறியாதவளோ, “போதும் பவிக்கா..” என்றுவிட்டாள்.
எப்போதடா அவனை காண்போம் என்று தவிக்கத் தொடங்கியது மனது! ஏன் நான் இப்படி இருக்கிறேன் என்கிற கேள்விக்கு விடையில்லாத நிலை! நாட்கள் தான் நகர்ந்ததே தவிர, அந்த நிலை மட்டும் மாறக் காணோம்!
அன்றும் அஞ்சலியோடு ஊரைச் சுற்றிவிட்டுத் திரும்புகையில், அவள் விழிகள் சுழன்று சுழன்று ஏக்கத்தோடு அவனையே தேடின. அப்போது அவர்களின் அருகில் காரொன்று சர்ர் என்று வந்து சடன் பிரேக்கிட்டு நிற்கவும் திடுக்கிட்டுப்போய் பார்த்தனர் இருவரும்.
ஆனால், அந்தக் காரிலிருந்து இறங்கிய ஜானைக் கண்டதும், இதயம் பூவாக மலர ஆவலோடு அவனைப் பார்த்தாள் பவித்ரா. வருடக் கணக்கில் பிரிந்திருந்த பிரியமானவனை கண்டுவிட்ட பரவசம் அவளிடம்!
அவனையே பார்த்திருந்தாள். அதுகூட அவனது விழிகள் அவளது விழிகளை சந்திக்கும் வரையில்தான். அப்படி சந்தித்து, அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தபோது மனம் படபடக்க தலையை குனிந்துகொண்டாள்!
அதைக் கவனித்தவன் இதழ்களில் ஒருவித வெற்றிப் புன்னகை!

