அவனைக் காணவேண்டும். கண்டால் பேசவேண்டும், வாயை மூடிக்கொண்டு நிற்கக்கூடாது என்று நினைத்திருந்தவைகள் எல்லாம் பொய்யாக, சித்திரத்தில் இருந்தவனோடு சலசல என்று உரையாட முடிந்தவளால், அருகில் நின்றவனிடம் அமைதி காக்க மட்டுமே முடிந்தது.
“இருவரும் எங்கே போய்விட்டு வருகிறீர்கள்?” பொதுவாக அவன் கேட்க, “சும்மா ஊரை சுற்றிக்கொண்டு வருகிறோம்.” என்றாள் அஞ்சலி.
“ஏன்? உருப்படியான வேலை எதுவுமே இல்லையா?” சிரிப்போடு கேட்டவனை முறைத்தாள் அஞ்சலி.
அந்த முறைப்பில் பவித்ராவின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை அரும்பியது.
“இப்போது பள்ளிக்கூடம் லீவு அண்ணா.”
“சரி! உனக்கு லீவு. இவர்களுக்கு? சாரி.. பெயர் மறந்துவிட்டேன்.” பவித்ராவை காட்டி அவன் சொன்னபோது, அவளின் தாமரை முகம் அனிச்சம் பூவாய் வாடிப்போனது.
இந்த ஒரு வாரமாக ‘ஜான்’ என்கிற பெயரையே தாரக மந்திரமாக உச்சரித்து, சதா காலமும் அவன் நினைவுகளிலேயே அவள் மூழ்கிக் கிடக்க, அவனோ அவளின் பெயரைக்கூட மறந்துவிட்டேன் என்கிறான்.
நெஞ்சுக்குள் சுருக்கென்று வலிக்க, கண்கள் கலங்கும் போலிருந்தது.
“பவிக்கா.. பவித்ரா.” என்றாள் அஞ்சலி.
“ஆமாமாம்! இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. நீங்கள் டொச் வகுப்பு எதற்கும் போவதில்லையா பவித்ரா?” என்று அவளிடம் கேட்டான் அவன்.
அவன் தன் பெயரைக்கூட நினைவில் வைத்திருக்கவில்லை என்கிற அந்த ஏமாற்றம், அதுநாள் வரை அவளுக்குள் இருந்த ஒருவித பரவச உணர்வை வடியச் செய்ததில், “போகிறேன். வாரத்தில் மூன்று நாட்கள்.” என்றாள் அவன் முகம் பாராமல்.
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவன், எந்தெந்த நாட்களில் எத்தனை மணிக்கு போய்வருவாள் என்பதையும் அறிந்துகொண்டான்.
“இந்த ஊர் சுற்றல் தினமுமா நடக்கிறது?” பவித்ராவிடமே இப்போதும் கேட்டான் ஜான்.
“அண்ணா வேலைக்கு போனால் நான் வீட்டில் தனியாகத்தான் இருப்பேன். அஞ்சு வீட்டிலும் அருணா அக்காவும், அர்ஜூன் அண்ணாவும் வேலைக்கு போய்விடுவார்கள் என்பதால் காலையில் அவள் வீட்டுக்கு போய்விட்டு மாலையில் திரும்புவேன்.”
தனக்கு தேவையான விடயங்களை பிடுங்கிக் கொண்டதும், “இருட்டிவிட்டதே.. வாருங்கள் காரில் கொண்டுபோய் விடுகிறேன்.” என்று அழைத்தான் ஜான்.
பவித்ரா தயங்க, அஞ்சலியோ எந்தவித யோசனையும் இன்றி, “சரிண்ணா..” என்றபடி காருக்குள் ஏறி அமர்ந்துவிட, பவித்ராவிடம் கேள்வியாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான் ஜான்.
அந்தச் செய்கை அவள் மனதை பெரிதாக அசைத்துத்தான் பார்த்தது. அதை காட்டிக்கொள்ளாமல் தானும் ஏறி அமர்ந்துகொண்டாள். மனம் மட்டும் சிணுங்கிக்கொண்டே இருந்தது. பெயரை கூட மறந்துவிட்டானே!
ஆனாலும், இனி திரும்ப எப்போது அவனைக் காண்போமோ என்கிற ஏக்கம் மனதில் படர, கண்ணாடி வழியே அவன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள்.
அஞ்சலியின் வீடு வந்ததும், அவள் இறங்கிக்கொள்ள பவித்ராவும் இறங்க முயன்றாள். “நீங்கள் இருங்கள். உங்களை உங்கள் வீட்டில் இறக்கி விடுகிறேன்.” என்றான் ஜான்.
அவனோடு அவள் தனியாகப் போவதா? மனம் ஆர்வத்திலும் பயத்திலும் தடதடக்க, “இல்லை.. வேண்டாம். வீடு கிட்டத்தான்..” என்றுவிட்டு அவள் இறங்க முயல,
“அறியாதவனோடு தனியாக எப்படி வருவது என்று அஞ்சுகிறார் போலும், நான் ஒன்றும் தப்பானவன் இல்லை என்று சொல் அஞ்சலி.” என்றான் ஜான் அழுத்தமான குரலில். முகமும் இறுகிப் போயிற்று!
“ஐயோ.. அப்படியில்லை..” என்று பதறினாள் பவித்ரா.
அஞ்சலியோ ஜானின் பேச்சை கேலியாக ஏற்று கலகலத்துச் சிரித்தவாறே, “பயப்படாமல் போங்கள் அக்கா. ஜான் அண்ணா அக்மார்க் நல்ல பெடியன்.” என்றாள் .
“ஐயோ அஞ்சு நீ வேறு ஏன்? நான் அப்படி ஏதும் சொன்னேனா? அவருக்கு ஏன் வீண் சிரமம் என்றுதான்..” என்று அவள் அவசரமாகச் சொல்ல, “எனக்கு எந்த சிரமமும் இல்லை.” என்று முடித்தான் அவன்.
“சரிக்கா.. பை! நாளை பார்க்கலாம். ஜான் அண்ணா பை..!” என்றபடி அஞ்சலி விடைபெற்றுக்கொள்ள, பவித்ராவின் வீடு நோக்கி விரைந்த காருக்குள் அமைதியே நிலவியது.
ஏக்கத்தோடு அவன் முகத்தை கண்ணாடியில் பவித்ரா பார்க்க அதுவோ இன்னும் இளக்கமின்றி இறுகிப்போய் கிடந்தது.
அந்த இறுக்கத்தை தாங்க முடியாமல், “உங்களை நான் தப்பாக எதுவும் நினைக்கவில்லை.” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த மௌனத்தை தாங்க இயலாமல், “ப்ளீஸ்.. சாரி..” என்று, எதற்கு அந்த ‘ப்ளீஸ்’ஐயும், ‘சாரி’யையும் சொல்கிறோம் என்று தெரியாமலேயே சொன்னாள் பவித்ரா.
“வீடு எங்கே இருக்கிறது என்று சொன்னால் காரை அங்கே விடுவேன்.” அறிவிப்பு போல் அவன் சொல்லவும், இவளுக்கோ கண்ணை கரித்தது.
வீதியின் பெயரைச் சொல்லிவிட்டு, “அதுதான் சாரி சொல்லிவிட்டேனே. தயவுசெய்து கோபிக்காதீர்கள். உண்மையாகவே உங்களைப் பற்றி பிழையாக எதுவுமே நினைக்கவில்லை நான்.” விட்டாள் அழுதே விடுவாள் போன்ற குரலில் சொன்னாள்.
அவனோ எந்தப் பதிலும் இன்றி, அவளின் முகத்தைக் கூட பாராது அவள் காட்டிய வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான். இறங்க மனமே இல்லாமல் காரிலிருந்து அவள் இறங்க, சரேலென வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு சென்று மறைந்தான்.
கோபமாக போகிறானே.! விழிகள் கலங்க மனதில் பாரத்தோடு கார் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டு நின்றாள் பவித்ரா.
இப்படி கோபிப்பான் என்று தெரிந்திருக்க வாயே திறந்திருக்க மாட்டாளே! சரிதான் போடா! நீயென்ன பெரிய இவனா? என்று அலட்சியப் படுத்தவே முடியவில்லை.

