Skip to content
அதற்குமேலும் மறுப்பது நன்றாக இராதென்பதால் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது காரை நோக்கி விரைந்தவன், டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு பெட்டிகளைக் கிளறிக்கொண்டிருந்தவள் அருகில் சென்று நின்றான்.
இவர்கள் பார்வையில் படும் படிதான் நாதனும் நின்றுகொண்டிருந்தார்.
“இன்னுமா எடுக்கேல்ல? காலம எல்லாத்தையும் ஓரேயடியாக் குடுத்திருக்கலாமே!” என்றவன் வார்த்தைகளில் அனலடித்தது.
சட்டென்று திரும்பிப் பார்த்தவள் முகத்தின் பாவனை அந்த அரையிருட்டில் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் கடுமையான பார்வையால் அவளை சுட்டான். பதில் சொல்லவில்லை அவள்.
“எந்த பாக் எண்டு சொல்லு, அறையில கொண்டுபோய் வச்சு எடுக்கலாம்.” தொடர்ந்து சொன்னவனுக்குப் பதில் சொல்லாது ஒரு சிறு பொலித்தின் பையை எடுத்து மேலாக வைத்துவிட்டு, பயணப்பையை மூடி ஒழுங்குபடுத்தி வைத்தவள், “இந்த மழைக்குள்ள இனி ஓடிக்கொண்டு போகாமல் எங்களோட நில்லுங்க வேந்தன், வடிவா இடம் போதும். ப்ளீஸ்! பாருங்க நல்லா நேரமும் போயிற்று!” மெல்லிய குரலில் உரிமையோடு கெஞ்சியவளை என்ன செய்வதாம்.
அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவள் எடுத்து வைத்த பையைப் பார்த்தான். எதுவுமே இல்லை என்ற கணக்கில் அடுத்த செட் உடையையும் எடுத்து வைத்திருக்கிறாள்! அந்தளவுக்கு, தமக்கை ஆசையாகக் கேட்டால் கொடுத்துவிடவேண்டும் என்றளவில் அவ்வளவு அன்பு! இருக்கட்டுமே, யார் வேண்டாம் என்றது? அதே மனம், முதன் முதலாக ஆசையும் அன்புமாக வாங்கிக் கொடுத்தவன் பற்றிச் சிறிதும் யோசிக்கவில்லையே!
“நான் என்ர விருப்பத்தச் சொல்லியும் நீ ஒரு வார்த்த திரும்பிச் சொல்லேல்ல. அதுக்குப் பிறகும் உன்னட்ட நான் எதையும் எதிர்பார்க்கிறது …என்ர முட்டாள்தனம். உன்ர மனசில அந்தளவுக்கு என்னைப்பற்றி இளக்காரம் என்ன?” அடிக்குரலில் சொன்னவனைப் பார்த்தவள் சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். நாதன் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டு நின்றார்.
“நான் என்ன சொல்லுறன், நீங்க என்ன எல்லாம் சொல்லுறீங்க? முதல் உங்கட பேக்கையும் எடுத்துக்கொண்டு வாங்க…ப்ளீஸ்!” தான் எடுத்த ஆடையை எடுத்துக்கொண்டு குடையைக் கையில் எடுத்துக்கொண்டு திரும்பியவளுக்கு, “நான் என்ன செய்யோணும் எண்டு சொல்லுற அலுவல் வச்சுக்கொள்ளாத, அதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்ல!” சீறலாகச் சொன்னபின் தான் அவன் கோபமே புரிந்தது.
“ஐயோ வேந்தன்…” ஆரம்பித்தவள், பட்டென்று விலகியவன் முன்புறமாகச் சென்றுவிட திகைத்து நின்றது ஒருகணம் தான்.
அவன் சாரதியாசனத்தில் ஏறியமர, புறப்படப்போகிறான் என்று நினைத்தாள். குப்பென்று கண்கள் நிறைந்துவிட்டன.
“ஓஹோ அந்தளவுக்கு வந்திட்டோ!” பலகாலமாகப் பழகுபவர்கள் பிணக்குப் படும் வகையிலிருந்தது அவள் சொன்ன விதமும் கோபமும்.
“அப்போ நீங்களும் என்ர விசங்களில வராதீங்க!” சீறலாகச் சொன்னபடி, நின்ற இடத்திலிருந்து குடையை அவன் மீது வீசிய வேகத்தில் மழையில் நனைந்து கொண்டே ஓடினாள்.
“என்னம்மா நீ, குடை எங்க?” கடிந்து கொண்டார் நாதன். பட்டென்று பதில் சொல்லமுடியாது நின்றவள் விழிகளின் கசிவை மறைத்துத் துணை செய்தது மழைநீர்.
“பச்! மறந்து விட்டுட்டு வந்திட்டன் சித்தப்பா.” சமாளித்தவள், “நான் உள்ள போறன்.” தம் அறைக்குள் சென்றுவிட்டாள்.
தோள்புறத்தால் வந்துவிழுந்த குடையை அவன் எதிர்பார்க்கவில்லை. நாதன் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க, மனதுள் புகைந்த எரிச்சலை மறைக்காது அவளிடம் கொட்டிட வழியிருக்கவில்லை. அதில் நின்றுகொண்டிருந்தால் எவ்வளவுக்குத் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியுமோ என்றும் ஐயம் எழுந்தது. அதுவே, விருட்டென்று முன்னால் வந்தேற வைத்திருந்தது. அது பார்த்தால்…
‘செய்யிறதெல்லாம் செய்திட்டுக் கோவமும் வருதோ!’ பற்களை நறும்பியவனுக்கு இப்போது, அவர்களோடு சென்று தங்க சிறிதும் விருப்பம் வரவில்லை. குழம்பிவிட்ட மனம் தனிமையை நாடியோடத் தொடங்கினாலும் நாதன் காத்து நிற்கின்றாரே! முகம் முறித்துவிட்டுக் கிளம்பிச் செல்லவும் முடியவில்லை. சிலநிமிடங்கள் அப்படியேயிருந்து தன்னைக் கட்டுக்குள் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. செய்தான்.
சிலநிமிடங்களின் பின், நிதானமாக வந்தவனைப் பார்த்த நாதன், “நல்லா நனைஞ்சிட்டிங்க தம்பி, வந்து குளிச்சு அலுவலப்பாருங்க.” சேர்ந்து நடந்தார்.
இலக்கியாவோ, உள்ளே சென்றவேகத்தில் பையைத் தமக்கையிடம் கொடுத்துவிட்டு மாற்றுடுப்போடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், மறக்காது கைபேசியோடு!
தமக்கை சொன்ன, “தாங்க்ஸ் செல்லம்!” காதுகளில் பட்டுத் தெறித்தாலும் பதிலிறுக்காது புகுந்துகொண்டவள் கண்கள் கலங்கிவிட்டிருந்தன.
‘இப்பப் போயிருப்பார்.’ வெளியில் சடசடத்துக்கொட்டும் மழை மேலும் மேலும் கண்ணீரைச் சுரக்க வைத்தது. காரோடிக்கொண்டிருக்கையில் அப்பப்போ முதுகை நிமிர்த்தி, இறங்கும் இடங்களில் எல்லாம் காலை மடக்கி கையை நீட்டியென்று அவன் செய்பவை எல்லாம் கவனிக்காதா இருக்கிறாள்? ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் இப்படிக் காரோடுவது என்ன அவ்வளவு சுலபமா?
‘அதுக்கிடையில இத்தின பிரச்சினை!’ கண்ணீரோடு நேரம் பார்த்தாள். ‘இங்க இருந்து பதினைஞ்சு நிமிச தூரம்.’ என்று சொன்ன நினைவில் இன்னமும் போய்ச் சேர்ந்திரான் எனக் கணித்தவள், ‘குளிச்சிட்டு மெசேஜ் போட்டுப் பார்ப்பம்.’ என்ற முடிவில் விரைந்து அலுவல்களைப் பார்த்தாள்.
error: Alert: Content selection is disabled!!