ரோசி கஜனின் இயற்கை – 21 -1

ஆழ்ந்த உறக்கமின்றியே புரண்டுகொண்டிருந்தாள், இலக்கியா. அதுவே விடியற்காலையிலேயே எழ வைத்திட்டு. கைபேசியில் மணி பார்த்தாள், அப்போதுதான் நான்கரையைத் தாண்டியிருந்தது. 

 அசந்துறங்கும் மற்றவர்களைக் குழப்ப மனமின்றி மீண்டும் படுக்கையில் சரிந்தவள், ‘GM வேந்தன்!’ தட்டி அனுப்பினாள். அது பார்க்கப்படவில்லை.

‘எத்தினைக்கு வருவீங்க?’ அடுத்த குறுஞ்செசெய்தி. 

‘இங்க என்ன நித்திரை கொள்ளவிடாமல் செய்திட்டு வடிவா தூங்கினீங்களா?’ 

சிவப்பு முக ஸ்மைலிகளோடு அனுப்பியவள் அந்தப்புறம் பார்க்கப்படவில்லை என்பதை முகச் சிணுக்கத்தோடு அவதானித்துவிட்டு, ‘இது சரிவராது. சத்தம் போடாம நாம நம்மட அலுவல்களப் பார்ப்பம்.’ எண்ணிக்கொண்டேயெழுந்து, மாற்றுடைகள், டாய்லெட் பையோடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அடுத்த அரைமணித்தியாலத்தில் வெளியே வருகையில் சுகுணா எழுந்திருந்தார்.

“ஏனம்மா இவ்வளவு வெள்ளன வெளிக்கிட்டிட்ட? இண்டைக்கு எட்டரை போல போனால் சரியெண்டு சொன்னவே தெரியாதா?”

“தெரியும் மா, பெரிசா நித்திர வரேல்ல.” சொல்லிக்கொண்டே காப்பி மேக்கரருகில் சென்றவள், “உங்களுக்கும் போடட்டா?” கேட்டுக்கொண்டே தனக்கு ஒரு பக்கற்  கப்பசினோவை வைத்து அளவாக நீரை விட்டு மேக்கரைத் தட்டி விட்டாள்.

“சரிதான் போடு, நானும் வோஷ்ரூம் போயிட்டு வாறன்.”  சுகுணா நகர, தாய்க்கு ஒரு கோப்பிப் பக்கற்றை எடுத்து வைத்துவிட்டு கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அவள் அனுப்பிய செய்திகளைப் பார்த்திருந்தான். பதில் அனுப்பவில்லை. ‘பெரிய கொம்பன்!’ முணுமுணுத்தவள், தடித்துத் தொங்கிய யன்னல் திரையை விலத்தி வெளியில் பார்த்தாள்.

 வெளிப்புறம் அவ்வளவாக ஒளி பெறவில்லை; மழை விட்டிருந்தது; உயரே எரிந்த வெள்ளை நியான் உபயத்தில் கழுவிடப்பட்டிருந்த சுற்றம் பளபளத்தது. அப்படியே சுற்றிச் சுழன்ற பார்வையில் பட்டது, அவர்கள் பயணம் செய்யும் வாகனம்.

   “பார்ரா! ஆறுக்கு முதலே கடமை வீரர் வந்திட்டார்.” முணுமுணுத்தவள், அவன் எங்காவது தென்படுகின்றானாவென்று ஆராய்ந்தாள்.

“இலக்கி உன்ர கப்பசினோ ரெடி, எனக்குக் கோப்பி போடேல்லையா?” தாய் கேட்டுக்கொண்டு வர, சட்டென்று வந்து கப்பசினோவை எடுத்துவிட்டு, “இந்தா போட்டுவிடுறன்  மா, வேந்தன் வந்திட்டார் போல!” என்றாள், இயல்பாகக் கதைப்பது போல்.

“அவர் இங்க தானே தங்கினவர், மழைக்க இனிப் போக வேணுமா எண்டு இங்க தங்கச் சொல்லிட்டார், சித்தப்பா. ஆம்பளைகள் நாலுபேருமா ஒரு அறையில தங்கினவே.” சொல்லிக்கொண்டே, “கவி எழும்பன் மா. ஆறு மணி ஆகுது.” மூத்த  மகளிடம் திரும்பிவிட்டாரவர்.

‘அடப்பாவி! போய்ச் சேர்ந்தாரா என்ன ஏதெண்டு நான் மெசேஜ் போட்டு பதை பதைச்சுக்கொண்டிருக்க நீர் குசாலா தூங்கிக்கொண்டு இருந்தீரோ!’ மனதுள் அலறிவிட்டவளுக்கு அவன் முதுகைப் பிளந்திடும் ஆத்திரம்!

‘இருக்கு இண்டைக்கு!’ கறுவிக்கொண்டே, “அம்மா கோப்பியை எடுங்கோ, சித்தி ஆக்கள் எழும்பீட்டினமா எண்டு பார்த்திட்டு வாறன்.” சட்டென்று வெளியேறியிருந்தாள்.

“என்ன இலக்கி ரெடியாகிட்டிரா?” நித்திரைக்கலக்கம் அகலா விழிகளோடு இவளை உள்ளே விட்டுவிட்டு, “குளிச்சிட்டு விடுறன் அக்கா.” ஆருரனின் தாயிடம் சொல்லிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், அஜி.

கவினும் ராஜியின் மகளும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள்.

“சித்தி, எல்லாருக்கும் கோப்பி போடட்டா?” 

“ஓமம்மா. சித்தப்பா ஆட்களுக்கும் சேர்த்தே போடன்.” என்ற ரதி, “வேந்தனும் நிக்கிறார், அங்க நாலுபேர்.” சொல்லிக்கொண்டே தன் ஆயத்தங்களிலிருந்தார்.

“ஓ!” தெரியாதவள் போல் கேட்டுக்கொண்டவள், கோப்பியைத் தயாரித்தெடுத்து,  “அவையள் எழும்பியிருந்தா பிளாஸ்கில் விட்டுக் குடுப்பம் என்ன சித்தி?” தாம் கொண்டுவந்திருந்த பிளாஸ்கில் விட்டு மூடினாள். 

“ஓமம்மா, சித்தப்பா எழும்பியிருப்பார் குடுத்து விடுறியா?” என்றதும்,  “ம்ம்…குடுத்திட்டு வாறன்.” வெளியேறி, பக்கத்தறைக்கதவை மெல்லத் தட்டிவிட்டு நின்றவள், வேந்தன் வந்து கதவைத் திறக்கவேண்டுமென்ற எதிர்ப்பார்போடுதான் நின்றாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!