Skip to content
கதவைத் திறந்தார் நாதன். “கோப்பி போட்டாச்சோம்மா!” பிளாஸ்கை வாங்கிக்கொண்டார்.
“நாம வெளிக்கிட்டுட்டுப் பக்கத்தில மேக் டொனால்ட்சில காலம சாப்பிட்டுட்டுப் போகச் சரியா இருக்கும்.”
“ம்ம்… சரி சித்தப்பா. ஆரூரன், மாறன் சித்தப்பா ஆக்கள் எழும்பெல்லையா?” அங்கு நின்றே உள்ளே எட்டிப்பார்த்தாள்.
“வேந்தன் குளிக்கிறார், அதனால கிடக்கினம்.” சொன்னவர் உள்ளே திரும்பிவிட, “சரி சித்தப்பா.” திரும்புவதைத் தவிர வழியிருக்கவில்லை. அஜி ஆட்கள் தங்கியிருந்த அறைக்கே சென்றுவிட்டாள்.
குளியலறைக்குள் இருந்தவனுக்கு அவள் குரல் நன்றாகவே கேட்டது. அவளைப் பார்க்க வேண்டும் போலொரு உந்துதல் எழுந்தாலும் அடக்கிக்கொண்டான். கூடவே எழுந்த கோபம் அடக்க வைத்தது. இன்னும் சிறிது நேரத்தில், அவன் ஆசையாக வாங்கிக்கொடுத்த ஆடையோடு கவியைக் காணத்தானே போகிறான், இன்று முழுநாளும்.
முதல் நாள் அனுபவித்த அதே எரிச்சலும் கோபமும் இன்று முழுதும் அவனை ஆட்டி வைக்கத்தான் போகின்றது. அதை ஒன்றுமேயில்லை என்றளவில் சமாளிக்க அவளும் ஏதாவது செய்யத்தான் போகிறாள். ஆனால், அவன் இளக்கம் காட்டப் போவதில்லை.
மனம் இறுக தன் வேலைகளை முடித்தவன், “கோப்பி குடியுங்க தம்பி.” என்ற நாதனிடம், அவள் கொண்டு வந்த கோப்பி வேண்டாம் என்று மறுக்க முடியாது வாங்கிக் குடித்தான்.
“அங்கிள் காருக்குப் போகப் போறேன், பாக்குகள் ஏதாவது வைக்கிறது எண்டால் வைக்கலாம்.” என்றதும், “ஓம், நானும் வாறன்.” தேவையில்லை என்ற பைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியவர்கள் அடுத்த இரு அறைகளிலும் பைகள் வைப்பதென்றால் வரலாம் என்றுவிட்டே சென்றார்கள்.
அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அநேகமாக எல்லோரும் புறப்பட்டிருந்தார்கள்.
“இலக்கி எங்க அஜி சித்தி? காலம எழும்பினதுக்கு கண்ணிலேயே காணேல்ல.” என்றபடி வந்த கவியைப் பார்க்காது கவனமாகத் தவிர்த்தான், வேந்தன். சாரதியாசனத்தில் அமர்ந்திருந்தவன் அன்றைய, அடுத்த நாளைய பயணவிபரங்களை ஆராயும் சாட்டில் அவர்கள் புறம் பார்க்கவேயில்லை.
“கவின வெளிக்கிடுத்திறா. காலம கண்ணைத் திறந்ததும் அக்கா தான் எல்லாம் செய்யவேணும் எண்டு அவவவோட ஒட்டிட்டான். அதால தான் நான் கெதியா வெளிக்கிட்டுட்டன்.” என்றாள் அஜி.
“இன்னும் எவ்வளவு நேரமாகும்?” நாதன் கேட்க, “ஒரு அரைமணித்தியாலம்.” என்றான் மாறன்.
“அப்ப நாம பக்கத்தில சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒருக்கா போயிட்டு வரலாம் அண்ணி.”
“ம்ம், சரி போயிட்டு வந்திருவம்.” என்ற சுகுணாவோடு நாதனின் மனைவியும் வாகனத்தில் ஏற, “போயிட்டு வந்திட்டு வெளிக்கிடச் சரியா இருக்கும் தம்பி.” என்றபடி முன்னால் ஏறினார், நாதன்.
“நாங்க எண்டா ரெடி!” என்ற கவி, ஆரூரனோடும் மற்ற இருவரோடும் வரவேற்பில் ஒரு ஓரமாகவிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட்டாள். அதுவரை தாம் எடுத்திருந்த புகைப்படங்களை பார்ப்பதும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதுமாக அவர்களிருக்க, சூப்பர் மார்க்கெட் போயிருந்தவர்கள் வரவும் கவின் தயாராகவும் சரியாகவிருந்தது.
நாதனும் மாறனும் செக்கவுட் செய்துவிட்டு வர, எல்லோரும் வாகனத்தில் ஏறியிருந்தார்கள்.
“போவம் தம்பி.” நாதன் முன்னால் ஏறிக்கொண்டார்.
“இலக்கி இன்னும் என்ன வைக்க இருக்கு?”
“என்ர டொய்லட் பாக் தான். வச்சிட்டன் சித்தப்பா, நீங்க ஏறுங்கோ!”
“சரி வா.” மாறன் உள்ளிட, கடைசியாக ஏற முனைந்தவள், அக்கணம், வேந்தனின் பாராமுகத்தில் கோபம் கொள்ளாது உதடுகளுள் நெரிந்த முறுவலோடு தான் நின்றாள்.
சாரதியாசனத்தின் மேல் பகுதியைப் பற்றிக்கொண்டே ஏறுவது போல் உள்ளிட்டவளின் கை கொத்தாய் வேந்தனின் பிடரி சிகையைப் பற்றி உன்னி இழுத்திருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்திருக்க எதுவுமே நடவாதபாவனையில் உள்ளிட்டிருந்தாளவள்.
அவள் வந்தது, பை வைப்பதாகப் பெயர் பண்ணிக்கொண்டு நின்றதையெல்லாம் உணர்ந்திருந்தாலும் அவளைப்பாராது இருந்த வேந்தன், “ஏய்!” சுள்ளென்ற வலியில் கோபமும் சேர மற்றவர்களை மறந்து தீவிழியோடுதான் திரும்பினான். அவ்வளவும் தான்.
அவன் பார்வை, மின்னலாக உரசிய இலக்கியாவின் பார்வையில் தடுமாறி, கணத்தில் அவளை அளவெடுத்து, தான் கொண்டிருந்த கோபத்தைத் தொலைத்துவிட்டு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது.
அவளோ, கடைசி வரிசைக்குச் சென்று அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
“என்ன வேந்தன்?” கேட்ட நாதன், அவன் பார்வையைத் தொடர்ந்து இலக்கியாவைத் திரும்பிப் பார்த்தார். அங்கிருந்த அனைவர் பார்வையும் அதையேதான் செய்தது.
சட்டென்று உள்ளுக்குள் எழுந்துவிட்ட நகைப்பைப் புதைத்துக்கொண்டு, “சொறி! உண்மையாவே தவறி!” வேந்தனிடம் சொன்ன வேகத்தில், “அது வந்து …சித்தப்பா…ஏறேக்க சீற்றில பிடிச்சு ஏறினனா, அவரட தலைமயிர் இழுபட்டுட்டு…இலேசாத்தான்.” என்று சொல்லும் போதே அவளையும் மீறி பக்கென்று நகைத்துவிட்டாள்.
“இலக்கி என்ன விளையாட்டு இது!?” அடிக்குரலில் அதட்டினார் சுகுணா.
“இல்ல ஆன்ட்டி, இலேசாத்தான். நான் தான் திடுக்கிட்டுட்டுட்டன், விடுங்க.” சொன்னவேகத்தில் வாகனத்தை எடுத்தான், வேந்தன். அவனுள்ளமோ, முதல்நாள் காலை தொடங்கி சென்ற கணம் வரை அனுபவித்த வெம்மை மாயமாகிப் போயிருக்க இலேசாகிக் கிடந்தது.
error: Alert: Content selection is disabled!!