அதுநாள் வரையில், எதிர்பாராமல் நடந்த சந்திப்புக்கள் இப்போதெல்லாம் கைபேசி வழியாக திட்டமிட்டு சந்திக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது.
அன்றும், ஏற்கனவே பேசிக்கொண்டபடி, வழமையாக அவர்கள் சந்தித்துக்கொள்ளும் கஃபேடேரியாவில் பவித்ராவுக்காக காத்திருந்தான் ஜான்.
நாற்காலியில் அமர்ந்து இருந்தவனின் கைகள் இரண்டும் மேசையில் இருக்க, அந்தக் கைகளுக்குள் தன் செல்லை வைத்து சுழற்றிக் கொண்டிருந்தான். அதில் தன் பார்வையை பதித்திருந்தாலும், நெரித்திருந்த புருவங்களும், விழிகளில் தெரிந்த கூர்மையும் அவன் ஏதோ பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பது நன்கே தெரிந்தது.
அங்கே நடந்து வந்துகொண்டிருந்தாள் பவித்ரா. எதேர்ச்சையாக நிமிர்ந்தவனின் விழிகளில் அவள் பிம்பம் விழ, அவளையே வெறித்தான்.
விழிகளில் ஆர்வமும், முகத்தில் மலர்ச்சியும், நடையில் வேகமுமாக வந்தவள், அவன் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் சற்றே குழப்பமடைய, அதில் சட்டென தன்னை மீட்டுக்கொண்டவன் தன் பார்வையை மாற்றினான்.
கடும் நீலத்தில் ஜீன்சும், வெள்ளையில் சிவப்புக் கோடுகள் போட்ட முழுக்கை டாப்பும் அணிந்து, மெல்லிய குளிருக்கு இதமாக கழுத்தில்நீலநிற ஷால் கட்டியிருந்தாள் பவித்ரா. கால்களில் இலகுவாக நடக்கக் கூடிய அளவிலான ஹீல்ஸ். கொடியென துவண்ட மேனி அவளின் நடைக்கேற்ப தன் அசைவுகளை அழகாக வெளிப்படுத்த, வந்துகொண்டிருந்தவளை ஆர்வப் பார்வை பார்த்தான் அவன்.
எப்போதுமே கூர்மையுடன் அவளைக் கவர்ந்திழுக்கும் பார்வை இன்று ஆர்வத்தை வெளியிட்டதில் காதுமடல்கள் சூடாக பார்வையை தழைத்துக்கொண்டவளின் மனம், அவன் தன்னை, தன் அழகை ரசிக்கிறான் என்பதில் துள்ளியது. அதோடு, துளைக்கும் அந்தப் பார்வையில் மெல்லிய படபடப்பும் உருவானது.
அதையெல்லாம் மறைத்தபடி, “ஹாய் ஜான்!” என்றவாறே அவனெதிரே வந்து அமர்ந்தவளிடம், “ஏன் லேட்?” என்று கேட்டான்.
“வகுப்பு முடிய கொஞ்சம் பிந்திவிட்டது.” என்றபோது, அவனது கைபேசி இசைத்தது.
அதில் ஒளிர்ந்த இலக்கத்தை கவனித்தவனின் முகத்தில் கவனம் தோன்றியது. “முக்கியமான அழைப்பு. இரு கதைத்துவிட்டு வருகிறேன்..” என்றவன், எழுந்து சென்றான்.
அவளுக்கு கேட்காத தூரம் சென்று பேசத்தொடங்க, அவன் கவனம் தன்னிடம் இல்லை என்ற துணிச்சலில் அவனை ஆர்வத்தோடு கவனித்தாள் பவித்ரா.
ஒரு கையை மடக்கி செல்லை காதுக்குக் கொடுத்தபடி, மற்றக் கையின் பெருவிரலை மட்டும் பாக்கெட்டுக்குள் விட்டபடி நின்றவனின் தோற்றம் அப்படியே மனதை அள்ளியது.
அவன் பேசிமுடித்துவிட்டு தன்னை நோக்கி வருவதைக் கூட உணரமால் இருந்தவளை நெருங்கி, “என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று கண்ணைச் சிமிட்டிக் கேட்டான் ஜான்.
ஐயோ…! உன் கள்ளத்தனத்தை காட்டிக் கொடுத்திட்டியேடி பவி! கன்னங்கள் சூடாக, வேகமாக ஒன்றுமில்லை என்பதாக தலையாட்டினாள்.
உதடுகளில் புன்னகையை தவழ விட்டவன், “அப்போ.. நீ என்னைப் பார்க்கவில்லை?” என்று குறும்போடு கேட்டான். இவள் முகமோ இப்போது வெளிப்படையாகவே சிவந்தது.
இனி மறைக்கமுடியாது என்றுணர்ந்து, “பார்த்தால் என்னவாம்?” என்றாள்.
“பார்த்ததில் ஒன்றுமில்லை. அதை மறைத்ததில் தான் என்னவோ இருக்கிறது.”
எல்லாவற்றையும் கவனித்திருக்கிறான்..! “நான் எங்கே மறைத்தேன்?”
“முதலில் நான் கேட்டபோது மறுப்பாக தலை அசைத்தாயே..”
இவன் விடமாட்டான் போலவே…!
“ஐயோ ஜான். சும்மா பார்த்தேன். அதனால் தான் நீங்கள் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தேன். போதுமா?” என்றாள் விரிந்த புன்னகையோடு.
“அப்போ சும்..மாதான் பார்த்தாயா? நானும் ஏதோ இருக்கிறதாக்கும் என்று நினைத்தேன்..” அவனும் விடுவதாக இல்லை.
ஏன் இல்லாமல்? நிறைய இருக்கிறது. அதை சொல்லத்தான் தெரியவில்லை. தன் மனதில் நடக்கும் இந்த மாற்றங்கள் சரிதானா என்கிற கேள்வியும் தோன்ற என்றும்போல் அன்றும் குழம்பித் தவித்தாள் பவித்ரா.
மெதுவாக அவளின் கையை பற்றினான் ஜான். இப்போதெல்லாம் அடிக்கடி இதைச் செய்கிறான். அவளும் உள்ளூர ஆசையோடு எதிர்பார்ப்பதும் அதைத்தான்!
அவளின் விழிகளோடு தன் விழிகளை கலக்கவிட்டு, “நானும் என்னவோ நீ என்னை ஆசையாக பார்க்கிறாய் என்று நினைத்து சந்தோசப் பட்டுவிட்டேன். நீயானால் சும்மா பார்த்தேன் என்கிறாயே..” என்று அவன் தன் மாயக்குரலில் சொன்னபோது,
மனம் தடுமாற, “அது.. அது இன்று இந்த உடையில் நீ…ங்கள் மிகவும் அழகாக இருந்தீர்களா.. அதுதான் பார்த்தேன்.” என்றாள் பவித்ரா அவனைப் பாராது.
“சும்மா.. எனக்காக பொய் சொல்லாதே பவி..” என்று அவன் சொன்னபோது, ஆனந்தமாக அதிர்ந்தாள் பவித்ரா.
அவளோடு பழகும் எல்லோருமே அவளை பவி என்றுதான் அழைப்பர். அது அவளுக்கு பழகிய ஒன்று. ஆனாலும், அவன் வாயிலிருந்து அதே செல்லச் சுருக்கத்தை கேட்டபோது, என்னவோ அவன் அவளையே செல்லமாக கொஞ்சியத்தை போன்று இன்பமாக உணர்ந்தாள் பவித்ரா.
அந்த இன்பம் கொடுத்த தித்திப்பில், “இல்லை.. மெய்யாகவே..” என்றவளுக்கு, மேலே சொல்ல முடியாமல் நாணம் தடுத்தது.

