இப்போது தன் இரண்டு கரங்களுக்குள்ளும் அவள் மென் கரத்தை அடக்கி, “அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா பவி?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது, மயக்கத்தில் இருந்தவளின் தலை மேலும் கீழுமாக ஆடியது.
“உண்மையாகவா?”
நாணம் தடுத்தாலும் அவனை நிமிர்ந்து பார்த்து, “என்னைவிட எனக்கு உங்களைத்தான் அதிகமாகப் பிடிக்கும் ஜான்.” என்று சொல்லியேவிட்டாள் பவித்ரா.
அவனது சந்தோஷத்துக்கு அளவேயில்லாமல் போயிற்று! “இதை நாம் கொண்டாடியே ஆகவேண்டுமே! நாளை வருகிறாயா கோப்லென்ஸ்(ஜெர்மனியின் அழகான நகரங்களில் இதுவும் ஒன்று) போய்வரலாம்.” என்று கேட்டான்.
“கோப்லென்சுக்கா? ஐயோ.. என்னால் முடியாது.”
அவளது அவசர மறுப்பில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன. “ஏன்?” என்று கேட்டான் அவன்.
அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் இவளுக்கு பதறியது. “அது.. சும்மா ஏன் அவ்வளவு தூரம் போவான்.” என்று சமாளிக்கப் பார்த்தாள்.
“சும்மா எங்கே போகிறோம்? நம் சந்தோசத்தைக் கொண்டாட.. ஊர் சுற்றிப் பார்க்க போகிறோம்.” என்றான் அவன்.
“பி..றகு போகலாமே..”
“ஏன்? பிறகு போவதை நாளைக்கே போனால் என்ன நடந்துவிடுமாம்?”
அவன் அவளை விடுவதாகவே இல்லை என்றதும், “இது.. இது தப்பில்லையா?” என்று மெல்லச் சொன்னாள் பவித்ரா.
“இதிலே என்ன தப்பு? அன்றும் காரில் வரத் தயங்கினாய். இன்றும் மறுக்கிறாய். அந்தளவுக்கு என்மீது நம்பிக்கை இல்லாதவள் எதற்கு என்னை பிடிக்கும் என்று சொன்னாய்?” என்றான் கோபமாக.
“என்ன ஜான். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதையே விளங்கிக்கொள்ளாமல் பேசினால் எப்படி? என்னைப் பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள். அண்ணாவிடம் இதை என்னவென்று சொல்லமுடியும்?” என்று மனத்தாங்கலோடு கேட்டாள் அவள்.
“சும்மா ஏதாவது சாட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லாதே. இப்போது மட்டும் என்ன உன் அண்ணாவிடம் சொல்லிவிட்டா வந்தாய்? இல்லைதானே. அப்படியே நாளைக்கும் வா!” என்றான் அவன், சற்றும் இளகாமல்.
ஒருபக்கம் தமையனின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியும், மறுபக்கம் புதிதாக அவளை ஆட்டுவிக்கும் ஜான் மீதான நேசமும் என்று இருவிதமான உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவளின் உள்ளத்தை அவன் பேச்சு காயப் படுத்தியது.
செய்வது தவறு என்று தெரிந்தும் அதை செய்யாமல் இருக்க முடிகிறதா அவளால்? இல்லையே!
அவனை கண்டுவிட வேண்டும். அவனோடு கதைத்துவிட வேண்டும் என்றுதானே மனம் துடியாய் துடிக்கிறது. அவனோ அதையே குத்திக் காட்டுகிறானே!
“என்மேல் உள்ள நம்பிக்கையில் தானே என் அண்ணா எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் என்று கேட்காமல் இருக்கிறார் ஜான். அந்த நம்பிக்கையை நான் எனக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாதில்லையா? இப்படி.. இங்கே வந்து உங்களை நான் சந்திப்பதை அறிந்தாலே நொந்துபோவார்.”
“அப்போ என் மனம் நொந்தால்…? அதைப்பற்றி உனக்கு ஒன்றுமில்லை. உனக்கு உன் அண்ணா தான் முக்கியம். நானில்லை. அப்படித்தானே?”
என்ன சொல்வாள் அவள்?
“எனக்கு நீங்களும் முக்கியம் தான். அதனால் தான் உங்களைப் பார்க்க அண்ணாவுக்குத் தெரியாமல் வருகிறேன்.” என்று தன்னை விளக்க முயன்றாள்.
“அதேமாதிரி ஒருநாள் அங்கே வா என்றுதானே கூப்பிடுகிறேன்.”
“அண்ணாவுக்கு தெரியவந்தால்..?” அவள் அப்போதும் தயங்க, “நீ எங்கே இருக்கிறாய் என்று அவருக்கு எப்படித் தெரியவரும்? காலையில் போனால் மாலையாவதற்குள் வந்துவிடலாம். உன் அண்ணா வரமுதல் உன்னை இங்கே கொண்டுவந்து விடவேண்டியது என் பொறுப்பு.” என்றான் அவன்.
தப்பித்தவறி வரமுடியாமல் போய்விட்டால்? அல்லது எப்படியோ அண்ணாவுக்கு தெரிந்துவிட்டால்? இதையெல்லாம் எப்படி இவனிடம் சொல்வது?
“நான் நாளை மறுநாள் போனால் திரும்பி வர எப்படியும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும். அதற்கு முதல் உன்னோடு ஒருநாள் இருக்கலாம் என்று பார்த்தால்.. ப்ச்!” என்றான் அவன்.
தன் தயக்கங்கள் அச்சங்கள் எல்லாம் பறக்க, “என்னது? நான்கு மாதமா? நீங்கள் சும்மா… என்னை வரவழைக்க சொல்லும் பொய்தானே இது?” என்று பதறிப்போய் கேட்டாள் அவள்.
“நான் எதற்கு பொய் சொல்ல.. உண்மையாகத்தான் சொல்கிறேன்.” என்றான் அவன்.
“ஓகே பரவாயில்லை! நீ வர வேண்டாம். உன் அண்ணாவோடே இரு. நான் போகிறேன்.” என்றவன் எழுந்து நடக்கத் தொடங்க, வேகமாக அவன் கரத்தைப் பற்றித் தடுத்தாள் பவித்ரா.

