அன்று அவளின் அன்புத் செல்வனின் பிறந்தநாள். ஆயினும், இதே நாளை கணவனோடு கொண்டாடிய இனிய நினைவுகள் கண்முன்னால் வந்துநின்று அவள் உயிரை வதைத்தன.
அன்று ரெஸ்டாரென்ட்டில் வைத்து தன்னவன் காட்டிய கோபத்திலும் வெறுப்பிலும் குற்றுயிராகிப் போயிருந்தவளுக்கு வாழ்க்கையே சுமையாகிப் போனது.
அதுவுமில்லாமல், இப்போதெல்லாம் அவளது அழைப்பை அவன் ஏற்பதே இல்லை! அவளின் முகத்தை பார்ப்பதே இலை! அப்படியானவன் எப்போதும்போல, மாலையில் பவித்ராவை அனுப்பி மகனை மட்டும் அழைத்துச் சென்று தான் மட்டுமாகக் கொண்டாடுவான். பிறகு எதற்கு இங்கே ஒரு கொண்டாட்டம்?
தாயின் துயர் அறியாத சின்னக்கன்று அங்கும் இங்கும் உற்சாகத்தில் ஓடிக்கொண்டிருந்தான். ‘பிறந்தநாள்’ என்பதன் பொருள் முழுவதுமாக புரியாதபோதும், அன்றய நாளின் கதாநாயகன் தான் என்பதும், அனைவரின் கவனமும் தன் மேல் இருப்பதும் புரிந்ததில் அவன் ஆனந்தத்துக்கு குறைவே இல்லை.
சத்யன் அந்த சின்ன ஹாலில் ஆங்காங்கே நீலமும் வெள்ளையுமாக பலூன்களை ஊதிக் கட்ட, வித்யா ‘ஹாப்பி பர்த்டே’ என்ற ஆங்கில எழுத்துக்களால் ஆன மாலையை சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தாள். மித்ரா மனதை மறைத்துக்கொண்டு ‘கே. சந்தோஷ்’ என்கிற ஆங்கில எழுத்துக்களை மினுங்கல் பேப்பரில் வெட்டிக்கொண்டிருந்தாள்.
அதையும் சுவரில் ஒட்டி, சந்துவின் பிறந்த தினத்தையும் வெட்டி ஓட்டியதும் ஒரு சின்ன மேசையை அதன் முன்னால் கொண்டுவந்து போட்டான் சத்யன்.
‘ஸ்பைடர் மான்’ மேசைவிரிப்பை விரித்து, பச்சைப் புல்வெளியில் நின்ற ‘ஸ்பைடர் மான்’ இலக்கம் இரண்டை கையில் பிடித்திருப்பது போன்ற கேக்கை கொண்டுவந்து வைத்தாள் வித்யா.
மூவருமாக சிந்துவுக்கு கேக் வெட்ட ஆயத்தமானபோது, வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.
“இந்த நேரத்தில் யார்?” சத்யன் கேட்ட அதே கேள்வியே மற்ற இருவரின் முகத்திலும் எதிரொலித்தது.
“நான் பார்க்கிறேன்..” என்றுவிட்டு வித்தி போய்க் கதவைத் திறந்தாள்.
அங்கே நின்றவனை எதிர்பாராமல், “அத்தான்…!” என்று அவள் விழிகளை விரிக்க, அந்த ஒற்றை வார்த்தையில் உயிர்பெற்று வாசலுக்கு விரைந்தாள் மித்ரா.
அவனைக்கண்டதும், நம்பமுடியாத ஆனந்த அதிர்ச்சியில் விழிகள் விரிய அப்படியே நின்றாள். அவள் காண்பது நிஜம்தானே? வந்திருப்பது அவன் தானே?
சத்யன் மட்டும் சந்தோஷை வைத்துக்கொண்டு இறுகிப்போய் நின்றான்.
“உள்ளே வரலாமா?” ஆச்சரியத்தில் வாசலை அடைத்துக்கொண்டு நின்ற வித்தியிடம் கேட்டாலும் அவன் விழிகள் மித்ராவிடமே நிலைத்தன.
வைத்தவிழி அகற்றாது தன்னையே மொய்த்த விழிகளுக்குள் தன் விழிகளை கலந்தான்.
அவரவர் அவரவர் நிலையில் நிற்க, அவன் பெற்ற மகன் தந்தையின் குரல் கேட்ட பின்னாலும் சும்மா இருப்பானா?
மாமனிடம் இருந்து பாய்ந்து இறங்கி, “அப்பா..” என்று கத்திக்கொண்டு தந்தையிடம் ஓடினான்.
“ஹேய் சந்துக்குட்டி…” என்றபடி, உள்ளே வந்த கீதன், தான் கொண்டுவந்த பரிசுப் பொருட்கள் அடங்கிய பையை நிலத்தில் வைத்துவிட்டு மகனை தூக்கிக்கொண்டான்.
சந்தோஷ் தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் மழலையில் எதுவோ சொல்ல, அதை தலையாட்டிக் கேட்டுக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி மகனின் நெற்றியில் முத்தம் பதித்தான் கீர்த்தனன்.
நெஞ்சம் நிறைய அதைப் பார்த்தவளின் உள்ளம், ‘எனக்கும் இன்றைக்குத்தான் கீதன் பிறந்தநாள். ஒரு வாழ்த்துச் சொல்ல மாட்டீர்களா?’ என்று ஏங்கிப்போயிற்று!
எல்லோரையும் பார்வையால் alanthuவிட்டு, “கேக்கை வெட்டலாமா?” என்று கேட்டான்.
“என்னவோ வருடா வருடம் கொண்டாடியவர் போல் கேட்கிறீர்களே..” என்றான் சத்யா ஏளனமும் கோபமுமாக.
“ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவேன் தான் சத்தி. ஆனால் தனியாக. அதனால் தான் இந்தவருடம் உங்கள் எல்லோருடனும் சேர்ந்து கொண்டாட வந்திருக்கிறேன்.” என்றான் கீதன் மறையாத புன்னகையோடு.
“அழையா விருந்தாளியாக வந்திருக்கிறீர்கள்.” என்றான் சத்யன்.
“அழைத்து வருவதற்கு நான் என்ன யாரோவா? சந்துவின் அப்பாடா.” என்றவன், வித்தியை பார்த்து கண்ணை சிமிட்டினான்.
“ஹா..!” என்று வாயை பிளந்தாள் வித்யா.
அதற்கும் சத்யன் என்னவோ சொல்ல வர, மித்ராவின் விழிகள் ‘எதுவும் பேசாதே’ என்று அவனைக் கெஞ்ச வாயை மூடிக்கொண்டான்.
சந்தோஷை கீர்த்தனன் தூக்கிக்கொள்ள அவன் அருகில் சற்றே இடைவெளி விட்டு படபடப்போடு மித்ரா நிற்க, அவளுக்கு அருகில் வித்யா நின்றுகொண்டாள்.
கீர்த்தனனின் அருகில் நிற்கப் பிடிக்காமல், “நான் போட்டோ எடுக்கிறேன்..” என்றுவிட்டு, தன் செல்லில் நடப்பதை படம் பிடிக்கத் தொடங்கினான் சத்யன்.
பிறந்தநாள் வாழ்த்து ஒலிக்க, ஏற்றப்பட்டிருந்த மெழுகுதிரியை சந்தோஷ், கீர்த்தனன், மித்ரா மூவருமாக ஊதி அணைக்க, வித்யா கை தட்டி வாழ்த்துப்பாட, கேக்கை வெட்டினான் சந்தோஷ்.
“கேக்கை எடுத்து உன் அப்பாவுக்கு கொடுடா சந்து..” என்று வித்யா சொல்ல, அதையே அச்சரம் பிசகாமல் அந்தக் குட்டியும் செய்தான்.
கீர்த்தனனோ அதை தான் வாங்காமல், “முதலில் அம்மாவுக்கு கொடு கண்ணா..” என்றான் அன்போடு.
நம்பமுடியாத ஆனந்த அதிர்ச்சியில் விரிந்திருந்த மித்ராவின் விழிகள் அருகில் நின்றவனை உள்வாங்க, செப்பு இதழ்களோ மகன் ஊட்டிய கேக்கை உள்வாங்கிக் கொண்டது.
அப்படியே தன் தந்தைக்கும், மாமனுக்கும், சித்திக்கும் அவன் கேக் துண்டுகளை கொடுத்து, அவர்களிடம் இருந்து பரிசில்களை பெற்றதும் அவனது பார்வை அந்தப் பரிசுகளிடம் தாவ, தகப்பனிடம் இருந்து இறங்கி அவற்றிடம் ஓடினான்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மித்ரா, சத்யன், வித்யா மூவரும் தடுமாறினார்கள். கீர்த்தனனின் திடீர் வருகை அன்றைய நாளின் அவர்களின் அடுத்த திட்டங்களை செயலாக்கவிடாமல் தடுக்க, கீர்த்தனன் அதே மேசையில் அழகான வட்டக் கேக் ஒன்றை கொண்டுவந்து வைத்தான்.

