அதைப்பார்த்து வித்யாவின் விழிகள் விரிந்தது என்றால், மித்ராவுக்கு அதுவரை இருந்த பிரமிப்பு அகல கண்களில் நீர் கோர்த்தது.
சத்யனோ உள்ளே குமுறிக்கொடிருந்த ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல் இறுகிப்போய் நின்றான்.
எதற்கு இந்த நடிப்பு? இந்த அக்காவும் சூடாக எதையாவது சொல்லாமல் ஊமையாக கண்ணீர் வடிக்கிறாளே!
“வந்து கேக்கை வெட்டு.” என்றான் கீர்த்தனன் மித்ராவிடம்.
ஒருவித மோனநிலையில் மெழுகுதிரியை ஏற்றி, அதை ஊதியணைத்து கேக்கை வெட்டியவள், ஒரு துண்டை கையிலெடுத்து அதையும் கீர்த்தனனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அதை அவனுக்கு ஊட்ட ஆவல் கொண்டவளுக்கு, தயக்கம் அதற்கும் மேலாக நிற்க, அவனை விடுத்து தம்பிக்கோ தங்கைக்கோ கொடுக்க கையும் வரவில்லை. மனமும் முரண்டியது.
விழிகளோடு விழிகளை கலந்து, அவளின் கையை பற்றி அந்தக் கேக் துண்டை தன் வாயில் வைத்தான் கீர்த்தனன்.
அந்த நொடியிலேயே நெஞ்சமெல்லாம் ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் முட்டிமோத, ‘ஆசைப் படாதே, எதையும் எதிர்பார்க்காதே.. எதுவும் உனக்கு வாய்க்காது, எதுவும் உனக்கு நிரந்தரமில்லை’ என்று உரத்துச் சொன்னது அறிவு.
எதிர்பார்ப்புக்கும் இறந்தகாலத்துக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டவளால் கண்ணீரை அடக்க முடியாமல் போக, மற்றவர்களுக்கு காட்டப் பிடிக்காமல் அறைக்குள் விரைந்தாள். சத்யனோ கீர்த்தனனை முறைத்துக்கொண்டு நின்றான்.
அதேநேரம் இங்கே பவித்ரா, அஞ்சலியின் வீட்டுக்கு வந்திருந்தாள். அஞ்சலி வெளியே செல்லத் தயாராவதை கவனித்துவிட்டு, “எங்கே போகப் போகிறாய்?” என்று வினவினாள்.
“‘போலிங்’க்கு பவிக்கா. நீங்களும் வாருங்கள்.”
“எனக்கு அதெல்லாம் விளையாடத் தெரியாதே அஞ்சு. நாம் வீட்டிலேயே இருக்கலாமா?”
“இல்லவே இல்லை. இன்று போலிங் கட்டாயம் போயே ஆகவேண்டும்.” என்றாள் அஞ்சு.
“அதென்ன கட்டாயம்?”
“அதுவா? இன்று…” என்று ஆரம்பித்தவள் இடையில் நிறுத்திவிட்டு, விழிகள் குறும்பில் மின்ன, “சொல்ல மாட்டேனே..” என்று சொல்லி கிளுக்கிச் சிரித்தாள்.
“ஆனால், உங்களுக்கு பிடித்த, முக்கியமான ஒருவரை பார்க்கப் போகிறோம். அதனால் நீங்களும் கட்டாயம் வரவேண்டும்.” என்றாள் மர்மச் சிரிப்புடன்.
‘எனக்கு முக்கியமாக யார்.. ஜான்? அவன்தான் வேலையாக போய்விட்டானே. இன்று காலையில் கூட அதிக வேலை அதனால் நாளை பேசுவதாக மெசேஜ் அனுப்பினானே.. வேறு யார்?’ அதை வாய்விட்டுக் கேட்டும் சொல்ல மறுத்தாள் அஞ்சலி.
ஆனாலும், ‘அது ஜானாகத்தான் இருக்கும். அவனேதான்!’ என்று ஏனோ உறுதியாக மனம் சொல்ல, ‘அப்போ அவன் வேலை என்றது?’ என்று யோசனை ஓடினாலும், உற்சாகத்தோடு கிளம்பினாள் அவளும்.
போலிங்க்கு உள்ளே நுழைந்ததும், பந்துவீசும் பகுதிக்குள் பளிச்சென்று பரவியிருந்த வெளிச்சத்திலும், இருபக்கச் சுவர்களிலும் தீட்டப் பட்டிருந்த பெரிய பெரிய சித்திரங்களுக்கு என்று பிரத்தியோகமாக பூட்டப்பட்டிருந்த பளீர் விளக்குகளின் ஒளிர்விலும் கண்கள் கூசியதில் அப்படியே நின்றுவிட்டாள் பவித்ரா. விழிகளை அந்த சூழ்நிலைக்கு பழக்க முயன்றவளின் பார்வை, ஆர்வத்தோடும் பரபரப்போடும் தன்னவனை தேடியலைந்தது.
எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், நம் மனம் யாரைத் தேடுகிறதோ அவர்களைத்தான் நம் கண்களும் கண்டுபிடிக்குமாம். அப்படி, ஒரு பந்தைக் கையில் பற்றியபடி வீசத் தயாராக நின்ற ஜானைக் கண்டுகொண்டன பவித்ராவின் விழிகள்.
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு பாக்கிறாள். சந்தோசத்தின் உச்சம் கொடுத்த வேகத்தோடு, “ஜான்..!” என்று அழைத்தபடி அவனிடம் விரைந்தாள்.
யார் என்று திரும்பிப் பார்த்த ஜான், அவளை அங்கே எதிர்பாராததில், ஒருகணம் திகைத்தான்.
பவித்ராவோ அவன் கையைப் பற்றிக்கொண்டு, “நீங்கள் எங்கே இங்கே ஜான்? வேலை என்று சொன்னீர்களே? எப்போது வந்தீர்கள்? என்னிடம் சொல்லவே இல்லையே..” என்று தன்னை மறந்து கேள்விகளை அடுக்கினாள்.
ஜானின் அருகில் நின்ற பெண், பவித்ராவை ஆராய்ச்சியோடு பார்த்துவிட்டு, யார் என்று அவனை ஏறிட, அந்தப் பார்வை உண்டாக்கிய சினத்தில், பவித்ராவிடம் இருந்து தன் கையை உருவிக்கொண்டே, “அஞ்சலியின் ப்ரெண்ட்.” என்றான் அவளிடம்.
அவன் முகத்தில் தெறித்த சினத்தையும், குரலில் ஒலித்த பேதத்தையும் கண்டுகொள்ளாதவள், அத்தனை நாள் பிரிவு கொடுத்த நெருக்கத்தில் அவனை இன்னும் நெருங்கி மீண்டும் கரத்தை பற்றி, “நான் அஞ்சுவின் ப்ரெண்ட் மட்டும் தானா ஜான்?” என்று தலையை சரித்து சலுகையோடு கேட்டாள்.
அவள் விழிகள் அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான காதலை ரகசியமாக அவனிடம் பேசின.
அதை உணர மறுத்தவனோ, இப்போது வெளிப்படையாகவே எரிச்சலை முகத்தில் காட்டி, சரெக்கென்று அவளிடம் இருந்து கையை இழுத்துக்கொண்டான். அதோடு, “பின்னே வேறு யார் நீ? முதலில் கொஞ்சம் தள்ளி நில்லு! விட்டால் மேலேயே வந்து விழுவாய் போல.” என்று சீறினான்.
திகைத்து மிரண்டு விழித்தாள் பவித்ரா. விழிகளில் மளுக்கென்று நீர் நிறைய, அதுவரை இருந்த உற்சாகமும், பரவசமும் வடிந்துபோயிற்று!
ஜானின் அருகில் நின்றவளின் விழிகளில் தென்பட்ட கேவலமான பார்வையில் நெஞ்சு துடிக்க, “என்மேல் என்ன கோபம் ஜான்? ஏன் இப்படிக் கதைக்கிறீர்கள்?” என்று குரல் கம்மக் கேட்டாள்.
அதேநேரம், பவித்ராவுக்கு பின்னால் அதிர்ச்சியோடு வந்து நின்றவனை கண்டதும், ஜானின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது. இதற்காகத்தானே இத்தனை நாளாகக் காத்திருந்தான்!
“வேறு எப்படி கதைக்க? தமிழ் பெண்ணாச்சே என்று சிரித்துப் பேசினால் இப்படித்தான் பின்னாலேயே துரத்திக்கொண்டு வருவாயா?” என்றவனின் கேள்வியில் அவள் துடித்துப்போனாள் என்றால், அவள் பின்னால் நின்றவனின் விழிகளோ கோபத்தில் சிவந்தது.

