தனிமைத் துயர் தீராதோ 35 – 4

அவனோ அவளை விரக்தியாகப் பார்த்தான். இன்றோடு எல்லாப் பிரச்சனைகளும் முடிந்துவிடும். இனி எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழலாம் என்று அவன் எண்ண, இப்போது புதிதாக சத்தியினால் வெடித்த பூகம்பம் மலைபோல் வந்துநின்று அவனை மிரட்டிப் பார்த்தது.

 

மித்ராவோ கோபம் கொப்பளிக்கும் விழிகளால் சத்யனை நோக்கி, “மரியாதையாக அவளை கட்டிக்கொள். உடனேயே இந்தத் திருமணம் நடக்கவேண்டும்!” என்றாள் கட்டளையாக.

 

“அதற்கு முதலில் அவர் உன்னைக் கட்டிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் அவளைக் கட்டுவேன்.” என்றான் சத்யன் அப்போதும்.

 

“திரும்பவும் என் கையால் அடிவாங்காதே சத்தி. மரியாதையாக நான் சொல்வதைக் கேள்.” என்ற தமக்கையை, தன்னைப் புரிந்துகொள்கிறாள் இல்லையே என்கிற ஆதங்கத்தோடு பார்த்தான் சத்யன்.

 

“நான் சொல்வதைக் கொஞ்சம் கேள் அக்கா. கட்டாயம் நான் அவளைக் கட்டிக் கொள்கிறேன். அவள்தான் என் மனைவி என்று முதலே முடிவு செய்துவிட்டுத்தான் அவளோடு பழகினேன். அதை யாராலும் மாற்ற முடியாது. மாற்றவும் விடமாட்டேன்.” என்றவன் கீர்த்தனனை நிமிர்ந்து பார்த்தான்.

 

அந்தப் பார்வை உங்களால் கூட அதை மாற்ற முடியாது என்றது.

 

மறுபடியும் தமக்கையிடம் திரும்பி, “ஆனால்.., உன்னை இவர் மனைவியாக ஏற்காமல் நானும் அவளைக் கட்டமாட்டேன். இன்னொருவனுக்குக் காட்டிக்கொடுக்கவும் விடமாட்டேன்!” என்றான் உறுதியான குரலில்.

 

இன்னொருவனா? அந்த நேரத்திலும் பவித்ராவின் தேகம் குலுங்கியது.

 

அதையுணர்ந்து தங்கையின் தோளை ஆதரவாகப் பற்றிக்கொண்டான் கீர்த்தனன். வெறுமை நிறைந்த விழிகளால் சத்யனை நோக்கினான்.

 

“இப்போது என்ன வேண்டும் உனக்கு? உன் அக்காவை நான் கட்டிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதானே. சரி செய்கிறேன். இனி நீ பவித்ராவை மணந்துகொள்வதில் எந்தத் தடையும் இல்லையே?” என்று கேட்டான் வேதனை நிறைந்த குரலில்.

 

இப்போது மித்ரா அதிர்ந்தாள்.

 

“நிச்சயமாக!” என்றான் சத்யன். அவனது போராட்டத்துக்கு, அதுநாள் வரை அவன் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்துவிட்டதே!

 

மித்ராவோ கீர்த்தனனையே வெறித்தாள். அன்று விசாவுக்காக, இன்று தங்கைக்காக.. ஆகமொத்தத்தில் அவனது தேவைக்குத்தான் என்றுமே அவள் வேண்டும்!

 

நெஞ்சம் புண்ணான போதும் பவித்ராவை எண்ணி வாயை மூடிக்கொண்டாள். அவள் விழிகளில் தெரிந்த வலியில் கீதனுக்கு உள்ளம் கனத்துப்போனது. தன் மனதின் மாற்றத்தையும், தன் விருப்பத்தையும் சொல்லி அவளிடம் மனம்விட்டுப் பேசவந்தவன் சூழ்நிலைக் கைதியாகி நின்றான்.

 

பவித்ராவோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தாக்கியதில் பேசாமடந்தையாகி கண்ணீரை உகுத்துக்கொண்டிருந்தாள்.

 

“இரண்டு திருமணத்தையும் நீயே ஏற்பாடு செய்துவிட்டு எப்போது என்று சொல், நாங்கள் வருகிறோம்.” முற்றிலும் அந்நியனாகி யாருக்கோ சொல்வது போன்று கீர்த்தனன் சொன்னபோது, அந்தக் குரலில், அந்தப் பார்வையில் தவிப்போடு அவனைப் பார்த்தான் சத்யன்.

 

அவன் சீறிச் சினத்த நாட்களில் கூட பாசத்தோடு தடவிக்கொடுக்கும் விழிகள் அவனுடைய அத்தானுடையது. அந்த விழிகள் இன்று அவனை நோக்கக் கூடப் பிரியப்படவில்லை என்றதும் குற்றக் குறுகுறுப்பில் குறுகிப்போனான்.

 

கீதன், அதற்குமேல் சற்றும் தாமதிக்கவில்லை. எத்தனையோ கற்பனைகளை சுமந்து வந்தவன் முற்று முழுதான ஏமாற்றத்தை சுமந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

அஞ்சலியை அவள் வீட்டில் இறக்கி விடும்வரைக்கும் அந்தக் காருக்குள் அசாதாரண அமைதியே நிலவியது. அதன்பிறகும் தமையன் தங்கை இருவருமே தங்கள் தங்கள் நினைவுகளில் உழன்றுகொண்டே வந்தனர்.

 

கீர்த்தனனுக்கு இனி எல்லாவற்றையும் எப்படி நேராக்குவது என்கிற யோசனை ஓடியது. சற்றுமுதல், மித்ராவுக்கும் கேக் வெட்டி முடிந்ததும், அடுத்து என்ன செய்வதாக இருந்தீர்கள் என்று கேட்டு, சத்யன் சொல்ல மறுக்க, வித்யாவின் வாயிலிருந்து விஷயத்தைப் பிடுங்கி, எல்லோரையும் அழைத்துக்கொண்டு போலிங் வந்தவன், வித்யாவும் சத்யனும் விளையாட ஆரம்பிக்கவும், மகனையும் அவர்களின் கவனிப்பில் விட்டுவிட்டு மித்ராவோடு தனியாக கதைக்க எண்ணி அவளை நெருங்கிய வேளையில் தான் பவித்ராவும் அஞ்சலியும் வந்தனர்.

 

அதன் பிறகோ எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.

 

இனி மித்ராவுக்கு எதை எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்கிற கேள்வி ஒருபக்கம் என்றால், சத்யனின் பேச்சுக்களும் செயல்களும் அவனை முற்றாகவே அடித்துப் போட்டது என்பதுதான் உண்மை!

 

அவன் பாசமும் நம்பிக்கையும் வைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அவனை முற்றாக அடித்து வீழ்த்துவதாக உணர்ந்தான். அவனைப் பெற்ற அன்னை தொடங்கி, கவியில் இருந்து மித்ரா, சத்யன், பவித்ரா… இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ..

 

பவித்ராவுக்கோ தமையனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியவில்லை. எவ்வளவு பெரிய தலைகுனிவை உண்டாக்கிவிட்டாள்! அதோடு எத்தனை சந்தோசமாக அன்று புறப்பட்டான். எல்லாம் சரியாக நடந்திருக்க, இன்றோடு அவனது துன்பங்கள் அத்தனையும் தீர்ந்திருக்குமே!

 

error: Alert: Content selection is disabled!!