மதிய உணவுக்கு ஆசியன் ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தான் கீர்த்தனன். எல்லோருமாக உணவை முடித்துக்கொண்டதும் அருணாவின் பெற்றோரும், சண்முகலிங்கம் மனைவியுடனும் அங்கிருந்தே கிளம்பினர்.
வித்யாவையும் தங்களோடு வரும்படி ஈஸ்வரி அழைக்க, அத்தான் வீட்டுக்கு போகும் ஆர்வத்தில் அன்று அக்காவோடு தங்குவதாகச் சொல்லிவிட்டாள் அவள்.
அதன்பின் கீர்த்தனன் வீட்டை நோக்கி காரை விட, அவனை பின்தொடர்ந்தது சத்யன், சேகரன், அர்ஜூன் மூவரினதும் கார்.
கணவனின் கார் வீட்டை நெருங்க நெருங்க, வார்த்தைகளால் வடிக்கமுடியா உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தாள் மித்ரா. அந்த வீட்டுக்குள் திரும்பவும் கால்பதிக்கப் போகிறோம் என்கிற நினைவில் தேகம் சிலிர்த்த அதேநேரம், அந்த வீட்டிலிருந்து கடைசியாக அவள் வெளியேறிய விதம் நினைவில் வந்து நெஞ்சை கிழிக்க, அவளது கருவிழிகள் இரண்டும் அவள் மனதைப் போலவே அலைபாய்ந்தது.
ஒருவழியாக வீடும் வந்துவிட, அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் மித்ரா. கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிவிட்ட விழிகளோடு, சிலையென அமர்ந்து இருந்தவளையே கவனித்தபடி இறங்கி, பின் கதவைத் திறந்து மகனை தூக்கினான் கீர்த்தனன்.
அப்போதும் அவளிடம் மாற்றமில்லை. “இறங்கு மித்து.” என்றான் மெல்லிய குரலில்.
மித்து என்கிற அழைப்பு அவளின் உள்ளத்தை ஊடுருவி, உயிரின் ஆழத்தை தொட்டபோது சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் மித்ரா.
அவன் இன்னும் கொடுக்காத விளக்கங்களை அந்த அழைப்பு கொடுக்க முயல, பவித்ராவுக்காகத்தான் என்னை மணந்தான் என்று ஆழப் பதிந்துபோயிருந்த நினைப்பு அதை விளங்கிக்கொள்ள விடாமல் தடுக்க, திணறினாள் மித்ரா.
அப்போது, அவனது காருக்கு அருகில் அடுத்தடுத்து வந்து நின்ற கார்களையும் அதிலிருந்து இறங்கியவர்களையும் கவனத்தில் கொண்டு, அவளது மென் கரத்தைப் பற்றி அழுத்தி, “வா..” என்றழைத்தான் கணவன்.
மெல்ல உணர்வு பெற்று காரை விட்டு இறங்கினாள் அவள்.
எல்லோரும் வந்ததும், “இரண்டு ஜோடிகளும் அப்படியே நில்லுங்கள்.” என்றுவிட்டு சங்கரி உள்ளே செல்ல, மகனைக் கையில் தூக்கியபடி மனைவியின் அருகில் சென்று நின்றுகொண்டான் கீர்த்தனன்.
பட்டு வேட்டி சட்டையில் அப்பாவும் மகனும் இருக்க, மித்ரா இருவரினதும் மணமாலைகளை கையில் வைத்தபடி நின்ற கோலம் எல்லோர் மனதையும் நிறைத்தது.
மலர்ச்சியற்ற முகத்துடன் பவித்ரா ஒருபக்கமும், அவள் பற்றிய பிரக்ஜையே இன்றி சத்யன் ஒரு பக்கமும் நிற்பதைக் கவனித்துவிட்டு, “டேய் சத்தி, ஆன்ட்டி சொன்னது விளங்கவில்லை? உன் மனைவிக்கு அருகில் வந்து நில்.” என்றான் அர்ஜுன்.
அப்போதுதான் மனைவி என்கிற ஒருத்தி அங்கே நிற்கிறாள் என்பதாக அவளைப் பார்த்தான் சத்யன். பொன் வண்ணப் பட்டுச் சேலையில், கழுத்தில் புதுத்தாலி தொங்க, இடை தாண்டிய அடர் கூந்தலில் பூச்சூடி, கையில் மாலையுடன் நின்றவளின் அழகு அவன் விழிகளில் படவேயில்லை. மாறாக பொலிவிழந்து சோர்ந்து கிடந்த வதனம் தான் பட்டது.
இவள் போடும் சீனுக்கு அளவே இல்லை!
எரிச்சல் மேலோங்க இடத்தைவிட்டு அசையாது அவன் நிற்க, “ஜான் அண்ணாவுக்கு வெட்கமாம் அண்ணா. அதுதான் பவிக்காவுக்கு பக்கத்தில் போகவில்லை. ஆனால், முன்னர் எல்லாம் அக்காவுக்காக ரோட்டில் தவம் கிடப்பார் தெரியுமா..” என்று தனக்குத் தெரிந்ததை அவிழ்த்துவிட்டுச் சிரித்தாள் அஞ்சலி.
“ஓ.. இது வேறா? வேறு என்னவெல்லாம் செய்தான்?” என்று சுவாரசியமாகக் கதைகேட்டார் தாமோதரன்.
“இன்னும் தாத்தா..” என்று அவள் ஆரம்பிக்க, “ஏய் எலிக்குஞ்சு! பேசாமல் இரு!” என்றான் சத்யன் அதட்டலாக.
“என்னையா எல்லோருக்கும் முன்னால் எலிக்குஞ்சு என்கிறீர்கள்?” என்று அவனிடம் கருவியவள், “ஒருநாள் தாத்தா, அக்கா ஜான் அண்ணாவின் காரில் தனியாகப் போக தயங்கினாரா, உடனேயே ஜான் அண்ணாவுக்கு பெரும் கோபம் வந்துவிட்டது. ‘நான் ஒன்றும் கெட்டவன் இல்லை, என்னோடு காரில் வரச்சொல் அஞ்சு’ என்று என்னிடம் சொன்னார். பிறகு நான் சொல்லித்தான் பவிக்கா காரில் ஏறினார்..” என்று, அவன் செய்த திருகுதாளங்களை அவள் எல்லோர் முன்னாலும் போட்டுடுடைக்கத் தொடங்க,
“அம்மா தாயே! போதும் நிறுத்து!” என்று கையெடுத்து கும்பிட்டான் சத்யன். அதோடு, வேகமாச் சென்று மனைவியின் அருகிலும் நின்றும் கொண்டான்.
பின்னே, அவனது வண்டவாளங்களை எல்லாம் அவள் தண்டவாளம் ஏற்றினால் தன் முகத்தைக் கொண்டுபோய் எங்கே வைப்பான்?
ஆனால் அவன் மனைவியோ, அவன் அருகில் வந்து நின்ற வேகத்தில் தோள்கள் உரசிக்கொண்டதில், அனிச்சை செயலாக அவனிடமிருந்து விலகி நின்றாள். சத்யனின் கோபம் கூடிக்கொண்டே போனது.
அங்கே வந்த சங்கரி, இரண்டு ஜோடிகளையும் ஆலம் சுற்றி உள்ளே வரவேற்றார்.
அவர்களின் பின்னே நுழைந்த வித்யாவையும், அஞ்சலியையும் பார்த்து, “இருவரும் எங்கே ஓடுகிறீர்கள்? என்னோடு வாருங்கள்..” என்று அழைத்துச் சென்றார் சங்கரி.
அங்கே கார் டிக்கிகளுக்குள் இருந்த, கல்யாணத்துக்கு என்று கொண்டுசென்ற பூஜை பொருட்கள், தட்டுகள், பூக்கள் என்று இருந்தவற்றை அவர்களிடம் கொடுத்தனுப்பினார்.
அவற்றையெல்லாம் அருணாவோடு சேர்ந்து அவர்கள் உள்ளே கொண்டு வந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் ஆசையாசையாகப் பார்த்து வாங்கிய வீட்டுக்குள் பாதம் பதித்ததில் உணர்ச்சிவசப்பட்டு வாசலிலேயே நின்றிருந்தாள் மித்ரா.
அவளிடம், “இதையெல்லாம் எங்கே வைக்கட்டும் மித்ராக்கா?” என்று கையிலிருந்த பொருட்களை கட்டிக் கேட்டாள் அஞ்சலி.
ஒருகணம் தயங்கினாலும் அடுத்தகணமே அந்த வீட்டுப் பெண்ணாக மாறி, “என்னோடு வாருங்கள்..” என்றபடி, அவர்களை அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள்.
வீ ட்டுக்குள் வந்ததில் இருந்து, கலங்கிய விழிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, ஆவலோடும் ஆசையோடும் அந்த வீட்டை பார்த்தபடி நின்றவளையே கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தனன், இயல்பான அவளின் அந்தச் செய்கையில் மனம் நிறைந்தான்.

