தனிமைத் துயர் தீராதோ 37 – 3

ஆண்கள் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, திவ்யா உறங்கிவிட்டதில் பவித்ராவையும் வித்யாவையும் தன் விளையாட்டுக்கு பிடித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

 

அப்போது பவித்ராவை அறைக்குள் அழைத்த சங்கரி, முதல் இரவுக்காக அவளைத் தயார் செய்ய, கைகால்கள் நடுங்கத் தொடங்கியது அவளுக்கு.

கலக்கத்தோடு கவிதாவையும் மித்ராவையும் பார்த்தாள். சங்கரி அம்மாவின் முன்னால் எதுவும் சொல்ல முடியாமல் அவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தாள் மித்ரா.

புதுப் பெண்ணுக்கான தயக்கம் என்றெண்ணி, “இதில் பயப்பட ஒன்றுமே இல்லை பவிம்மா. அவன் நீ விரும்பியவன் தானே. பிறகு என்ன? நான் பார்த்த வரையிலும் கொஞ்சம் கோபக்காரன். ஆனால், பாசக்காரனும் தான். நீ பாசத்தோடு அவனைக் கவனித்தாய் என்று வை, பிறகு உன் பின்னாலேயே வால் பிடித்துக்கொண்டு அலைவான்.”என்று அவர் புத்திமதி சொன்னபோது,

‘அவனாவது என்பின்னால் வால் பிடித்துக்கொண்டு அலைவதாவது.’ என்று சலித்துக்கொண்டாள்.

அப்படியிருந்தும், அவன் கட்டிய தாலி இன்று முழுவதும் நெஞ்சின் மீது கனமாய் கிடந்து நீ அவனுக்குச் சொந்தமானவள் என்பதை அறிவுறுத்தியதில், அவள் இதயத்துக்குள் சின்னச் சின்ன சலனங்களும் மாற்றங்களும் உருவானதும் உண்மைதான்.

 

தாலிக்கொடியின் மகிமை என்பதா, அல்லது நீறு பூத்த நெருப்பாக அவள் ஆழ்மனதுக்குள் உறைந்துகிடந்த காதலின் சக்தியா, ஏதோ ஒன்று அவள் மனதில் அவன் மீதான கோபம் சற்றும் மாறாமல் இருந்தாலும், அவன் மீதான ஒரு சொந்தமும் தோன்றிற்று என்றால் அது பொய்யில்லை.

 

சிலநேரம், இன்று தனிமையில் சந்திக்கையில் அவன் நடந்துகொண்டதற்கான விளக்கத்தை சொல்வானோ.. சொல்லி அவளிடம் மன்னிப்புக் கேட்பானோ..

 

இந்த எண்ணம் வந்ததுமே, நெஞ்சம் எதிர்பார்ப்பில் பரபரக்கத் தொடங்கிற்று!

 

அண்ணாவும் அண்ணியும் இணையவேண்டும் என்பதுதானே அவன் விருப்பம். அதற்காகத்தானே அனைத்தையும் செய்தான். அவன் விருப்பம்போல் எல்லாம் நடந்தபிறகும் விளக்கம் சொல்லாமல் இருப்பானா என்ன?

 

கட்டாயம் சொல்வான்! சொல்லி அவளை சமாதானப் படுத்துவான்! இந்த எண்ணம் வந்ததும், அவளுமே சற்று ஆவலோடு அவனுடனான தனிமையை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

 

சற்று நேரத்தில், அவள் எதிர்பார்த்த நேரமும் வந்துவிட, அவளை அழைத்துக்கொண்டுபோய் மேல்தள வீட்டில் விட்டனர்.

 

வீட்டுக் கதவை அடைத்தவள், ஒருவித தயக்கமும் வெட்கமும் போட்டிபோட கணவனை நாடிச் சென்றாள்.

 

இலகுவான ஷார்ட்ஸ், டி- ஷர்ட் சகிதம், ஒருகாலை கட்டிலில் மடித்து அமர்ந்திருந்தவன், மற்றக் காலை நிலத்தில் ஊன்றியபடி லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.

 

அறை வாசலில் அவள் தயங்கி நிற்கக் கண்டு, திரும்பிப் பார்த்தவன், “உள்ளே வா..” என்றழைத்தான் இயல்பாக.

 

அவன் சோபாவைக் காட்டவும், பதுமையென அமர்ந்துகொண்டவளின் இதயமோ படபடவென்று அடித்துக்கொண்டது. இப்படி ஒரு அறையில், இரவின் ஏகாந்தத்தில், தனிமையில், அவனது மனைவி என்கிற உரிமையோடு அவனை சந்தித்ததில் தன் இயல்பை தொலைத்திருந்தாள் பவித்ரா.

 

ஆயினும், செவிகளை தீட்டிக்கொண்டு காத்திருந்தவளை ஏமாற்றாமல் தன் பேச்சை ஆரம்பித்தான் அவள் கணவன்.

 

அதில் மட்டும்தான் அவள் ஏமாறவில்லை!

 

“உன்னோடு கொஞ்சம் கதைக்கவேண்டும் பவித்ரா.” என்று அவன் சொன்னபோது, விழிகளில் ஆர்வம் பொங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

கூரிய அவன் விழிகளை சந்தித்தபோது அவளிடம் மெல்லிய சலனம். அதை மறைத்துக்கொண்டு அவனை நோக்கியவளை எந்த சலனமும் இல்லாது பார்த்துப் பேசினான் சத்யன்.

 

“உனக்கே தெரியும், இந்தத் திருமணமே அக்காவுக்காகத்தான் நடந்தது என்று. இதிலிருந்தே அக்கா எனக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்திருக்கும். அப்படித்தான் வித்தியும். அக்கா எனக்கு அம்மா மாதிரி என்றால் வித்யா மகள் மாதிரி. என்றைக்குமே அவர்களின் சந்தோசமும் நிம்மதியும் எனக்கு முக்கியம். அதற்கு தடையாக நீ இருக்கக் கூடாது! உன்னால் அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருமாக இருந்தால் அதனால் பாதிக்கப் படுகிறவள் நீயாகத்தான் இருப்பாய்.” என்று அவன் சொன்னபோது, நெஞ்சம் அடிவாங்க, இதயம் உடைய, அவனை வெறித்தாள் பவித்ரா.

 

ஏற்கனவே காதலைக் கொன்றவனின் செயலை ஒதுக்கி, வாழ்க்கையை சீராக்க எண்ணி பெரும் நம்பிக்கையுடன் உள்ளே வந்தவளின் மனதையும் கொன்றது அவனது பேச்சு!

 

“உங்களுக்கு உங்கள் அக்காவும் தங்கையும் மட்டும் தான் முக்கியம் என்றால் எதற்காக என்னைக் காதலிப்பதாக நடித்து, கல்யாணமும் முடித்தீர்கள்?” என்றாள் கொதிப்போடு.

 

“அதுதான் சொன்னேனே, அக்காவுக்காகத்தான் என்று.” என்றான் அவன், அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவனாக.

 

“உங்கள் அக்காவுக்காக நீங்கள் எதையும் செய்து தொலையுங்கள். அதில் என்னை இழுக்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது? என் சந்தோசம், நிம்மதி, மகிழ்ச்சி எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, என்னால் உங்கள்வீட்டு நிம்மதி கெடக்கூடாது என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் சினத்தோடு.

 

“நீ உன் அண்ணனின் தங்கை என்கிற உரிமை. அவர் என் அக்காவுக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்தால் உண்டான உரிமை!” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.

 

“என்னது? என் அண்ணா நம்பிக்கை துரோகம் செய்தாரா? அப்போ உங்கள் அக்கா எதுவுமே செய்யவில்லையா? எதையுமே ஒழித்து மறைக்கவில்லையா?” என்று தன்னை மீறி அவள் கேட்டு முடிக்கமுதலே,

 

“ஏய்!” என்று சீறும் சிங்கமென அவள்முன்னால் ரவுத்திரமாக வந்து நின்றான் சத்யன்.

 

நடுங்கிப்போய் சோபாவோடு சோபாவாக அவள் ஒன்ற, அவளின் கையை பிடித்து இழுக்காத குறையாக மேலே தூக்கினான் அவன்.

 

அவள் முகத்தை தன்னருகே இழுத்து, “அக்காவைப் பற்றி ஏதாவது கதைத்தாய் என்றால் உன்னை தொலைத்துக் கட்டிவிடுவேன்!” என்று அவன் கர்ஜித்தபோது, நடுநடுங்கிப்போனாள் பவித்ரா.

 

error: Alert: Content selection is disabled!!