தனிமைத் துயர் தீராதோ 37 – 4

ஆனாலும், அவன் மட்டும் என் அண்ணாவை எப்படிக் குற்றம் சாட்டலாம் என்று கனன்றது மனது.

 

அது கொடுத்த உந்துதலில், “நீங்களும் என் அண்ணாவை பற்றிக் கதைக்காதீர்கள்!” என்றாள் அச்சத்தையும் மீறி.

 

“ஏன் கதைக்கக் கூடாது? வயிற்றில் குழந்தையோடு இருந்தவளை அம்போ என்று விட்டவரை பற்றி கதைக்கக் கூடாதா? பெரிய சீதனம் தருகிறாராம் சீதனம்! நான் கேட்டேனா? அல்லது காசு பணத்துக்காக உன்னைக் கட்டியதாக நினைத்தாரா? விசாவுக்காக மணந்த அவரைப்போல என்னையும் நினைத்தாரோ?”

 

அந்தக் கேள்வி அவளை கொதி நிலையின் உச்சத்துக்கே கொண்டுபோக, அவனை வெறுப்போடு நோக்கினாள் பவித்ரா. “அண்ணாவாவது விசாவுக்காக என்று நேரடியாக சொல்லி மணந்தார். உங்களைப் போல எதையும் ஒழித்து மறைக்கவில்லை. நாடகமாடவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை!” என்றாள் சூடாக.

 

உன் அக்காகூடத்தான் ஒழித்து மறைத்தாள் என்று வாய்வரை வந்ததை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டு, “என்னவோ நீங்கள் மட்டும் காதலில் கசிந்துருகி என்னைக் கட்டியது போலிருக்கே உங்கள் பேச்சு. அக்காவுக்காக என்னை மணந்தவருக்கு என் அண்ணாவை சொல்லிக்காட்டும் அருகதை இல்லை!” என்றாள் பவித்ரா, நெடு நாட்களாக தன் மனதை எரித்துக்கொண்டிருந்த கோபத்தை குரலில் காட்டி.

 

“உன்னைக் கைவிடாமல் கட்டியிருக்கிறேனே என்று அதுவரை சந்தோசப்படு. அந்த லக்ஷ்மியின் மகள் நீ என்கிற ஒரு காரணமே போதும் உன்னை நான் என்னவும் செய்ய. ஆனால் நான் என் அக்காவின் வளர்ப்பு. நெறி தவறமாட்டேன். அதனால் தப்பித்தாய் நீ!” என்று உறுமியவன்,

 

“அதற்காக என் அக்கா தங்கையின் விசயங்களில் நீ தலையிட்டால் உன்னை சும்மா விடுவேன் என்றுமட்டும் கனவிலும் நினையாதே! மறுபடியும் மீளவே முடியாத அளவுக்கு செய்துவிடுவேன்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு வாசலை நோக்கி சென்றவன், வாசலில் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.

 

மனதில் மண்டிய வெறுப்பை விழிகளில் தேக்கி அவனை அவள் முறைக்க, அதனால் சற்றும் பாதிப்படையாமல், “உன் அண்ணாவிடம் அவர் தந்த சீதனம் மண்ணாங்கட்டி எல்லாவற்றையும் திருப்பி வாங்கிக்கொள்ளச் சொல். அவருடைய காசு பணம் இங்கே யாருக்கும் தேவையில்லை.” என்றான்.

 

“அதை அவரிடமே சொல்லுங்கள்!” என்றாள் அவள் எடுத்தெறிந்த குரலில்.

 

“ஏன்? சொல்லமாட்டேன் என்று நினைப்போ உனக்கு? சொல்கிறேன். கட்டாயம் சொல்கிறேன்.” என்றவன், அடுத்த அறைக்குள் புயலெனப் புகுந்து கதவடைத்துக் கொண்டான்.

 

சோர்ந்துபோய் தொப்பென்று சோபாவில் விழுந்தவளின் நெஞ்சமெல்லாம் கசந்து வழிந்தது.

 

 

இங்கே கீதன், தன்னுடைய அறையில் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். மித்ராவின் வருகைக்காகக் காத்திருந்தான்.

 

மகன் விளையாடிவிட்டு மேசையில் அப்படியே போட்டுவிட்டுச் சென்ற ‘பில்டிங் ப்ளாக்ஸ்’ களை கைகள் எடுத்து அடுக்கினாலும் செவிகள் திறக்கப்போகும் கதவின் அருகிலேயே காத்திருந்தது.

 

அவன் மனதை அழுத்தும் அத்தனை சுமைகளையும் அவளிடம் கொட்டவேண்டும். அவள் மனதில் இருக்கும் துன்பங்களை பொறுமையாகக் கேட்டு அகற்றவேண்டும். தான் செய்த தப்புக்களை எல்லாம் அவளிடம் சொல்லி, ஆறுதல் தேடவேண்டும். நிம்மதியாகக் கண்மூடி உறங்கவேண்டும்!

என்றெல்லாம் எண்ணிக்கொண்டு அவனிருக்க, அவளும் வந்தாள். தூங்கிவிட்ட மகனைக் கைகளில் ஏந்திக்கொண்டு. வேகமாக வந்து மகனைத் தான் வாங்கினான்.

 

“என்னிடம் சொல்லியிருக்க நான் வந்து தூக்கியிருப்பேனே. வித்தியோடு இருக்கிறான் என்றுவிட்டுத்தான் பேசாமல் வந்தேன்.” என்றவன், மகனின் தூக்கம் கெடாமல் கட்டிலில் கிடத்தினான்.

 

போர்வையை போர்த்திவிட்டு நிமிர்ந்தவள், அவனைப் பாராமல் தயக்கத்தோடு கதவை நோக்கி நடந்தாள். கதவடைக்கப் போகிறாள் என்று அவன் நினைக்க, வாசலையும் தாண்டி தன் பாதத்தை தூக்கி அவள் வைக்க, “மித்து..” என்று அவசரமாக அழைத்தான் கீர்த்தனன்.

 

தேகத்தில் ஒருவித நடுக்கம் ஓட, ஒரு கையால் நிலையை பற்றி தன்னை சமாளிக்க முயன்றாள் மித்ரா. தனக்குள் தோன்றிய கலக்கத்தை மறைக்க முயன்றபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

“எங்கே போகிறாய்?” ஒரு அவசரத்தோடு கேட்டான் கீர்த்தனன்.

 

“உ..உறங்க..”

 

“அப்போ சந்து?”

 

“அவன் உங்களோடு உறங்கட்டும்.”

 

“இரவில் எழுந்தால்?”

 

“எழும்பமாட்டான்..”

 

மறைமுகமாக அவளைத் தடுக்க முயன்றவனின் முயற்சிகளை புரிந்துகொண்டு பதில் சொல்லும் மனைவியையே சற்றுநேரம் வெறித்தான் கீர்த்தனன்.

 

அவளோ, தன் விழிகளை தழைத்துக்கொண்டாள்.

 

அன்று காலையில் இருந்து அவளோடு தனியாகப் பேச அவன் காத்திருப்பதை பல தடவைகள் உணர்த்திவிட்டான். தன்னுடைய மனமாற்றத்தை கூட இயன்றவரை இலைமறை காயாகக் காட்டிவிட்டான். அப்படியிருந்தும் இப்படி நடக்கிறாளே.

 

“இங்கேயே படேன்.” தவிப்பை காட்டாதிருக்க முயன்படி சொன்னான்.

.

“அ..அங்கே வித்யா தனியாக இருக்கிறாள்.” என்றாள் மனைவி.

 

“இந்த வீட்டில் வித்யா எத்தனையோ நாட்கள் இரவில் தங்கியிருக்கிறாள், அவளுடைய அறையில் தனியாக.” தனியாக என்பதை அழுத்திச் சொன்னான் அவன்.

 

கீழுதட்டைப் பற்களால் பற்றியபடி அவள் தலையைக் குனிய, அவளையே பார்த்தபடி நின்றான் கீர்த்தனன்.

 

தன் மனதை அறியாதவளுக்கு வார்த்தைகளால் புரியவைக்கலாம். ஆனால், தெள்ளத் தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிந்து வைத்திருக்கிறவளை என்ன செய்வது?

 

மெல்லிய கோபம் கூட எழுந்தது. அடக்கிக்கொண்டான்.

 

error: Alert: Content selection is disabled!!