இனியும் அவள் மனதை நோகடிக்கக் கூடாது என்று எடுத்திருந்த முடிவு நினைவில் வர, அதோடு, அவளும் அவனை விட்டு எங்கே போய்விடப் போகிறாள் என்கிற எண்ணமும் சேர்ந்துகொள்ள, “சரி, போ.” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல்.
விட்டால் போதும் என்று ஓடிப்போனாள் மித்ரா. அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றான் கீர்த்தனன்.
எதற்காக இந்த ஓட்டம்? அவளை என்ன செய்து விடுவானாம்? அவன் எதிர்பார்த்தது என்ன? அவளிடம் தன் மனதைக் கொட்டி, ஆத்திரத்தில் செய்த தவறுகளுக்கு மன்னிப்பை வேண்டி, அவள் மனதில் இருக்கும் கலக்கங்களை போக்கிவிட வேண்டும் என்பதுதானே.
அதன்பிறகு, அவளின் பூக்கரம் பற்றி, நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதுதானே!
சத்யன் பவித்ரா வாழ்வு சீராகாமல் அவனாலும் மனைவியோடு ஒன்றிவிட முடியாதுதான். அதைவிட அவனுக்கும் அதற்கெல்லாம் காலமும் நேரமும் தேவைப் படுகிறதுதான். அதற்காக, அருகருகே அமர்தல், ஒரு கரம் பற்றுதல், மனம் விட்டுப் பேசுதல்.. இது எல்லாமா கூடாது?
ப்ச்..! எதிர்பார்த்து ஏமாந்த மனம் சிணுங்கிக்கொண்டே இருந்தது. அவன் பார்வை மகனிடம் சென்றது.
அவர்களுக்கு பாலமாக அவன் இருக்கிறான். அவர்களின் எதிர்காலம் பரந்து விரிந்து கிடக்கிறது. இன்றில்லாவிட்டால் நாளை பேசிக் கொள்ளலாம். நாளை வித்யா போய்விடுவாள். பிறகு யாரைக் காரணம் காட்டுவாளாம்?
இதழ்களில் பூத்த புன்னகையோடு மகனின் அருகில் படுத்தவன், அப்படியே மனைவியையே உரித்துப் படைத்துப் பிறந்திருந்த மகனை ஒரு பூவை அணைப்பதுபோல் அணைத்துக்கொண்டு உறங்கிப் போனான்.

