தனிமைத் துயர் தீராதோ 38 – 4

மனைவியை கண்டதும் வியந்துபோய் பார்த்தான். அதுவரை தன்னுடனான பேச்சுக்களை, தனிமைகளை சாதுர்யமாகத் தடுத்தவள், இன்று தன்னைத் தேடிவந்த காரணம் என்ன என்கிற யோசனை உள்ளே ஓட அவளைப் பார்த்தான்.

 

மித்ரவுக்கோ பேசவந்த விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட, ‘எங்கே போகிறார்?’ என்கிற கேள்வி எழுந்தது.

 

“ஆபிசில் கொஞ்சம் வேலையிருக்கும்மா.” என்றான் வேல்விழிகள் விடுத்த வினாவுக்கு விடையாக.

 

தலையசைத்து கேட்டுக்கொண்டவள் தான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தயங்கி நின்றாள்.

 

முகம் மென்மையுற அவளை நெருங்கி அவளின் இரு கரங்களையும் பற்றி “என்ன மித்து?” என்று கேட்டான் கணவன்.

 

“அது… அதுவந்து.. சத்தி சின்னப்பிள்ளை.. அவனுக்கு ஒன்றும் தெரியாது..” குனிந்ததலை நிமிராது அவள் இழுக்க, அவன் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

 

“என்மேல் இருக்கிற அன்பில் என்னென்னவோ செய்கிறான். அவன் மீது கோபப்படாதீர்கள் ப்ளீஸ்.. அன்பாகச் சொன்னால் கேட்டுக்கொள்வான்.”

 

கெஞ்சிக் கேட்டவளை அப்படியே அள்ளியெடுத்து கொஞ்சத் துடித்த மனதை அடக்கியவனுக்கு, அவள் பேச்சில் இருந்த, ‘நீ அவனிடம் அன்பாக எடுத்துரைக்கவில்லை’ என்கிற மறைமுகக் குற்றச் சாட்டில் முறுவல் அரும்பியது.

 

அதேநேரம், ‘எப்பவும் கூடப் பிறந்தவனுக்கு ஒன்று என்றால் மட்டும் ஓடி வருகிறாயே கட்டின புருஷன் ஏங்கிப்போய் கிடக்கிறானே. அவன்மீது கொஞ்சமாவது மனம் வச்சியாடி’ என்று செல்லமாக சண்டையிட்டது அவன் மனது.

 

அவனிடமிருந்து பதிலின்றிப் போகவும் மெல்ல விழிகளை உயர்த்தியவள், உதட்டில் உறைந்த சிரிப்போடு விழிகளில் நேசம் பொங்க நின்றவனிடமிருந்து தன் பார்வையை அகற்ற முடியாமல் திணறினாள்.

 

அதை உணர்ந்தவனின் கண்களும் சிரித்தது. பார்க்கலாம்! இன்னும் எத்தனை நாட்களுக்கு உன் புறக்கணிப்பு போராட்டம் என்று!

 

“நீ சொல்லித்தான் அவனைப் பற்றி எனக்குத் தெரியவேண்டுமா மித்து?” என்று கனிவோடு கேட்டான்.

 

“பிறகு.. பிறகு ஏன் இன்று கோபமாகப் பேசினீர்கள்? அவன் முகமே வாடிவிட்டது. சொல்வதை பொறுமையாகச் சொல்லியிருக்கலாமே.” என்று விடாமல் அவள் கேட்டபோது, வெண்பற்கள் பளீரிடச் சிரித்தான் கீர்த்தனன்.

 

“உங்கள் இருவரின் பாசத்துக்கு அளவே இல்லையா? அக்காவுக்காக தம்பியும், தம்பிக்காக அக்காவும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து என்னைப் போட்டு படுத்துற பாடு இருக்கே.. அம்மாடி கொஞ்ச நஞ்சமில்லை!” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.

 

அவன் பேச்சில் இருந்த உண்மையில் அவள் முகத்திலும் புன்னகை அரும்பியது.

 

“ஆனால், திட்டமிட்டு பவியின் வாழ்க்கையில் விளையாடியது மன்னிக்கக் கூடிய விசயமில்லையே மித்து. அதைக் கண்டிக்க வேண்டாமா?” என்று கனிவோடு கேட்டான் கீர்த்தனன்.

 

“தப்புத்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நீங்கள் எப்படி பவிக்காக என்னைக் கட்டினீர்களோ அதேபோல் அவனும் எனக்காக இப்படி நடந்துவிட்டான். அதற்காக அவனை கடைசிவரை ஒதுக்கிவிடாதீர்கள். தாங்கமாட்டான்.” என்று அவள் சொன்னபோது, நம்பமுடியாமல் மனைவியை வெறித்தான் கீர்த்தனன்.

 

அவள் என்னவோ அதை இயல்பாகத்தான் சொன்னாள். ஆனால், ஈட்டியால் குத்தியது போன்று அவன் நெஞ்சை ஆழமாகப் பதம் பார்த்தது அவளின் வார்த்தைகள்.

 

அதுவரை இருந்த மலர்ச்சி மறைந்து, கணவனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் திகைத்து விழித்தாள் மித்ரா.

 

“எ..என்ன?” திக்கித் திணறி அவள் கேட்க,

 

“பவிக்காகத்தான் உன்னை மணந்தேன் என்று நீயும் நினைக்கிறாயா?” என்று மரத்த குரலில் கேட்டான் அவன்.

 

“பி..பின்னே?” தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்தவளுக்கு, அவன் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவள் நெஞ்சைப் பிசைந்தது.

 

சட்டென தன் பார்வையை விலக்கி, கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த வானை வெறித்தான் கீர்த்தனன். “நீயே காரணத்தை கண்டுபிடித்துவிட்டாயே. வேறென்ன?” என்றான் வறண்ட குரலில்.

 

அதைக் கேட்டவளின் மனதில் சுரீர் என்று வலித்தது. அவனே சொல்லிவிட்டானே,அவளை மணந்ததற்கான காரணத்தை!

 

தொண்டைக்குழி அடைக்க, “சீதனமும்…” என்று அவள் ஆரம்பிக்க, “இந்தப் பேச்சு இனி இங்கே வரக்கூடாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன் மித்ரா!” என்றான் கடினப்பட்டு குரலில்.

 

அதிர்ந்துபோய் பார்த்த மனைவியின் பார்வையை சட்டை செய்யாது அறையை விட்டு வெளியேறியவன் அதே வேகத்தோடு வீட்டிலிருந்தும் வெளியேறினான்.

 

 

error: Alert: Content selection is disabled!!