தனிமைத் துயர் தீராதே 39 – 1

அன்று கீதன் வீட்டுக்கு திரும்பியபோது இரவாகியிருந்தது. வெட்டிமுறித்த வேலைகளால் சோர்ந்துபோயிருந்தான். வீட்டின் கதவைத் திறந்தவனுக்கு, காத்திருந்த மனைவியை கண்டபோது சோர்வெல்லாம் பறக்க மனதில் மகிழ்ச்சி குமிழியிட்டது.

 

சொல்லாமல் கொள்ளாமலே அவர்களின் ஆரம்பகால வாழ்க்கைக்கு மனம் சிறகுவிரித்துப் பறக்க, அன்று காலையில் அவர்களுக்குள் நடந்த சின்ன உரசலை மறந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

 

கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே, காலையில் நடந்ததை இன்னும் நினைவில் வைத்துக் கோபமாக இருக்கிறானோ என்கிற கவலையோடு மித்ரா அவனைப் பார்க்க, அவன் சிந்திய புன்னகை அவள் மனதை சாந்தப் படுத்தியது.

 

“வித்தி வந்துவிட்டாளா?” என்று கேட்டுக்கொண்டே கதவை சாத்தினான்.

 

“அம்மா வீட்டுக்கு போய்விட்டாளாம்.”

 

“பவியும் சந்துவும் எங்கே?” கண்களால் அவர்களை தேடிக்கொண்டே அணிந்திருந்த ஷூக்களை கழட்டினான்.

 

“தம்பி தூங்கிவிட்டான். பவி களைப்பாக இருக்கிறது, படுக்கப் போகிறேன் என்றுவிட்டு மேலே போய்விட்டாள்.”

 

“மேல் வீட்டிலா?” என்றவனுக்கு, சத்யனும் இல்லாமல் அங்கே ஏன் தனியாக இருக்கிறாள் என்கிற யோசனை ஓடியது.

 

சட்டை பட்டன்களை ஒரு கையால் கழட்டிக்கொண்டே அறையை நோக்கி நடந்தவனிடம், “சாப்பாடு போடட்டுமா?” என்று கேட்டாள் மித்ரா.

 

“ம்.. போடு. பவியும் நீயும் சாப்பிட்டாச்சா?”

 

மறுப்பாக தலையசைத்தாள் அவன் மனைவி. “இன்னும் இல்லை. சாப்பிடச் சொல்லி பவியை கேட்டேன். மாலைத் தேநீரோடு சாப்பிட்ட பலகாரமே போதும் என்றாள். ஆனால், பலகாரமும் பெரிதாக அவள் சாப்பிடவில்லை.”

 

“ஓ..” என்றவனின் நடை நின்றது.

 

“நீ மூவருக்குமாக சாப்பாட்டை போடு. நான் பவியை கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றவன், திரும்பி கதவை திறந்துகொண்டு மேல்மாடிக்கு படியேறினான்.

 

மித்ரா சமையலறைக்குள் நுழைந்து உணவுகளை சூடு காட்டி மேசையில் எடுத்துவைக்கத் தொடங்கினாள்.

 

அங்கே மேல்மாடியில் வீட்டுக்குள் கீதன் நுழைந்தபோது, இருள் கவிழ்ந்த மயான அமைதியில் இருந்த வீடே அவனை வரவேற்றது. அதற்கிடையில் தூங்கிவிட்டாளா என்று யோசித்தபடி, சத்தமில்லாமல் ஹால் விளக்கை உயிர்ப்பித்தான்.

 

அங்கே அவன் கண்ட காட்சியில் ஒருகணம் உறைந்துபோனான் கீர்த்தனன்.

 

ஆள் அரவமற்ற வீட்டுக்குள், வெளிச்சம் சிறிதுமின்றி அநாதரவான நிலையில் சோபாவில் சுருண்டு படித்திருந்தாள் பவித்ரா. உறங்கிப் போயிருந்தவளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்ததற்கான தடங்கள் தெரிந்ததில், அண்ணனாய் துடித்துப் போனான்.

 

“பவிம்மா..” என்றபடி அவளிடம் விரைந்தான்.

 

திடீரென ஒளிர்ந்த விளக்கு வெளிச்சத்திலும், தமையனின் குரலிலும் அலைப்புற்றிருந்த மனதோடு ஆழ்ந்து உறங்கமுடியாமல் கண்ணயர்ந்திருந்த பவித்ரா, சட்டென எழுந்து அமர்ந்தாள்.

 

வெளிச்சம் கண்களை கூசச் செய்ய இமைகளை மூடித்திறந்து, தமையனை ஏறிட்டாள்.

 

அவளருகில் அமர்ந்து, “என்னம்மா? ஏன் சாப்பிடாமல் இங்கே வந்து படுத்திருக்கிறாய்?” என்று கனிவோடு கேட்டான் கீர்த்தனன்.

 

“பசியில்லை அண்ணா..” அவன் முகம் பாராமல் சொன்னாள்.

 

“அதெப்படி பசிக்காமல் இருக்கும்?”

 

பதில் சொல்லாமல் தலையை குனிந்துகொண்டு அவள் இருக்க, “பட்டினி கிடப்பது போதாது என்று இங்கே வந்து அழுதுகொண்டு இருக்கிறாயா?” என்று கேட்டான் தமையன்.

 

அந்தக் கேள்வியே நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கும் வேதனையை கிளறிவிட, “இல்லையே.. நான் அ..அழவில்லையே..” என்றபோதே அவள் கண்களை கண்ணீர் நிறைத்தது.

 

“என்னம்மா இது? எதற்கு இந்த அழுகை? சொன்னால் தானே அண்ணாவுக்கு தெரியும். ம்?” என்று கனிவோடு கேட்டு அவளின் தலையை இதமாகத் தடவிக்கொடுத்த போது, மீண்டும் அவள் விழிகள் உடைப்பெடுத்தது.

 

சின்ன விம்மலுடன் தமையனின் தோள் சாய்ந்தவள், “சாரிண்ணா. எப்போதுமே என்னால் உங்களுக்கு நிறையக் கஷ்டம்.” என்றாள் அழுகையோடு.

 

“கஷ்டமா? அதுவும் உன்னால்? கிடையவே கிடையாது. உள்ளதைச் சொல்லப்போனால் இப்போதுதான் நான் சந்தோசமாக இருக்கிறேன். திரும்பவும் நாம் எல்லோரும் ஒன்றாகிவிட்டோம். உன்னையும் நல்லவன் ஒருவனிடம் கைப்பிடித்துக் கொடுத்துவிட்டேன். இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு.” என்று கேட்டான் தமையன்.

 

அவன் தோளில் இருந்து நிமிர்ந்து, “என்னை சமாதானப்படுத்துவதற்காக பொய் சொல்லாதீர்கள் அண்ணா. அவர், என்னை பகடைக்காயாக வைத்துத் தானே உங்களை ஆட்டுவிக்கிறார். இன்று காலையில் ஜான் பேசியதில் உங்கள் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்று எனக்குத் தெரியும் அண்ணா. அதற்கெல்லாம் காரணம் நான் தானே. அவர் இப்படியானவர் என்று எனக்குத் தெரியாமல் போச்சுண்ணா. தெரிந்திருக்க விரும்பியே இருக்க மாட்டேன் அவரைப்பற்றி நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது..”

 

error: Alert: Content selection is disabled!!