தனிமைத் துயர் தீராதோ 39 – 2

உள்ளூரத் திடுக்கிட்டான் கீர்த்தனன். இந்த வெறுப்பு ஆரோக்கியமானது அல்லவே!

 

அதோடு, அவனுக்கும் சத்யனுக்குமான பிரச்சனை பவித்ராவை இவ்வளவு தூரத்துக்கு பாதித்திருப்பதையும், வெறுப்பை உண்டாக்கியிருப்பதையும் ஒரு அதிர்வோடு உணர்ந்தவன், தான் சதயனிடம் கவனமாக இருக்கவேண்டியதை குறித்துக்கொண்டான்.

 

“இதென்ன பேச்சு பவி? இப்படி நீ வெறுக்கும் அளவுக்கு அவன் என்னதான் செய்தான்?”

 

கலங்கிச் சிவந்திருந்த அவள் விழிகளில் கோபம் குடிவந்தது. “என்னை கட்டிக்கொள்ள அவர் விதித்த நிபந்தனை, இன்று காலையில் உங்களிடம் பேசிய விதம் எல்லாம் சரியா?”

 

“நிச்சயமாகச் சரி. ஒரு அக்காவுக்குத் தம்பியாக அவன் செய்தது மிகச் சரியே!” என்ற தமையனை குழப்பத்தோடு பார்த்தாள் பவித்ரா.

 

“என் மனம் மாறியது அவனுக்குத் தெரியாது. தன் தமக்கையை இன்னும் நான் கண்ணீர் வடிக்க வைக்கிறேன் என்கிற கோபம். சந்து அங்கும் இங்குமாக அல்லாடுகிறான் என்கிற கவலை. இதெல்லாம் தான் அவனை அப்படி நடக்க வைத்திருக்கிறது. காலைப்பேச்சு.. நான் எப்படி ஒரு அண்ணாவாக இருந்து உனக்கு சீதனம் தந்தேனோ அதே மாதிரி அவன் கேட்டான். அவ்வளவு தானே?” என்றான் தமையன் இலகுவாக.

 

“ஆனால்… ஆனால்.. அண்ணா.. என்னைக் காதலிப்பதாக.. ந..நடித்தது?” மேலே பேச்சு வராமல் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

 

“நிச்சயமாக அது தப்புத்தான்!” என்று அவனும் அதை ஒத்துக்கொண்டபோது, தன்னுடைய இழப்பும் ஏமாற்றமும் பலமடங்காகத் தோன்ற, பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது அவளுக்கு.

 

“ப்ச்! இதென்ன பவி தொட்டதற்கும் கண்ணீர் வடிக்கும் பழக்கம்?” என்று அதட்டி, அவள் அழுவதை நிறுத்தினான் தமையன்.

 

சற்று அவள் தெளிந்ததும், “அவன் செய்தது பிழையாக இருந்தாலும் ஏன் செய்தான் என்று யோசி. அதற்குக் காரணம் என்ன? அவன் தன் அக்காமேல் வைத்த பாசம். அவளை சந்தோசமாக வாழவைக்க வேண்டும் என்கிற வைராக்கியம். அதற்காக எதையும் செய்யத் தயங்காத ஒப்பற்ற அன்பு. இதெல்லாம் எவ்வளவு நல்ல குணங்கள் சொல்லு? அந்தப் பாசமும் அன்பும் உனக்குக் கிடைத்தால்? அதை நீ பெற்றுக்கொண்டால்? உன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிம்மா.” என்று பொறுமையாக அவளுக்கு எடுத்துரைத்தான் கீர்த்தனன்.

 

அந்த அன்பு எனக்கும் கிடைத்தால்? உள்ளம் அதற்காக ஏங்க, “அக்காமேல் பாசம் என்பதற்காக மற்ற எல்லோர் மனதையும் நோகடிக்கலாமா?” என்று தொண்டையடைக்கக் கேட்டாள் அவள்.

 

அந்தக் கேள்வியில் இருக்கிற நியாயம் புரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான் தமையன்.

 

“அவர்கள் மூவருமே சின்ன வயதில் இருந்தே ஒருவருக்கு மற்றவர் தான் துணை என்று வாழ்ந்தவர்கள் பவி. அந்தப் பற்றுதல் தான் இதற்கெல்லாம் காரணம். அதே அன்பை உன்மேலும் அவன் வைக்கவேண்டும். அதற்கு ஏற்றவாறு நீதான் நடக்கவேண்டும். நடந்து உன் அன்பை அவனுக்கு புரியவை. அது உன் கடமையும் தானே.”

 

முதலிரவன்று நடந்ததை எண்ணியவள், “அவராவது என் அன்பை புரிந்து கொள்வதாவது?” என்றாள் விரக்தியோடு.

 

“இந்த விரக்திக்கும் வெறுப்புக்கும் அவசியமே இல்லை பவி. வாழ்க்கை என்றால் நாம் நினைக்கிற மாதிரியே எல்லாம் இருந்து விடுமா? நமக்கு பிடித்தமாதிரி வாழ்க்கை வேண்டும் என்றால் அதற்குப் போராட வேண்டும். போராடி வெல்ல வேண்டும்! இப்படியே அவன் ஒருபக்கம் நீ ஒருபக்கம் என்று இருந்தால் உங்கள் இருவரினதும் வாழ்க்கை என்னாகும்? அம்மா அப்பாவை எதிர்த்து, கவியின் பேச்சையும் கேட்காமல் நீ அவனை விரும்பினாய் என்கிற ஒரே காரணத்துக்காக இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறேன். இதில் ஏதாவது சிக்கல் வந்தாலோ, நீ இந்த வாழ்க்கையில் தோற்றுப் போனாலோ அம்மாவும் அப்பவும் என்னைத்தான் குறை சொல்வார்கள். அவர்கள் சொன்னதுபோல் நடந்துவிட்டது பார்த்தாயா என்பார்கள். இதற்குத்தான் நீ ஆசைப் படுகிறாயா?” என்று கேட்டான் தமையன்.

 

திரும்பவும் அவளால் அண்ணாவுக்கு ஒரு கெட்டபெயர் கிடைப்பதா? கூடாது என்றது மனது!

 

“இந்த அண்ணாவுக்கு நீ ஏதாவது செய்ய நினைத்தாய் என்றால் சத்தியோடு சேர்ந்து உன் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து காட்டு. அவன் மனதில் இடம் பிடித்துக் காட்டு.” என்றான் தமையன்.

 

தங்கையின் முகத்தில் உடனேயே தெளிவு வராதபோதும், அவள் முகத்தில் தோன்றியிருந்த யோசனையே அப்போதைக்கு போதுமானதாக இருந்தது கீர்த்தனனுக்கு.

 

சின்னப் பெண்ணான அவளை சத்யனின் செயல் எந்தளவு தூரத்துக்கு காயப்படுத்தி இருக்கும் என்பதை அவன் அறிவான். காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு காலம் நிச்சயம் தேவைப்படும்.

 

error: Alert: Content selection is disabled!!